× Photographs படம் வளர்ந்த கதை வாசகர் கார்ட்டூன்கள் Contact Us

இதுவரை மொத்தம் ஏழு நபர்களிடம் மட்டுமே நானாக வலியச் சென்று ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறேன். அதிலும் கார்ட்டூன்கள் வரைந்து கையெழுத்து வாங்கியது மூன்று பேர்களிடம்தான்! முதலாவது, கார்ட்டூனிஸ்ட் R.K. லஷ்மண். ஜனவரி 24, 1994 சென்னையில் உள்ள ஹோட்டல் சவேராவில் 21– ம் நூற்றாண்டு எப்படி இருக்கும் என்று பேசினார். அவரை Spot Sketch செய்து, என்னைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்துடன் அவரிடம் ‘ஆட்டோகிராஃப் ப்ளீஸ்’ என்று நீட்டினேன். அவரோ ஒன்றுக்கு நாலு கையெழுத்துப்போட்டுத் தந்தார்! எனக்கு இது பெரும் இன்ப அதிர்ச்சியைத் தந்தது என்பதை இங்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

இரண்டாவது நடிகர் ரஜினிகாந்த், மூன்றாவது சுப்பிரமணியன் சுவாமி. ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலம் 1991 – 96 (1st Term). ஊழல்களும் அராஜகமும் கட்டுக்கு அடங்காமல் அரங்கேறிக்கொண்டிருந்த காலம். கிட்டத்தட்ட அந்த காலம் முழுக்க நான் துக்ளக்கில் கார்ட்டூன்கள் வரைந்து வந்தேன். அ.தி.மு.க ஆட்சியை அகற்றியே தீர்வதென சோ சார் தீவிர முயற்சியில் இறங்கி வேலை செய்தார். ரஜினியும் சுப்பிரமணியன் சுவாமியும் அக்கால கட்டத்தில் அடிக்கடி துக்ளக் அலுவலகம் வந்து சோ சாரை சந்திப்பது வழக்கமாகவே மாறிவிட்டிருந்தது.

சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா மீது வழக்குத் தொடுத்தார். ‘மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ – என்று ரஜினி அன்று பேசிய பேச்சு, தமிழக அரசியல் அறிந்தவர்கள் யாராலும் மறக்க முடியாதது! அப்போது ரஜினியும் சுவாமியும் எனது கண்களுக்கு மாவீரர்களாகவே தெரிந்தனர். துக்ளக் அலுவலகத்தில் சோ சார் முன்னிலையில் வாங்கியதுதான் அந்த இரண்டு ‘ஆட்டோகிராஃப்’ களும்.

கையெழுத்து வாங்கி ஒரு வருடம்கூட ஆகவில்லை, சுவாமியை விமர்சித்து துக்ளக்கிலேயே கார்ட்டூன் போட வேண்டிய துரதிருஷ்டத்தை சுவாமியே ஏற்படுத்திக் கொடுத்தார். (பார்க்க துக்ளக் அட்டைப்படம்!) பிற்காலத்தில் ரஜினியையும் பல கார்ட்டூன்களில் விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால், தினமணிக்கு வந்த பிறகு,சுமார் 10 – 12 வருடங்களுக்குப் பிறகு! சோ சாரிடம் நன்றாகவே நெருங்கிப் பழகியிருக்கிறேன். துக்ளக்கில் சில வருடங்கள் கார்ட்டூனிஸ்ட்டாகவும் இருந்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஏனோ தோன்றவில்லை. தினமணிக்கு வந்த பிறகுதான் தோன்றியது. அவரிடம் சென்று கேட்டேன்! அவருடைய ‘மகாபாரதம் பேசுகிறது’ புத்தகத்தில் கையெழுத்துப் போட்டு தந்தார்.

பிறகு டாக்டர் அப்துல்கலாம். அவருடனான முதல் சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தில் எனது வேண்டுகோளுக்கிணங்க கையெழுத்து இட்டு அனுப்பினார். மேலும், ஒரு ஆட்டோகிராஃப்! ஏப்ரல், 2008 எனது ‘அடடே’ பாக்கெட் கார்ட்டூன்களின் ஆறு தொகுப்புகளையும் வெளியிட்டுப் பேசினார். அவர் பேசி முடித்ததுமே அவருடைய பேச்சு Hard Copy–ஆக எனது கைகளில் கொடுக்கப்பட்டது. ராக்கெட் விஞ்ஞானியாச்சே! அவருடன் வந்திருந்த Team–ம் அவ்வளவு வேகமாகச் செயல்பட்டது!

மீண்டும் ஒருமுறை கலாம் சாரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அன்று அவர்கள் தந்த அந்த Speech Copy–யில் அவரது கையெழுத்தை வாங்கிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்! அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தபோது ‘சார் இது உங்களது பேச்சு! முதல் பக்கத்தில் கையெழுத்திட்டுத் தந்தால் மகிழ்ச்சி அடைவேன்’ என்றேன்! ‘கொடுங்களேன்’ என்று வாங்கியவர் ‘To my Dearest Mathi, Greetings APJ.Abdul Kalam’ என்று கையெழுத்துப் போட்டுத் தந்தார்! ‘தாங்க் யூ சார். உங்கக்கிட்ட கையெழுத்து மட்டும்தான் எதிர்பார்த்தேன். ஆனா, என்னை ‘Dearest’ என்று குறிப்பிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்குது சார்’ என்றேன். ‘என்ன சந்தேகம்? You are always my dearest!’ என்றார்! அவர் அன்று போட்டுத் தந்த கையெழுத்து வெறும் தாளில் அல்ல, எனது இதயத்திலேயே போட்டுத் தந்தது மாதிரி இன்றும் உணர்கிறேன்!

மேலும் இரண்டு ‘ஆட்டோகிராஃப்’கள்! ஒன்று அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களிடம் வாங்கியது! மற்றொன்று, வி.கல்யாணம் அவர்களிடம்! நா.மகாலிங்கம் காந்திஜி–யின் பக்தராகவே வாழ்ந்தவர். வி.கல்யாணம், 1943 முதல் காந்திஜியின் இறுதிநாள் வரை அவரிடம் காரியதரிசியாகப் பணிபுரிந்தவர்! மாதச் சம்பளம் ரூ.250 வாங்கும் அரசுப் பணியை (1943–ல்!) உதறிவிட்டு, வெறும் ரூ.40 சம்பளத்திற்கு காந்திஜியிடம் காரியதரிசியாகப் பணியில் சேர்ந்தவர் வி.கல்யாணம் அவர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படி ஒரு சிலர் இன்றும் நாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பதால்தான் அவ்வப்போது மழை பெய்துகொண்டிருக்கிறதோ என்னவோ?!

மேலும் >>