கார்ட்டூன் என்பது நடக்கும் சம்பவங்களை உணர்ச்சிகரமாகப் பார்த்து, அதைத் தன் உள்வாங்கி கற்பனைத் திறத்துடன் கலந்து, காண்போர் உள்ளத்தில் புன்னகையை வரவழைத்து, அந்தக் கருத்தின் ஆழத்தைச் சித்திரத்துடன் இரண்டு வரிகளில் குறுகத் தரித்த குறள்போல் வெளிப்படுத்த நூறாயிரத்தில் ஒருவருக்குத்தான் ஆண்டவன் அருள் புரிவான். அந்த அருள், பூரணமாக மதிக்கு, மதிக்கத்தக்க வகையில் கிடைத்திருக்கிறது.
-டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
கார்ட்டூன் என்பது கோபம் கொள்ள வேண்டிய, கொதித்துக் குமுறி அழ வேண்டிய, அவமானத்தால் குமைந்து சாம்பிச் சாக வேண்டிய பலசமூக அவலங்களைப் பார்த்து ஒரு கண் சிமிட்டலுடன் இவற்றோடு சம்பந்தமற்ற ஒரு Objectivity-யுடன் ஒரு கருத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிற ஒரு சாகசக் கலை இது. நானறிந்தவரை நம் காலத்தில் இந்தக் கலையில் தேர்ந்தவராகவும் எதிர்காலத்தில் எண்ணற்ற சாதனைகளைப் புரியும் நம்பிக்கையைத் தருபவராகவும் எனது கண் முன்னால் அடையாளம் காட்டவும் சிபாரிசு செய்யவும் இதோ ஒருவர் இருக்கிறார் என்றால், அவரே இந்த திரு. மதி.
- த.ஜெயகாந்தன்
திரு. மதி அவர்களின் அரசியல் மற்றும் சமூக விமர்சனம் சார்ந்த கேலிச் சித்திரங்களை பல வருடங்களாக கவனித்து வருகிறேன். அவை பார்த்த மாத்திரத்தில் விமர்சனக் கருத்துகளை நான் உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னரே என் மனதுடன் நெருக்கம் கொண்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. இதற்குக் காரணம், அவரது காட்சிப் பரிமாணமே இன்றைய தமிழ் வாழ்வின் பின்னணியுடன் கொண்டிருக்கும் இணக்கம்தான். மதியின் கேலிச் சித்திரங்கள் கோப, தாபங்களுக்கு அப்பாற்பட்டவை. இவருடைய விமர்சனங்களில் விருப்போ பகை உணர்ச்சியோ இருப்பதில்லை.
-சுந்தர ராமசாமி
என் நீண்ட ஆயுள் காரணமாக நான் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கார்ட்டூன் கலைஞர் டேவிட் லோ படங்களிலிருந்து இன்றைய மதி வரை கார்ட்டூன்களைப் பார்த்திருக்கிறேன். நகைச்சுவை, அரசியல், விமர்சனம் எல்லாருக்கும் பொதுதான். ஆனால் மதியுடைய நாட்டுப்பற்றும் மக்கள்பற்றும் எல்லாரிடமும் காணக் கிடைக்கவில்லை. இந்த ஒரு அம்சம்தான் மதியின் படங்களுக்கு ஒரு விசேஷப் பரிமாணம் தருகிறது. அவருடைய படங்களில் உள்ள சத்திய தரிசனம் அபூர்வமானது.
-அசோகமித்திரன்
என்னைப் பொறுத்தவரை, மதியின் கருத்துப் படங்கள், "புதுநெறி காட்டிய புலவன்' மகாகவி பாரதியின் விடுதலைக் கண்ணோட்டத்தில், வீறுமிக்க படைப்பாற்றலுடன் திகழ்பவை; இன்றைய காலகட்டத்தில், கருத்தளவிலும் கலையுலகிலும், உலகத் தரத்தை மதியின் கார்ட்டூன்கள் எட்டிவிட்டன; அவர் ஒரு முதல் தரமான "மக்கள் கலைஞர்'.
- தி.க.சி
பாரதியின் காலம், அடுத்து அவன் பிள்ளைகள் பேரன்கள் கொள்ளுப் பேரன்கள் என்று நான்காவது தலைமுறை நடந்து கொண்டிருக்கிறது.இப்போது மதியின் காலம்.சித்திரங்களின் கோடுகள் வானத்திலிருந்து இறங்கும் மின்னல்களுக்கு ஒப்பானவை. தண்ணீரிலிருந்து நெருப்பு உண்டாகும்.மேகம் தண்ணீர்தான் மதியின் கோடுகள் மின்னலுக்குச் சமானமானவை
-கி. ராஜநாராயணன்
முந்நூறு பக்க நாவல் எழுதுவதற்கு ஒரு படைப்பாளி எந்த அளவுக்கு தீவிரமாக சிந்திக்கின்றானோ, அதே அளவுக்கு ஒரு அரசியல், சமூக அங்கத கார்ட்டூன் வரைவதற்கு, ஒரு கார்ட்டூனிஸ்ட் சிந்தித்தாக வேண்டும்.
ஆனால் கோபம் வெளிப்படாமல்- நகைச்சுவை இழைந்தோட கார்ட்டூன் வரைபவரே உன்னதக் கலைஞர். அந்த ஆற்றல், இன்றைய இந்திய கார்ட்டூனிஸ்டுகளில், மதிக்கு அபரிதமாக கைகூடியிருக்கிறது.மதி, பாரதி வழியில் வந்த ஓர் அற்புதமான கோட்டோவியக் கவிஞர்.
-இந்திரா பார்த்தசாரதி
"துக்ளக்' உட்பட பல பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த மதி, தமது கார்ட்டூன்கள் மூலம் வாசகர்களைச் சிரித்து ரசிக்க வைப்பதோடு, மிகக் கூர்மையாகவும், அழுத்தமாகவும் விமர்சனத்தைப் பதிவு செய்யும் தனித்திறமை கொண்டவர் என்றால் அது மிகையல்ல. பத்தி பத்தியாக ஒரு கட்டுரை எழுதி, ஒரு கட்டுரையாளர் வெளிப்படுத்தக் கூடிய விமர்சனத்தை அல்லது உருவாக்கக் கூடிய தாக்கத்தை ஒரு கேலிச் சித்திரம் மூலம், மிகச் சுலபமாக ஏற்படுத்தி விடக்கூடிய திறமை மதியிடம் கொட்டிக் கிடக்கிறது.
- சோ
பத்திரிகை என்ற ஊடகத்தில் வாசிக்க வைக்கும் முயற்சிகள் தினந்தோறும் நடக்கின்றன. யோசிக்க வைக்கும் முயற்சிகளை சிலரே செய்கிறார்கள்; அவர்களுள் ஒருவர் சித்திரச் சிந்தனையாளர் மதி அவர்கள்
ஒரு கேலிச் சித்திரக்காரரின் பொறுப்பு சமூக விமர்சனம் செய்வது மட்டுமன்று. சமூகம் பற்றிய விழிப்பை வளர்ப்பது;பொதுவாழ்வு பற்றிய பொறுப்பை வளர்ப்பது; இரண்டையும் மதி அவர்கள் செய்கிறார்கள். ஒரு தலையங்கம் முழுக்க எழுதி ஊட்டவேண்டிய அறிவை ஒரு சித்திரத்தின் மூலம் எளிமையாய் வலிமையாய்ச் சொல்லிவிடும்"மதி'யின் மதி மதிக்கப்பட வேண்டியது.
-வைரமுத்து
சர்வதேச அரசியலிலிருந்து தமிழக அரசியல் வரை மதி-யின் தூரிகைக்குத் தப்பிய முக்கிய பிரச்சினைகளோ முக்கியத் தலைவர்களோ அரிதினும் அரிதாகவே இருப்பார்கள். தூரிகையின் துணை கொண்டு மக்களைக் கவர்ந்து சிரிக்க வைத்து அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதில் இவருக்கு நிகர் இவரேதான். சங்கர், ஆர்.கே. இலட்சுமணனைப் போன்ற அகில இந்திய புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர்களுக்கு வாரிசாக ஆண்டிலும் அனுபவத்திலும் இளைஞரான மதி விளங்குவது தமிழ்நாட்டுக்குப் பெருமையாகும்.
- பழ. நெடுமாறன்
மதியின் குறுக்கு நெடுக்கான கோடுகள்; வளைந்தும் நெளிந்தும் போகும் கருப்புக் கோடுகள், கோடுகளில் உருவாகும் வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து சொன்னதற்கும் - சொல்லாமல் விட்டதற்கும் அர்த்தம் கொடுக்கிறது. அதுதான் மதி. அவர் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்பதையே அவர் கார்ட்டூன்கள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.
-சா. கந்தசாமி
கலை, இலக்கிய, சமூக, அரசியல் விமர்சனத்துக்குரிய துணிச்சல், கூர்மை, தெளிவு, விசாலமான அறிவு, விவேகம், நகை, ஓவியத் திறன், சார்பற்ற நிலை யாவும் கூடி வருகிற கலைஞனே சிறந்த கேலிச் சித்திர ஓவியனாக நன்மதிப்புப் பெற இயலும் என்பதற்கு மதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புதிது புதிதான கற்பனை, நையாண்டி, அரசியல்காரர்களின் உடல் மொழித் தேர்வு என, தனக்கெனத் தனியிடம் கொள்கிறார் கார்ட்டூனிஸ்ட் மதி.
-நாஞ்சில் நாடன்
தன் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் சமூகத் தீமைகளுக்கு எதிரான தார்மிக ஆவேசத்தை நான்கு கோடுகளில் நச்சென்று வெளிப்படுத்தும் வித்தகர் மதி. ஓர் ஓவியனுக்கு அழகுணர்ச்சியும் கற்பனை வளமும் இருந்தால் போதும். ஆனால், ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு தன் வாழ்காலச் சமூகத்தில் அரங்கேறும் அவலங்கள் குறித்த பார்வையும், அவற்றிற்கு எதிரான உள்ளார்ந்த கோபமும், அந்த அடக்கவியலாத கோபத்தை எள்ளல் சுவையோடு வெளிப்படுத்தும் ஆற்றலும் அவசியம். இவையனைத்தும் கார்ட்டூனிஸ்ட் மதியிடம் இயல்பாக அமைந்திருப்பதை வாசகர்கள் அறிவர்.
-தமிழருவி மணியன்
மண்ணில் மாற்றத்தை உருவாக்க மதி வரைந்து வரும் சித்திரங்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனதில் நிலைத்து நிற்பவை. அவரது சித்திரங்களைப் பார்க்கும்போது அவை நம்மை சிரிக்க வைக்கின்றன; சிந்திக்க வைக்கின்றன. மதி ஒரு சித்திரக்காரர் அல்ல, அவர் ஒரு விசித்திரக்காரர்.
-சாலமன் பாப்பையா
கார்ட்டூனிஸ்ட்டுக்கான திறமை பிறக்கும்போதே வந்துவிடுகிறது என்பதைத் திடமாக நம்புகிறவன் நான். மூளைக்குள் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் திறமை அது- கரிக்குள் வைரம் மாதிரி. மதியின் அரசியல்வாதிகள் பொதுவாக, பொய்யான சிரிப்புடனும் (இளிப்பு?!), காமிராவுக்கான Body language உடனும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்! மதியின் கார்ட்டூன்களை புரட்டிப் பார்க்கும்போது நம் நாட்டு அரசியல் எவ்வளவு தமாஷாகவும், விபரீதமாகவும், பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது என்பதும் புரியும்!
-மதன்
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)