‘ஹலோ சார்! நீங்க மட்டும்தான் கார்ட்டூன் போடணுமா? நாங்க போடக் கூடாதா?’ என்று கேள்வி கேட்பவர்களுக்கான இடம் இது! இதோ, உங்களுடைய இடம்! எவ்வளவு கார்ட்டூன்கள் வேண்டுமானாலும் போடுங்க. ஆனால், உங்கள் படைப்புகளுக்குக் கிடைக்கும் பாராட்டுகள் எதிர்ப்புகள் அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு. இந்த இணையதளம் பொறுப்பேற்காது. மற்ற விதிமுறைகள் உள்ளே…
ஆடாத குழந்தைகள் இருக்கலாம், பாடாத குழந்தைகள் இருக்கலாம், ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள், படம் வரைந்து பார்க்காதக் குழந்தைகளே இருக்க முடியாது. ஒரு முட்டை, பிறகு அதற்கு ஒரு சட்டை, அதிலிருந்து குச்சி குச்சியாக கோடுகள் போட்டு கால்கள், கைகள், பிறகு, கண், மூக்கு, வாய், இறுதியாக முள் எலிபோலவோ, துடைப்பம்போலவோ குச்சி குச்சியாக முடி… என வரைந்து ‘இதுதான் எங்கப்பா, இது அம்மா, இது என்னோட அண்ணன், இதான் நான்…’ என்று சொல்லி மகிழ்ச்சி அடையாத குழந்தைகள் உலகில் இருக்க வாய்ப்பே இல்லை. கொஞ்சம் ஆழ்ந்து யோசிச்சுப் பாருங்க, இதுவே ஒரு கார்ட்டூன்தானே. அதனாலதான் சொல்றேன்... நாலஞ்சு வயசுலேயே நீங்க கார்ட்டூனிஸ்ட் ஆயாச்சு! அதனால இந்தப் பகுதியில் துணிச்சலா போடுங்க. போட்டு அசத்துங்க.
எனது கருத்துகளுக்கு ஆதரவு கருத்துகள் இருப்பதுபோல் மாற்றுக் கருத்துகளும் இருக்கும் என்பது தெரியும். மாற்றுக் கருத்துகள் இருப்பது என்பது இயற்கையின் நியதி. இவ்வுலகத்தினர் அனைவரும் ஒரே மதத்திற்கு மாறிவிட்டால் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்துவிடுமா என்ன? அப்போதும் மாற்றுக் கருத்துகள் இருக்கத்தான் செய்யும்! ஒத்தக் கருத்து என்பது ஒரு குடும்பத்திற்குள்ளேயே சாத்தியமில்லை. அப்பாவுக்கும் பையனுக்கும், அம்மாவுக்கும் பொண்ணுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் எல்லா விஷயத்திலும் ஒத்துப்போய்விடுகிறதா என்ன? வாழ்க்கைத் தத்துவத்திலும், அரசியலிலும், கொள்கைகளிலும் இரு வேறு துருவங்களாக இருந்தவர்கள் ராஜாஜியும் பெரியாரும். ஆனால், அவர்கள் வாழும் காலம் வரை அவர்களிடம் இருந்த நட்புணர்வை உலகம் வியந்து பாராட்டியது.
எந்தப் பத்திரிகையும் ஒரு கார்ட்டூனிஸ்ட்டிற்கு 100% சுதந்திரம் கொடுத்து விடுவதில்லை. காலைச் சுற்றி ஒரு வட்டம் இருக்கும். ஒரு பத்திரிகையில் வட்டம் சிறிதாக இருக்கும், இன்னொன்றில் சற்று பெரியதாக இருக்கும்! அரிதாக ஏதாவது ஒரு பத்திரிகையில் “பரவாயில்லை, இதுவே பெரிய விஷயம்” என்று திருப்தி பட்டுக் கொள்ளும் அளவுக்கு, ‘‘கொஞ்சம் ஃப்ரீயா உலாவிக்கொள்’’ – என்று பெரிய வட்டம் தருவார்கள்.
அதை தினமணி எனக்குத் தந்தது. அதனாலேயே எனக்கு 20 வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஆனாலும் வட்டத்துக்குள்தான் இருந்தேன். இந்தப் பத்திரிகை, பாலிசி (policy) இதெல்லாம் சிலருக்குப் புரியும். பலருக்கு இது புரியாது! “சார், இந்த விஷயத்தில் நீங்க கார்ட்டூன் போடவே இல்லையே” என்பார்கள்! என்னால் உண்மையைச் சொல்லவும் முடியாது, நான் சார்ந்திருக்கும் பத்திரிகையை விட்டுக் கொடுக்கவும் முடியாது! அதனால் இப்படிச் சொல்வேன், “சார், நான் போடலைன்னா என்ன? வேறு சில பத்திரிகைகள் போடுகிறதே! அதைப் பார்த்து ரசியுங்கள்.”
திருப்தி தரும் விஷயம் இதுதான்! தி.மு.கவோ – அ.தி.மு.கவோ, காங்கிரஸோ பா.ஜ.கவோ யார் தவறு செய்தாலும் ஏதோ ஒரு பத்திரிகையின் கட்டுரையின் மூலமாகவோ, கார்ட்டூன் மூலமாகவோ தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுவிடுகின்றன! எப்படியோ வெளிச்சத்துக்கும் வந்துவிடுகிறது! ஒரு சில பிரச்னையை ஒட்டுமொத்தப் பத்திரிகை உலகமும் கண்டும் காணாததும்போல இருக்கும். இந்த அதிசயமும் அவ்வப்போது நிகழ்வது உண்டு! ஆனால் நல்லவேளையாக அதற்கும் இப்போது – Social media மூலமாக தீர்வு வந்துவிட்டது என்றே சொல்லலாம்! சும்மா பின்னி எடுக்கிறார்கள்.
ஆதலால் சொல்கிறேன், ஆதரவு கருத்து கார்ட்டூன்கள் மட்டுமல்ல, மாற்றுக் கருத்து கார்ட்டூன்களையும் வரவேற்கிறேன்! எதிர் கார்ட்டூன் போடுங்கள். ஆனால், எதிரியாக கார்ட்டூன் போடாதீர்கள்! இந்த இணையதளத்தில் பதிவிடுங்கள். உங்கள் திறமைகளைக் காட்டுங்கள். அதே சமயத்தில் உங்கள் கருத்துகளையும் உலகிற்கு எடுத்துச் சொல்லுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! இந்த இணையதளத்தின் கண்ணியம் மட்டுமல்ல, உங்களது கண்ணியமும் நீங்கள் வரையும் கார்ட்டூன்களில் அடங்கியிருக்கிறது, ஜாக்கிரதை!
கார்ட்டூன்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி mathicartoons@gmail.com Subject–ல் ‘Reader’s cartoon’ என்று குறிப்பிடுங்கள் போதும்.
எப்படியோ இன்னும் 10 – 15 வருடங்களில், 100 – 150 கார்ட்டூனிஸ்ட்டுகள், அதில் 10 – 15 Professional கார்ட்டூனிஸ்ட்டுகள் உருவானால் சரி!
1. கார்ட்டூன்கள் கறுப்பு வெள்ளையில் மட்டுமே இருக்க வேண்டும்.
1a. ‘மீம்ஸ்’ வடிவத்தில் கார்ட்டூன்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
2. JPG – வடிவில் மட்டுமே அனுப்ப வேண்டும்
3. Resolution குறைந்தபட்சம் 72 இருக்க வேண்டும்.
4. கார்ட்டூன்களுக்கு சன்மானம் ஏதும் தரப்பட மாட்டாது.
5. எந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்புகிறீர்களோ, அதே முகவரியை உங்களது கார்ட்டூன்களுக்குக் கீழே டைப் செய்தோ அல்லது தெளிவான கையெழுத்துகளிலோ குறிப்பிட வேண்டும்.
6. குறைந்தபட்ச பரிசீலனைக்குப் பிறகே உங்கள் கார்ட்டூன்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
7. பதிவேற்றத்திற்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.
8. மீண்டும் கூறுகிறோம்... உங்கள் கார்ட்டூன்களுக்கு வரும் பாராட்டுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இந்த இணையதளம் பொறுப்பேற்காது! அத்தனைக்கும் நீங்கள்தான் பொறுப்பு!