× Photographs படம் வளர்ந்த கதை வாசகர் கார்ட்டூன்கள் Contact Us

Story Of a Cartoonist

“வாட் இஸ் யுவர் ஆம்பிஷன்?”- இப்போதெல்லாம் இந்தக் கேள்வியைப் பிறந்த குழந்தையிடம்கூட கேட்பது வழக்கமாகிவிட்டது! இதே கேள்வியைத்தான் சக பெற்றோரில் ஒருவர் எனது பையனிடம் கேட்டார். அப்போது அவன் நான்காவது வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான். பள்ளி நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தக் கேள்வியை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், சிறிது நேரம் நின்று யோசித்து “இப்போதைக்கு அப்படி ‘ஆம்பிஷன்’ ஏதும் இல்லை, அங்கிள்” என்று சொல்லிவிட்டு மீண்டும் விளையாட ஓடிவிட்டான். கேள்வி கேட்டவருக்கு அதிர்ச்சி! ‘‘என்ன சார், உங்க பையன் இப்படி பதில் சொல்றான்? நீங்களாவது ‘ஆம்பிஷன்’ எதையாவது சொல்லிக் கொடுக்க வேண்டாமா?” அவரது இந்தக் கேள்வி எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. “ஆம்பிஷனை சொல்லிக் கொடுப்பதா?!”

‘‘அவன் சொன்ன பதிலில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, சார்! நீங்கள்தான் இன்னும் ஏழெட்டு ஆண்டுகள் கழித்துக் கேட்கவேண்டிய கேள்வியை இப்போதே கேட்டுவிட்டீர்கள்” என்றேன். “இப்போதைக்கு நன்றாகப் படிக்கட்டும், விளையாடட்டும், 10-ம் வகுப்பு வரும்போது பிளஸ் ஒன் -ல் எந்த குரூப் என்று தீர்மானிக்கட்டும். பிளஸ் டூ முடித்தவுடன் அவனுக்கு அடிப்படையிலேயே அமைந்திருக்கும் திறமைகளின் அடிப்படையில் மேற்படிப்பு எது என அவனே முடிவு செய்யட்டும். அதுதான் அவனுக்கு நல்லது. தேவைப்படும்போது தேவையான ஆலோசனைகளை நாம் அவர்களுக்குக் கொடுத்தாலே போதுமானது. அதற்கும் மேல் எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார்! மற்றபடி எனது எண்ணங்களையும் விருப்பங்களையும் அவனது மூளைக்குள் திணிக்க விரும்பவில்லை” என்றேன். அவர் ஏதோ என்னைப் படிப்பறிவில்லாத ‘ஜந்து’வைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு இடத்தைக் காலி பண்ணினார்.

ஆனால் ஒருவிஷயம், இதே கேள்வியை நான் LKG படிக்கும்போது யாராவது என்னிடம் கேட்டிருந்தால் அவர் இன்னும் அதிர்ந்துபோயிருப்பார். ஏனென்றால், அப்போது எனது கனவு பஸ் ஓட்டுநர் ஆவதுதான். அதிலும், மலைப் பாதைகளில் ஏறி இறங்கும் பஸ்களுக்கு! லட்சியத்திலும் ஓர் உயர்ந்த லட்சியம்! ஆனால், இதே லட்சியம் கல்லூரிப் பருவத்தில் இந்தியக் கப்பல் படையில் கேப்டன் (Captain) ஆக வேண்டும் என்பதாக மாறியது! ஆனால், அந்தக் கனவும் எனக்குக் கைகூடவில்லை. எனக்கு பதில் எனது லட்சியம் மட்டுமே கப்பலேறிப் போனது! இறுதியில் கார்ட்டூனிஸ்ட் ஆகிவிட்டேன். தற்போது இந்தத் துறைக்கு வந்து 27 ஆண்டுகளும் ஓடிவிட்டன! “Man proposes God disposes” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதன் உள் அர்த்தமே ஒரே வரி தான். அது ‘‘கடவுளே அனைத்தையும் தீர்மானிக்கிறார்!” அதுதான் என் வாழ்க்கையிலும் நடந்தது!

சிறு வயதிலிருந்தே எனக்குப் பிடித்த விஷயம் விளையாடுவது. குறிப்பாக கிரிக்கெட், பூப்பந்து, இறகுப் பந்து. இரண்டாவது, புத்தகங்கள் படிப்பது. மூன்றாவதாக இருந்த பொழுதுபோக்குதான் ஓவியம் வரைவது! அப்போது தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நிலத்தியல் (Geology) M.Sc முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் (Culturals) ஆரம்பிக்கும் சமயம். எனக்கிருந்த ஓவியத் திறமையின் அடிப்படையில் 1. Pencil sketching 2. Poster colour drawing 3. Oil painting 4. On the spot painting 5. Advertising என மொத்தம் ஐந்து பிரிவுகளில் எனது பெயரைப் பதிவுசெய்திருந்தேன்.

பொதுவாக, இத்தகைய கலைப் போட்டிகளில் கலந்துகொள்ள வேறு கல்லூரிகளுக்கும் ஊர்களுக்கும் செல்லும் மாணவர்களுடன் அந்தக் கல்லூரியைச் சார்ந்த ஒரு பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளராக (Co-ordinator) வருவதுண்டு. அந்த ஆண்டு எனது இயற்பியல் துறைப் பேராசிரியர் முனீஸ்வரன் அவர்கள் எங்களுடன் வருவதாக இருந்தார். அவர் என்னிடம் கேட்காமலேயே Political Cartooning என்ற போட்டிக்கும் எனது பெயரைக் கொடுத்திருந்தார்!

எனக்கோ அது மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக அதிர்ச்சியைத்தான் தந்தது. ஏனென்றால், எனக்கும் அரசியல் கார்ட்டூன்களுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. எனவே, அவரிடம் போய் சண்டை போட்டேன். ஆனால், அவரோ ‘‘ஓவியம் வரையும் அடிப்படைத் திறமை உனக்கிருப்பதால், உன்னால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். என் மீது மரியாதை இருந்தால், இதைச் செய்யத்தான் வேண்டும்” என்றார். மறுபேச்சு பேசவில்லை நான்.

ஆனால் போட்டி நாள் அன்று எப்படியாவது இப்போட்டிக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட வேண்டும் என்று மனதில் திட்டம் வைத்திருந்தேன். அதற்கு வசதியாக எனக்கு அன்றைய தினம் காலை மூன்று மணி நேரம் (10 to 1) எனக்கு oil painting போட்டி இருந்தது. மதியம்தான் கார்ட்டூன் போட்டி. (2 to 4:00).பொதுவாக 3 மணி நேரம் தொடர்ந்து Oil Painting என்பது நமக்கு அசதியைத் தரும். பெரும் சோர்வைக் கொடுக்கும். பிறகு மதிய உணவு. உடனேயே கார்ட்டூன் போட்டி. ஆதலால் 3 மணி நேர Oil painting- கிற்குப் பிறகு எனக்குத் தலைவலி என்று சொல்லிப் போட்டியைத் தவிர்த்துவிடுவது என முடிவு செய்திருந்தேன்.ஆனால், அந்தத் திட்டமும் தோல்வி அடைந்தது. மற்ற போட்டிகளில் கலந்துகொள்ள வந்திருந்த சக மாணவர்கள் கார்ட்டூன் போட்டி நடக்கும் அறைக்குள் எனது கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டனர்! அதிர்ச்சி தரும் வகையில் மண்டல அளவில் (Zonal) நடந்த அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்தது! அடுத்ததாக, மதுரை காமராசர் பல்கலைக்கழக அளவில் நடக்கும் போட்டிக்குச் செல்ல வேண்டும். அந்த ஆண்டு அந்தப் போட்டியை திருச்செந்தூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் கலைக் கல்லூரி நடத்தியது. அங்கு நடந்த கார்ட்டூன் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றேன்!

போட்டிக்கு வந்த நடுவர்களில் ஒருவர் போட்டி முடிந்ததும் என்னிடம் வந்து, “நீங்க என்ன ஆக வேண்டும் என்ற கனவு உங்களிடம் இருக்கிறது?” என்று கேட்டார். கப்பல் கேப்டன் கனவு ஏற்கெனவே கைவிட்டுப் போயிருந்ததால் ‘‘இப்போதைக்கு எனக்கு எந்தக் கனவும் இல்லை சார். இப்ப M.sc முதலாம் ஆண்டு படிக்கிறேன். அது முடித்த பிறகு மேற்படிப்பு படிப்பதா அல்லது வேலைக்கும் போவதா என்று தீர்மானிக்க வேண்டும்’’ என்று சிறிது நேர யோசிப்புக்குப் பின்பு எனது பையன் சொன்னதைப் போலவே சொன்னேன்!

அவர் தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த பேனா ஒன்றை எடுத்து எனக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு, ‘‘உங்களுக்குள் ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் இருக்கிறார். இறைவன் ஏற்கெனவே உங்கள் தலையில் ஒரு கார்ட்டூனிஸ்ட் என்று எழுதிவிட்டார். வேலை தேடி வேறு எங்கும் அலைய வேண்டாம். உடனடியாக சென்னைக்குச் சென்று ஏதாவது ஒரு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் ஆக சேர முயற்சி செய்யுங்கள்” என்றார்!

இந்த நிகழ்ச்சி நடந்த மூன்றாவது மாதத்தில் நான் சென்னையில் இருந்து வெளிவரும் ‘நியூஸ் டுடே’ (News Today) ஆங்கில மாலை நாளிதழில் Staff Cartoonist ஆகப் பணியில் சேர்ந்தேன்.

பிறகு freelancer ஆகி, மேலும் சில பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் போட ஆரம்பித்தேன். படிப்படியாக கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, துக்ளக், கதிரவன், வாசுகி, Newstoday என ஏழு பத்திரிகைகளில் ஒரே நேரத்தில் கார்ட்டூன்கள் போட்டு வந்தேன். தேர்தல் காலகட்டங்களில் சூறாவளிச் சுற்றுப் பயணம் என்பார்களே அதுபோல், தினசரி சூறாவளி சுற்றுப்பயணம்தான்! ஒவ்வோர் அலுவலகத்திற்கும் மாறி மாறி ஓட வேண்டும்!

இதற்கிடையில் எனக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கான ‘விளையாட்டு’ என்பதே சென்னை வாழ்க்கையில் எனக்கு இல்லாமல் போய்விட்டது. எனவே, எனக்கு வேறு பொழுதுபோக்கு தேவைப்பட்டது. விளையாட்டாக தத்துவப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், சுவாமி விவேகானந்தரின் போதனைகள் இவை இரண்டும் என்னைப் பலமுறை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டின. நாள் ஆக ஆக அதில் ஆழ்ந்த ஈடுபாடு வர ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் துறவியாகச் சேர முடிவு செய்தேன். ராமகிருஷ்ண மடத்தில் துறவியாகச் சேர்வதற்கு முன்னர் உண்மையான ஆர்வத்தில்தான் இவர்கள் சேர்கிறார்களா என்று நம்மை பரிசோதித்துப் பார்ப்பார்கள். குறைந்த பட்சம் இளநிலைப் பட்டம் வரையாவது படித்திருக்க வேண்டும். சில மருத்துவப் பரிசோதனைகளும் உள்ளன. அதையும் ‘பாஸ்’ செய்துவிட்டேன். இந்த முடிவில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்கிவிடக் கூடாது என்ற முன் ஜாக்கிரதை உணர்வால் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்து வந்த கார்ட்டூனிஸ்ட் பணியை ராஜிநாமா செய்தேன்.

ஏன், எதற்கு என்று கேட்பார்கள். அதற்கு நான் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அப்பத்திரிக்கை நிறுவனங்களிடம் ‘Calcutta statesman’-ல் வேலை கிடைத்திருக்கிறது. அங்கு செல்கிறேன்” என்று ஒரு கதையும்விட்டேன். ‘பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ – என்று ஒரு பழமொழி உண்டு. ஸ்ரீராமகிருஷ்ண மடங்களின் தலைமை அலுவலகம் (பேலூர் மடம்) கல்கத்தாவிலேயே இருக்கிறது. எனவேதான் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையின் பெயரைச் சொன்னேனோ என்னவோ?! ராமகிருஷ்ண மடத்தின் ‘பிரம்மச்சாரி’க்கான (White & White) உடையும் தைத்து விட்டேன். என் தந்தையிடம் விடைபெற ஊருக்குச் சென்றேன். நான் சொன்னதைக் கேட்ட அவர் ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்தார். அதுவரை அவரை அப்படி அழுது நான் பார்த்தது இல்லை. எனது உறவினர்களும் எனது முடிவுக்கு எதிராக இருந்தனர். இறுதியில் எனது முடிவை அவர்கள் விருப்பத்திற்காக கைவிட்டுவிட நேர்ந்தது. ஓரிரு மாத இடைவெளிக்குப் பின் எனது பத்திரிகைப் பணியைத் தொடர ஆரம்பித்தேன். பிறகு 1997-ம் ஆண்டு தினமணி–யில் Staff Cartoonist ஆகச் சேர்ந்து கிட்டதட்ட 20 வருடங்களும் ஓடிவிட்டன!

இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். எனது 10 வயதிலேயே எனது தாயாரை இழந்திருந்தேன். அதன் பிறகு ஒரு தந்தைக்கும் தந்தையாக, தாய்க்கும் தாயாக அவருக்கு இருந்த அனைத்துக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு என்னை வளர்த்து ஆளாக்கியவர் எனது தந்தைதான். அதனால்தான் எனது துறவி விருப்பத்தைக் கைவிட நேர்ந்ததோ என்னவோ?!

இதைப் படிக்கும்போது தங்களுக்கு ஒரு விஷயம் நன்றாகவே புரியவரும். மேலிருக்கும் ஒரு சக்திதான் ஆசிரியர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு நபர்கள் மூலமாக என்னை இத்துறைக்குள் தள்ளிவிட்டது. எனது 21 வயதில் இந்தப் பணிக்கு வந்தேன். எடுத்த எடுப்பிலேயே ஓர் ஆங்கில தினசரியில் Staff Cartoonist. அதன் தொடர்ச்சியாக Freelancer Cartoonist – ஆக ஒரே காலகட்டத்தில் ஏழு பத்திரிகைகளில் பணி. பிறகு தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – ல் கார்ட்டூனிஸ்ட் ஆக, மொத்தம் கிட்டத்தட்ட 27 வருடங்கள் கார்ட்டூன்கள் வரையும் பணியைச் செய்துவருகிறேன். இது வரை 17,000 கார்ட்டூன்கள் வரைந்திருக்கிறேன் என்றால், அதற்குத் தேவையான சக்தியையும் புத்தியையும் எல்லாம் வல்ல இறைவனே எனக்கு அளித்து வருகிறான் என்றே சொல்ல வேண்டும்.

எனது வாழ்வில் நடந்த இந்த ஆச்சரியமான விஷயங்களையெல்லாம் ஏப்ரல், 2008-ல் நடந்த எனது ‘அடடே'-6 தொகுப்புகள் புத்தக வெளியீட்டு விழாவில் (கிட்டத்தட்ட நான் இத்துறைக்கு வந்து 19ஆண்டுகள் ஆன பிறகு) எனது ஏற்புரையின்போதுதான் முதன்முதலாக எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டேன். மேலிருக்கும் சக்தி, இறைவன்... இதெல்லாம் இவரது கற்பனை என்று நினைப்பவர்கள் மே,2010-ல் எனது ‘மதி கார்ட்டூன்ஸ்' புத்தக வெளியீட்டு விழாவின்போது நடந்த இன்னொரு சம்பவத்தையும் படித்துப் பார்த்தால் நான் சொல்வதற்கெல்லாம் சரியான இன்னொரு ஆதாரம் உங்களுக்குக் கிடைக்கும். அதை ‘முதல் கார்ட்டூன்' என்றத் தலைப்பில் விவரித்திருக்கிறேன். படித்துப் பாருங்களேன்!