× Photographs படம் வளர்ந்த கதை வாசகர் கார்ட்டூன்கள் Contact Us

How To Become A Cartoonist?

நாட்டின் மக்கள்தொகை 100 கோடியைத் தாண்டிவிட்ட போதிலும், இன்று நம் நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே கார்ட்டூனிஸ்ட்டுகள் உள்ளனர். எத்தனையோ பத்திரிகைகள் இன்றும் கார்ட்டூன்களே இல்லாமல் வந்துகொண்டிருக்கின்றன. ஏன் கார்ட்டூனிஸ்டுகளுக்கு மட்டும் இந்தப் பஞ்சம்? காரணம் என்னவாக இருக்கும்? ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்குத் தேவையான அடிப்படைத் திறமைகள்தான் என்னென்ன? இத்தகைய கேள்விகளுக்கு என்னால் முடிந்த அளவுக்குப் பதிலையும் விளக்கத்தையும் இங்கு தருகிறேன்.

கதை, கவிதை, நடிப்பு, இசை, பாட்டு, நாட்டியம்... எனக் கலைகள் பலவகைப்பட்டாலும் இவை அனைத்துக்கும் அந்தந்தத் துறையில் பாண்டித்யம் பெற்றிருந்தால் மட்டும் போதும்! ஆனால், ஒருவர் கார்ட்டூனிஸ்ட் ஆவதற்கு மூன்று அடிப்படைத் தகுதிகள் தேவைப்படுகின்றன. (1) ஓவியத் திறமை (2) நம்மைச் சுற்றி நடந்துவரும் விஷயங்களைப் பற்றிய பொது அறிவு (3) நகைச்சுவை உணர்வு.

ஒரு கார்ட்டூனிஸ்ட் உருவாவது என்பதை ‘முழு கிரஹணம்' (Total eclipse) ஏற்படும் நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம்! கிரஹணத்தின்போது சூரியன், சந்திரன், பூமி - இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வர வேண்டும். அதுபோல் ஓவியத் திறமை, பொது அறிவு, நகைச்சுவை உணர்வு என்ற மூன்று தகுதிகளும் ஒருவரிடத்தில் இருந்தால்தான், ஒரு கார்ட்டூனிஸ்ட் உருவாக முடியும். இந்த மூன்றும் சேர்ந்து ஒருவரிடத்தில் அமைவது கிரஹணம் ஏற்படுவதுபோல் அரிதாகவே நடக்கிறது! அதனால்தான் இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே கார்ட்டூனிஸ்ட்டுகளுக்குப் பஞ்சம் இருந்துவருகிறது!

சரி! இந்த அடிப்படைத் தகுதிகள் மூன்றையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதல் தகுதி - ஓவியம்:

ஓவியம் ... அதன் வயதும் பரிணாமும் வியப்புக்குரியது. கற்கால மனிதன் முதன்முதலில் தனது சக மனிதர்களோடு சைகைகள் மூலமாகவோ அல்லது ஓவியம் வரைந்து காட்டியதன் மூலமாகவோதான் பேசி இருக்க முடியும்! அதன் பின் மொழிகள் உருவாவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.

எனவே, மனிதகுலத்தின் முதல் மொழியே ஓவியமாகத்தான் இருந்திருக்க வேண்டும். கற்கால மனிதனால் வரையப்பட்ட குகை ஓவியங்களே இதற்குச் சான்று! இது வரலாற்று ஆசிரியர்கள் கண்டறிந்த உண்மை. அதற்குப் பிறகுதான் பேச்சு மொழி! பேச்சு மொழி வந்த பின்புதான் இயல், இசை, நாடகம்... எல்லாம்!

எனவே ஓவியம், மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மனித இனத்தின் ‘ஜீன்'களிலேயே குடியேறிவிட்டது எனலாம். ஓவியம் வரையாத, குழந்தைகளே இருக்க முடியாது!

நம் வீட்டுப் பெண்கள் தினசரி வீட்டு வாசலில் இடும் கோலமும் ஓர் ஓவியம்தானே! நாம் எழுதும் எழுத்தும் ஒருவகையில் ஓவியம்தானே. அரேபிய, சீன எழுத்துகளைப் பாருங்கள். இவை எழுத்தா அல்லது ஓவியமா என்று வியந்து ரசிக்கத் தோன்றும். இதெல்லாம் ஓவியத்தின் சிறப்புகள்!

இனி கார்ட்டூனுக்குப் படம் போடுவது எப்படி என்ற விஷயத்துக்கு வருவோம். ஃபுட்பால், கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால், ஹாக்கி... எல்லாமே விளையாட்டுகள்தான். அதில் ஆடுபவர்கள் அனைவருமே விளையாட்டு வீரர்கள்தான். ஆனாலும் ஒரு கிரிக்கெட் வீரர் ஃபுட்பால் ஆட முடியாது. அதேபோல் ஒரு ஃபுட்பால் வீரர் கிரிக்கெட் ஆட முடியாது. அப்படி ஆட முயற்சித்தால் கை, கால், தலை... என ஏதாவது உடைவது நிச்சயம். அதேபோல் oil Painting, Water colour drawing, Pencil Sketching… போன்றவை அனைத்துமே ஓவியத் துறையைச் சார்ந்ததுதான். அதைச் செய்பவர்கள் அனைவருமே ஓவியர்கள்தான். ஆனாலும் ஓவியம் வரையும் திறமை உள்ளவர்கள் அனைவரும் கார்ட்டூனுக்கு எளிதாகப் படம் போட்டுவிட முடியாது! கார்ட்டூனுக்குப் படம் வரைவது என்பது சற்று வித்தியாசமானது! அதற்கென ஸ்பெஷலாக ஒரு தனித் திறமை தேவைப்படுகிறது! அது என்ன?

‘சிம்ப்பிள்’! இதுதான் அதன் மூலமந்திரம்! குறைந்தபட்சக் கோடுகளையே உபயோகிக்க வேண்டும். ஆனால், அவை அதிகபட்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும். குறிப்பாக, முக பாவங்கள். நாம் வரையும் சித்திரம், சொல்ல வரும் கருத்தைக் கெடுக்காமல் தெளிவாக இருக்க வேண்டும். தேவையற்றதாக இருக்கக் கூடாது. பேனாவுக்கு பதிலாக தூரிகையில் (Brush) வரைந்து பழகுங்கள். தூரிகையில் வரையும்போது, தேவையான இடத்தில் Thin & Thick கோடுகள் இயற்கையாகவே அமைந்து கார்ட்டூனின் அழகைக் கூட்டும்.

அடுத்து மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம், கார்ட்டூன்களில் கறுப்பு வைப்பது. கண்ணின் கருவிழியும், தலைமுடியும் ஒரு மனிதனின் அழகில் எவ்வளவு பங்கு வகிக்கின்றன! இவை இரண்டுமே கறுப்பு நிறம்தானே? எனவே, தேவையான இடங்களில் தேவையான அளவு கறுப்பு வைத்து, வரையப்படும் கார்ட்டூன் காண்போர் கண்களை ஈர்க்கும் வண்ணம் இருத்தல் வேண்டும். மற்றபடி கார்ட்டூன்கள் கறுப்பு, வெள்ளையில் இருந்தால்தான் அழகு என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்! காரணம், தேவையற்ற வண்ணங்கள் கொடுப்பது, சொல்ல வரும் கருத்திலிருந்து காண்போர் கவனத்தைத் திசை திருப்பக்கூடும்.

கார்ட்டூன்கள் வரைந்து பழக ஆரம்பிக்கும் காலகட்டத்தில், ‘ஐயோ, நாம் வரையும் ஓவியத்தில் அந்த கார்ட்டூனிஸ்ட் வரைவதுபோல ஒரு முதிர்ச்சி இல்லையே! நம்மால் இதில் வெற்றிபெற முடியுமா?' என்றெல்லாம் தயங்காதீர்கள்! ஓவியம் வரைவதற்கான அடிப்படைத் திறமை இயற்கையிலேயே உங்களிடம் இருந்தால், உங்கள் ஆர்வமும் உழைப்பும் ஆத்மார்த்தமானதாக இருந்தால், வரைந்து பழகப் பழக உங்கள் ஓவியம் மெருகேறிக்கொண்டே இருக்கும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பொன்மொழியை நினைவில்கொள்ளுங்கள்!

2-வது தகுதி - பொது அறிவு:

இரண்டாவது தகுதியான பொது அறிவை வளர்த்துக்கொள்வது எப்படி என்று கேட்டால், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற பழமொழிதான் என்னிடம் இருக்கும் ஒரே பதில். முயற்சி செய்தால் எளிது.

பத்திரிகைகள், செய்தித்தாள்கள், டி.வி செய்திகள் ஆகியவற்றை ஒழுங்காகப் படிக்கவும் கவனிக்கவும் வேண்டும். முக்கியமான அரசியல் நிகழ்வுகள், பொருளாதாரம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்னைகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை உன்னிப்பாகக் கவனிக்கவும் படிக்கவும் வேண்டும். அது மட்டுமில்லாமல், எவ்வளவு படிக்க வாய்ப்பிருக்கிறதோ அவ்வளவையும் படிக்க முயற்சி செய்யுங்கள். சாதாரண காமிக்ஸில் ஆரம்பித்து, கதைகள், கவிதைகள், விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு, வரலாறு, வரலாற்று நாயகர்கள் பற்றியப் புத்தகங்கள், சுயசரிதைகள்... இப்படி இதில் எவற்றிலெல்லாம் விருப்பம் இருக்கிறதோ, அத்தனையையும் படிக்க முயற்சி செய்யுங்கள்.

அதிகம் பேசாதீர்கள்! வாயை முடிந்தவரை மூடியே வைத்திருங்கள். உங்கள் கண்களையும் காதுகளையும் எப்போதும் திறந்தே வையுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை எல்லாம் நோட்டமிடுங்கள். உதாரணமாகப் பள்ளியில், உங்கள் வீட்டில், கோயிலில், வெளியூர்களுக்குப் பயணம் செய்கையில், கடைகளுக்குச் செல்கையில், ஹோட்டலில் சாப்பிடும்போது, திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது... எங்கிருந்தாலும் சரி, எந்நேரமானாலும் சரி, உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். உங்கள் கண்களால் படம்பிடித்து, உங்கள் மூளையின் ஒரு மூலையில் பதிவுசெய்து வைத்துக்கொள்ளுங்கள். நாளடைவில் உங்கள் பொது அறிவு அபாரமாக வளர்ந்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.

3-வது தகுதி - நகைச்சுவை உணர்வு:

நகைச்சுவை உணர்வு பற்றித் தெரிந்துக் கொள்வதற்கு முன் நாம் ஒரு ‘ஜோக்’குக்கும் கார்ட்டூனுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம். தேர்ந்து, தெளிந்த, அனைத்து விவரங்களும் அறிந்த வாசகர்களுக்கு ஜோக்குக்கும் கார்ட்டூனுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகவே தெரியும். இந்த ‘ஜோக்-கார்ட்டூன்' ஒப்பீட்டை, தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் ஆக வேண்டும் என்று விரும்பும் இளம் கலைஞர்களுக்காகத் தருகிறேன்.

ஏனென்றால், ஒரு கார்ட்டூனுக்கும் ஒரு ஜோக்குக்கும் உள்ள வித்தியாசத்தை அறியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வருவது உண்டு. எனக்கு நேர்ந்த அனுபவங்கள் அப்படி.

ஒருமுறை சென்னையில் நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான கார்ட்டூன் போட்டிக்கு நடுவராகச் சென்றிருந்தேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே கார்ட்டூனிஸ்ட்டுகள் இருக்கும் இன்றையச் சூழ்நிலையில் இத்தகையப் போட்டிகளுக்கு நடுவராகச் செல்வதன் மூலம் ஒரு சில இளம் கார்ட்டூனிஸ்ட்டுகளையாவது கண்டெடுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால், அவர்களை ஊக்குவித்து நான் சார்ந்திருக்கும் இத்துறைக்கு எப்படியாவது அழைத்து வரவேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் சென்றேன். ஆனால், போட்டிகள் முடிந்து அவர்களது படைப்புகளை ஒரு நடுவராகப் பார்க்கும்போது எனக்கு பெரும் அதிர்ச்சிதான் காத்திருந்தது! ஏனென்றால், அவற்றில் 90 சதவிகிதத்துக்கும் மேலானவை வெறும் ‘ஜோக்' ரகங்களே. கார்ட்டூன்கள் அல்ல! துரதிருஷ்டவசமாக நான் நடுவராகச் சென்ற பெரும்பாலான போட்டிகளிலும் நடந்தது இதுதான்.

ஜோக்குக்கும் கார்ட்டூனுக்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியது. சிரிக்க வைப்பதுடன் ஒரு ஜோக்கின் வேலை முடிந்தது. ஓட்டலில் காசு இல்லாமல் சாப்பிட்டுவிட்டு கிரைண்டர் வந்த காலத்துக்குப் பிறகும் மாவு அரைப்பது, மாமியாரை மருமகள் பழி வாங்குவது, அம்மா செய்த பலகாரங்களை கேலி செய்வது, வீட்டுக்காரரையும் வேலைக்காரியையும் தொடர்புபடுத்திக் கிண்டல் பண்ணுவது, அரசியல் தலைவர்களின் சின்ன வீடு பற்றிக் கிண்டல் அடிப்பது... மன்னராட்சிகள் ஒழிந்து உலக அரசியலே மாறிய பிறகும் இன்றும் மன்னர் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது, மன்னர் புறமுதுகிட்டு ஓடுவது… இதெல்லாம் ஜோக் ரகம்.

ஆனால், கார்ட்டூன் அப்படி அல்ல. ஒரு சமூகப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை போன்றவற்றில் உள்ள மிக சீரியஸான விஷயத்தின் மீது நையாண்டி கலந்து, முதலில் அந்த கார்ட்டூனைப் பார்க்கும்போது சிரிக்கச் செய்து, பிறகு அந்தப் பிரச்னைகளின் பின்னணியில் உள்ள அபாயத்தையும் விபரீதத்தையும் சிந்திக்கச் செய்வது ஒரு கார்ட்டூனின் பொறுப்பு. சற்றே புரியும்படிச் சொல்வதென்றால், மருந்தின் கசப்பைப் போக்க, அதில் தேன் கலந்து சாப்பிடுவது மாதிரி, நம்மைச் சுற்றி நடக்கும் கசப்பான விஷயங்கள் மீது, அவலங்களின் மீது ‘நையாண்டி' என்ற தேனைக் கலந்து தருவது போலாகும், கார்ட்டூன்கள்!

சரி! இப்போது மூன்றாவது தகுதியான நகைச்சுவை உணர்வு பற்றி சொல்கிறேன். மிக முக்கியத் தகுதியான இத்தகைய நகைச்சுவை உணர்வில்தான், பலர் மோசம் போய்விடுகிறார்கள்! ஏனென்றால், மற்ற இரண்டு தகுதிகளைப் போல், இதற்கு எந்த அளவும் வைத்துக்கொள்ள முடியாது. ஒரு விதையிலிருந்து செடி முளைத்து, மரமாக வளர்வதுபோல், அது உங்களுக்குள்ளேயே முளைத்து தானாக வளர வேண்டும். நீங்கள்தான் அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள்தான் அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். இறைவன் அருளால் இந்த மூன்றாவது தகுதியும் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், நீங்கள் இப்போது ஒரு கார்ட்டூனிஸ்ட்!