தமிழர் வரலாற்றில் இதுவரை இத்தகைய இனப்படுகொலையும் அழிவும் நடந்ததில்லை என்று சொல்லக்கூடிய அளவில் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பேரழிவு நடைபெற்றது.
இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா எங்கும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த யூத மக்கள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டனர். 50 இலட்சத்திற்கும் அதிகமான யூத மக்களை இட்லரின் நாஜிப் படைகள் படுகொலை செய்ததாக வரலாறு கூறியுள்ளது.
விரிந்து பரந்த ஐரோப்பா கண்டமெங்கும் யூத இனப் படுகொலை நடத்தப்பட்டது. ஆனால், சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில், அதைவிடச் சிறிய தமிழர் பகுதியில் குறுகிய காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்டனர்.
துயரம் மிகுந்த அந்த நாட்களில் மக்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அறிந்துகொள்வதில் அளவில்லாத ஆர்வம் காட்டினர். தினமணி நாளிதழில் ஒவ்வொரு நாளும் வெளியான செய்திகளும் தலையங்கங்களும் அனைவரின் விழிகளையும் நனையவைத்தன. அதைவிட முக்கியமாக தினமணியில் அன்றாடம் வெளியாகும் மதியின் கேலிச் சித்திரத்தைப் பார்க்க மக்கள் போட்டி போட்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து இருபதே கல் தொலைவில் உள்ள இலங்கையில் நடைபெற்ற கொடுமையைக் கண்டு உலகமே அதிர்ச்சியடைந்தது. ஆனால், இந்திய அரசும் அதன் பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக அரசும் அதனுடைய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களும் சிறிதுகூட சலனமில்லாமல் அந்தப் பிரச்னையை எப்படியெல்லாம் நீர்த்துப் போக வைத்தார்கள் என்பதை மதியின் கேலிச் சித்திரங்கள் உயிரோட்டமாக எடுத்துக்காட்டின.
அப்போது துயரம் மிக்க ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து வெளியான கட்டுரைகள் மக்களிடம் ஏற்படுத்தியத் தாக்கத்தைவிட மதியின் கேலிச் சித்திரங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்றால் அது மிகையாகாது. அவரது தூரிகையால் வரையப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஏவுகணைகளாகப் பாய்ந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தவர்களை நிலைகுலைய வைத்தன. அவர்களின் ஆத்திரமும் கோபமும் கண்டு மதி அவர்கள் கொஞ்சமும் கலங்கவில்லை; பின்வாங்கவும் இல்லை. அவரது தூரிகை துலாக்கோல்போல நடுநிலையில் நின்று நிகழ்ச்சிகளை எடைபோட்டு கேலிச் சித்திரங்களை வரைந்ததே தவிர, அது ஒருபோதும் ஒருபக்கமாகச் சாய்ந்ததில்லை.
எழுத்தாளனின் பேனாவாக இருந்தாலும் சரி; ஓவியனின் தூரிகையாக இருந்தாலும் சரி. யாருக்கும் எதற்காகவும் அஞ்சாமலும் வளைந்து கொடுக்காமலும் நேர்கொண்ட பார்வையுடன் எழுதவேண்டும்; வரைய வேண்டும். இதில் ஓவியர் மதி அவர்கள் பாரதியின் நேர் வாரிசாக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். "இந்தியா' பத்திரிகையில் முதன் முதலாக கேலிச் சித்திரங்களை வெளியிட்டவன் பாரதி. அந்நியராட்சிக்கு கொஞ்சமும் அஞ்சாமல் அந்த ஆட்சியை விமர்சனம் செய்த பெருமை பாரதிக்கு உண்டு. அவனுடைய பத்திரிகையில் வெளியான எழுத்தோவியங்கள் மட்டுமல்ல. கேலிச்சித்திரங்களும் தமிழக மக்களைத் தட்டியெழுப்பின.
சோதனையும் நெருக்கடியும் மிகுந்த இந்த காலகட்டத்தில் மதியின் கேலிச் சித்திரங்கள் தமிழர்களை தட்டியெழுப்பும் வேலையைத் திறம்படச் செய்கின்றன. அதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தினமணியில் மட்டுமே வெளிவந்து மக்களை மகிழ்வித்த மதியின் கேலிச்சித்திரங்கள் இப்போது இணையதளத்திலும் தோன்றி உலகை வலம் வர இருக்கின்றன. இந்தியாவில் வாழும் தமிழர்களை மகிழ்வித்த மதி இப்பது உலக நாடுகளில் வாழும் தமிழர்களையும் மகிழ்விக்கப் போகிறார். இதன் மூலம் ஓவியர் மதி விரிந்த தளத்தில் அடியெடுத்து வைக்கிறார். அங்கும் அவர் வெற்றிகொடி நாட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இனிய வேளையில் நண்பர் மதி அவர்களுக்கு தமிழ் கூறு நல்லுலகின் சார்பில் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- பழ. நெடுமாறன்
மேலும் >>