‘சார் உங்களது கார்ட்டூன்களுக்கு எதிர்ப்புகள் வருமா?’ நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி! அதற்கு இந்தப் பகுதியில் உள்ள கட்டுரைகளும் கார்ட்டூன்களும் பதில் சொல்லும். ஆனால், இவை அத்தனையுமே தி.மு.க-வின் அதிகாரப் பூர்வ கட்சிப் பத்திரிகையான முரசொலியில் வெளியானவை!
‘சரி, வேறு கட்சி நாளேடுகளில் உங்களை விமர்சிக்கவில்லையா?’ 1993, 94, 95… ஜெயலலிதா தலைமையிலான அ,தி.மு.க அரசில் நடந்த ஊழல்களும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகங்களும் நாடறிந்தவை. அக்காலகட்டத்தில் நான் துக்ளக், சாவி, கதிரவன் பத்திரிகைகளில் கடும் அ.தி.மு.க எதிர்ப்பு கார்ட்டூன்களை வரைந்து வந்தேன். அதற்கு அந்த மூன்று பத்திரிகைகளின் ஆசிரியர்கள் எடுத்த நிலைப்பாடும் எனக்கு வசதியாக அமைந்தது! அக்காலகட்டத்தில் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் எனது கார்ட்டூன்களை விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், அவை எதையும் சேர்த்து வைக்கவில்லை. ஃப்ரீலான்சராக (Freelancer) ஏழு பத்திரிகைகளில் தேர்தல் கால சூறாவளி சுற்றுப் பயணம்போல் சுற்றிச் சுற்றி கார்ட்டூன்கள் வரைந்து வந்த காலம். அதில் எனக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது!
2001 – 2006 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எஸ்மா, டெஸ்மா என்று புதுப் புதுச் சட்டங்கள் மூலமாக அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்ட காலத்தில் நான் தினமணியில் வரைந்த அ.தி.மு.க எதிர்ப்புக் கார்ட்டூன்கள் ஏராளம். அப்போது அ.தி.மு.க.வின் ‘நமது எம்ஜியார்’ பத்திரிகை திட்டாத திட்டுக்கள் இல்லை. முரசொலியைப்போலவே ‘மதி கெட்டவன்’, ‘மதியிலி’… ஏன் இன்னும் ஒரு படி மேலே போய் ‘மதி செத்தவன்’ என்றுகூட அந்தக் கட்சியைச் சார்ந்த கவிஞர் புலமைப்பித்தன் பல கட்டுரைகளில் விமர்சித்திருக்கிறார்!
ஆனால், இவை எதுவும் எனது கைகளில் இல்லை! காரணம் 2004–க்கு முன்பு எனது கார்ட்டூன்களையே சேர்த்துவைக்கும் பழக்கம் எனக்கு இல்லை. 2003– ம் ஆண்டு எனது முதல் கார்ட்டூன் தொகுப்பான ‘தினமணிடூன்’ புத்தகத்தைக் கொண்டு வந்தபோதுதான் எனக்கே இது உரைத்தது. எனது கார்ட்டூன்களையே சேர்த்துவைக்காதவன், எங்கே மற்றப் பத்திரிகைகளில் வந்த எதிர்க் கருத்துகளைச் சேர்த்து வைக்க தோன்றி இருக்கும்?!
ஆனாலும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். பத்திரிகைகளில் வரும் கார்ட்டூன்களை கருணாநிதி சீரியஸாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு, ஜெயலலிதா எடுத்துக்கொண்டதில்லை. காரணம், கருணாநிதிக்கு ஒரு சின்ன கார்ட்டூன் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிக நன்றாகவேத் தெரியும். ஆனால், ஜெயலலிதா பத்திரிகைகளில் வரும் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்! அக்கட்சியைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, இதைக் கண்டு கொண்டு ‘நமது எம்.ஜி.ஆர்’ –ல் பதில் எழுதினால்தான் உண்டு!
மேலும் ஒரு முக்கிய காரணம் தி.மு.க தொண்டர்கள் அத்தனை பேருக்குமே பத்திரிகை படிக்கும் பழக்கம் உண்டு! அ.தி.மு.க –வின் நிலைமை அப்படி இல்லை! ‘நான் எதற்கு பத்திரிகைகளில் வரும் விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், எனது வாக்கு வங்கி பெரும்பாலும் கிராமத்து மக்கள் (Rural People), பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள்’ என்று பலமுறை ஜெயலலிதா கூறியிருக்கிறார் என்பதை அவரிடம் நெருங்கிப் பழகியவர்கள் மூலம் நான் அறிந்திருக்கிறேன்.
நமக்குக் கிடைக்கும் நேரத்தில் கட்சிப் பத்திரிகைகளை எல்லா நாள்களும் படிக்க முடிவதில்லை. ஆதலால், எனது கண்களில்பட்ட சிலவற்றை மட்டுமே இங்கு தந்திருக்கிறேன். 2011–சட்டமன்றத் தேர்தல், வந்தபோது முழுமையாக நான் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் இருந்து கார்ட்டூன்கள் வரைந்து வந்தேன். அதே போல் 2016 – சட்டமன்றத் தேர்தலின்போது ஆஸ்திரேலியாவில் இருந்து கார்ட்டூன்கள் வரைந்து வந்தேன். பொதுவாக, இந்த இரண்டு தேர்தல்களும் கோடை விடுமுறையின்போது வந்ததே இதற்குக் காரணம். இந்த மாதிரி நேரங்களில் கட்சிப் பத்திரிகைகளில் என்ன வந்தது என்பது கிட்டத்தட்ட முழுமையாகவே எனது கண்களில் இருந்து தப்பிவிடும்.
2010, மே மாதம் எனது ‘மதி கார்ட்டூன்ஸ்’ (பெரிய கார்ட்டூன்களின் தொகுப்பு) புத்தகம் வெளியிட ஏற்பாடு நடந்துகொண்டிருந்ததது. மத்தியில் சோனியா தலைமையிலான ஐ.மு.கூ–வில் தி.மு.க அங்கம் வகித்து வந்தது. 2–ஜி, ஆதர்ஷ், காமன் வெல்த், நிலக்கரி, S-பாண்ட்… என தினம் ஒரு ஊழல் குற்றச்சாட்டு வெளியாகிக் கொண்டிருந்த நேரம். 2009, ஈழத்தில் பெரும் வரலாறு காணாத இனப் படுகொலையை அந்தாட்டு ராணுவம் நிகழ்த்தியதை நமது மத்திய அரசும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரம். மத்திய அரசையும் மாநில அரசையும் எனது கார்ட்டூன்களில் கடுமையாகவே விமர்சித்தேன்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்.
‘கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்’. – இது வள்ளுவன் வாக்கு!
தி.மு.க–வோ, அதன் தலைவரோ எனக்கு எதிரியா என்ன? நாட்டில் நடக்கும் அவலங்களைப் பார்த்து தங்களது கார்ட்டூன்கள் மூலம், ‘இது தவறு’ என நையாண்டி கலந்து ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் புரிய வைப்பது மட்டுமே ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் வேலை!
இந்த இடத்தில் வாசகர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்! பல பத்திரிகைகளில் கருணாநிதியை தள்ளு வண்டியில் இருப்பதுபோலவே பல கார்ட்டூன்களில் சித்தரித்திருக்கிறார்கள். அவரது கண்களில் இருந்த ஊனத்தைக்கூட அப்படியே வரைந்திருக்கிறார்கள். நான் ஒரு நாளும் எனது கார்ட்டூன்களில் அதைச் செய்ததில்லை, அவர், சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பிறகும் அவர் ஆடிப் பாடுவதாக, ஓடி ஆடுவதாக பல கார்ட்டூன்களில் வரைந்திருக்கிறேன். (இரண்டே இரண்டு கார்ட்டூன்களில் மட்டுமே அவர் சக்கர நாற்காலியில் இருப்பதுபோல் வரைந்திருக்கிறேன். ஏனென்றால், அந்த கார்ட்டூன்களுக்கான ஐடியாவில் அதைத் தவிர்க்க முடியாத நிலை இருந்தது) கருணாநிதி என்பவர் தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவர்; அந்தக் கட்சியை பிரதிபலிப்பவர். எனவே, அவர் மூலம் அவரது கட்சியையும் அரசசையும் விமர்சிப்பதுதான் எனது வேலையேத் தவிர, கருணாநிதி என்ற தனிப்பட்ட மனிதரை கார்ட்டூன் போடுவது எனது நோக்கமில்லை.
ஆக மொத்தம் அவர் வேலையை அவர் செய்கிறார், எனது வேலையை நான் செய்கிறேன். ஆதலால், எனக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. எனவே, 2010–ல் வெளிவந்த எனது ‘மதி கார்ட்டூன்ஸ்’ புத்தகத்தை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை வைத்தே வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என்று கருதினேன்.
கடுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும். அது அவர்களது கட்சிக்கும் நல்லது; அவர்களது ஆட்சிக்கும் நல்லது! அதுமட்டுமல்ல இப்படி ஒரு புத்தக வெளியீடு நடந்தால், அது ஜனநாயகத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் நல்லது என்ற நோக்கில் இது விஷயமாக முதல்வர் கருணாநிதியை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம் தொடர்புகொண்டு எனது ஆவலைத் தெரிவித்தேன். முதல்வரும் ‘முயற்சிக்கிறேன், அவரை அப்புத்தகத்தின் பிரதி ஒன்றையும் அதனோடு ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் இணைத்து அனுப்பச் சொல்லுங்கள்’ என்று கே.எஸ்.ஆர் மூலம் எனக்கு பதில் அளித்தார்.
மறுநாளே கே.எஸ்.ஆர் மூலம் புத்தகத்தின் ஒரு பிரதியையும் எனது கடிதத்தையும் கொடுத்து அனுப்பினேன். ஒரு வாரத்திற்குள் நண்பர் கே.எஸ்.ஆர் என்னை தொலைபேசியில் அழைத்து முதல்வரின் பதிலைத் தெரிவித்தார். ‘தலைவர் பொறுமையாக எல்லா கார்ட்டூன்களையும் பார்த்தார். புத்தகத்தில் தி.மு.க அரசை விமர்சித்து நிறைய கார்ட்டூன்கள் போட்டிருக்கிறார்.விமர்சனம் செய்வது ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் வேலை! அவர் பணியை அவர் செய்திருக்கிறார்! ஒரு முதல்வராக அவரது புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! ஆனால், புத்தகத்தின் அட்டைப்படத்திலேயே தமிழகத்தை இரண்டாகப் பிரித்து ‘ஸ்டாலின் நாடு – அழகிரி நாடு’ என்று ஒரு கார்ட்டூன் போட்டிருக்கிறார்! அப்படியிருக்க, நானே இந்தப் புத்தகத்தை வெளியிட்டால், கட்சியினர் வருந்தக்கூடும்! ‘எப்படி இப்புத்தகத்தை வெளியிட ஒத்துக்கொண்டீர்கள்?’ எனக் கேள்வி கேட்கக்கூடும். எனவே, ஒரு முதல்வராக அவரது புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இதை தி.மு.கவின் கட்சித் தலைவராக வெளியிடுவதில் பல சிரமங்கள் இருக்கின்றன என்று நான் கூறியதாக அவரிடம் சொல்லி விடுங்கள்’ என்று நண்பர் கே.எஸ்.ஆர் கூறினார். அத்தோடு எனது அந்த முயற்சி முற்றுப் பெற்றது.
மே, 30, 2010. எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது. இரண்டு நாட்கள் கழித்து வந்த முரசொலியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போனேன். ‘வசை பாடும் கார்ட்டூனிஸ்ட் மதி–க்கு வாழ்த்துக்கள்’ – என்று ஒரு தலையங்க வடிவில் ஒரு கட்டுரையே வெளியிட்டிருந்தார் கருணாநிதி.
தன்னால் வெளியிடப்பட முடியாமல் போனாலும், மறக்காமல் அவரது வாழ்த்துகளை அவருக்கே உரிய குத்தல்களோடு, திட்டியும் திட்டாமலும் முரசொலியில் பதிவுசெய்தது எனக்கு பெரும் வியப்பைத் தந்தது! அவருடைய ஞாபக சக்தி, அவர் காட்டிய மரியாதைக்கு இங்கு தலை வணங்குகிறேன்!
அவருக்கு எதிராக எத்தனையோ கார்ட்டூன்கள் வரைந்திருக்கிறேன். கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.
பதிலுக்கு முரசொலியில் அவரது கட்சியினர் பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றனர். வரம்பு மீறிய வார்த்தைகளால் திட்டியும் இருக்கிறார்கள். கழக ‘கலாசார’த்தில் இதையெல்லாம் தவிர்க்க முடியாது! அத்தனையும் ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் அவர் என்னை வாழ்த்திய இந்தப் பண்பு நிச்சயமாக தமிழகத்தைச் சார்ந்த வேறு எந்தக் கட்சித் தலைவரிடமும் நான் மட்டும் அல்ல, யாருமே எதிர் பார்க்க முடியாதது. அவர் ஐந்து முறை முதல் மந்திரி மட்டும் அல்ல, பிறவி ராஜதந்திரி!
தனது ஆரம்பகால அரசியலின்போது பத்திரிகைகளின் மீது பல தாக்குதல்களை நடத்தியவர்தான். அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்தான். ஆனால், அனுபவங்கள் அவரை பட்டை தீட்டி, இத்தகைய பண்புகளை அவரிடம் வளர்த்துவிட்டிருந்தன! ஒரு முழுமையான, பழுத்த அரசியல்வாதியாக மாற்றியிருந்தன என்பதை இதன் மூலம் காண முடிந்தது!
தினமணி நாளிதழில் நாள்தோறும் கேலிச் சித்திரம் வரையும் ஓவியர் மதிக்கு ஒரு பாராட்டு விழா நடந்திருக்கிறது. அதிலே அவர் வரைந்த கேலிச் சித்திரங்களெல்லாம் அடங்கிய அழகிய நூலும் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களும் அறிஞர் பெருமக்களும் அவரது திறமையை எடுத்துக்காட்டி உளமார வாழ்த்தியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல; அவர் கல்வி நிலையங்களில் பயின்றபோது அவருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களும் விழாவில் கலந்துகொண்டு மதி பற்றிய பழைய நினைவுகளை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு கேலிச் சித்திர நிபுணருக்கு இப்படிப்பட்ட பாராட்டு விழா என்பது மிகவும் பெருமைக்குரியது. விழாவுக்கு வர முடியாத வாசகர்களும், வெளியூர்களில் வாழும் வாசகர்களும்கூட உளம் மகிழ்ந்து, இருந்த இடத்தில் இருந்தபடியே வாழ்த்துக் கூறக்கூடிய பெருமைக்குரிய வாய்ப்பாகும்.
அனைவரது வாழ்த்துகளுக்கும் உரிய மதியிடம் குறைகளே இல்லையா என்று கேட்டால், உண்டு என்றே சொல்லத் தோன்றும். அவரது கார்ட்டூன்களில் 100-க்கு 70 சதவிகிதம் தி.மு.க-வையும், முதல்வர் கலைஞரையும் தாக்குவதாகவே அமைந்திருக்கின்றன.
மீதி முப்பது சதவிகித கார்ட்டூன்களில்கூட ஜெயலலிதாவை கேலி செய்து வருகிற கார்ட்டூன்கள் மிக மிக மிக மிகக் குறைவானதாகவே இருக்கும். அந்தளவுக்கு அவரிடம் தி.மு.க மீது துவேஷமும் அ.தி.மு.க மீது அன்பும் மனமெல்லாம் நிறைந்து கிடக்கிறது. இதன் மூலம் அவர் ஒரு நடுநிலை வாய்ந்த கேலிச் சித்திரக்காரர் அல்ல, தமது சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையிலேயே கார்ட்டூன்களை வரைகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.
தி.மு.க-வைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக தலைவர் கலைஞரைப் பொறுத்தவரையில் மதியின் தாக்குதல்களைவிட இன்னும் அதிக அளவில் பல்வேறு தரப்பினரின் காழ்ப்புணர்ச்சியையும் தாக்குதல்களையும் கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தாங்கித் தாங்கி அறிஞர் அண்ணா சொன்னதுபோல, ‘வசைகள் நமது வளர்ச்சிக்கு நல்ல உரம்’ என்று நினைத்து ‘வாழ்க வசவாளர்கள்’ என்று அண்ணாவின் பாணியிலேயே ஒரு காலத்தில் தன்னை வசை பாடியவர்களையே அழைத்து விருதுகள் கொடுப்பது, நிதி உதவிகள் வழங்குவது பாராட்டு மழையில் நனையச் செய்வது என்றே செயல்பட்டுவருகிறது.
ஆகவே, விமர்சனத்துக்கு அஞ்சும் பாசறை அல்ல தி.மு.க! அதனால் யாரும் விமர்சிக்கவே கூடாது என்றா கழகம் கருதுகிறது. கலைஞர் நினைக்கிறார்? பொது வாழ்வில், அதுவும் அரசியலில் எதிரணியினரின் தாக்குதல்கள், விமர்சனங்கள் நாலா திசைகளிலும் வருவது என்பது இயற்கையானதே.
உதாரணமாக, 1949-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.கழகத்தைத் தோற்றுவித்த காலத்திலிருந்து நாள்தோறும் விடுதலை தலையங்கம் மூலமாகவும், ‘பலசரக்கு மூட்டை’ என்ற பகுதியின் வாயிலாகவும் திராவிடர் இயக்கம் கண்ட தலைச்சிறந்த எழுத்தாளரான குத்தூசி குருசாமி அவர்கள் தி.மு.க-வை தமது நெருப்புத் துண்டங்கள் போன்ற எழுத்துகளால் குத்திக் கிழித்துக்கொண்டே இருப்பார். எனினும், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களிலிருந்து தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் வரையில் விடுதலையை தேடிப் பிடித்து தவறாமல் குருசாமியின் எழுத்துகளை தங்களுக்கு எதிரானதாக இருந்தாலும், விரும்பிப் படிப்பார்கள்.
என்ன காரணம்?
குருசாமியின் எழுத்துகள் எதிரிகளை தாக்கித் தகர்க்கும் என்றாலும், அவரது எழுத்துகள் யாரை அவர் தாக்குகிறாரோ அவர்களையும் விரும்பிப் படிக்கச் செய்யும் ஈர்ப்பு சக்தி படைத்தவை. குருசாமி மீது கோபப்படுவார்கள், ஆனாலும் அவரது எழுத்துகளை தவறாது படித்துவிட்டே கோபப்படுவார்கள்.
ஒரு சமயம் பேரறிஞர் அண்ணா அவர்களை ‘தாக்கினார் தாக்கினார்’ என்று, ‘பலசரக்கு மூட்டை’யில் குருசாமி, குத்திக் கிழித்ததைப் படித்துவிட்டு, அடுத்த வாரம் தமது திராவிட நாடு இதழில், ‘தொலைத்தார் தொலைத்தார்’ என்ற தலைப்பில் பளிச்சென்று பதிலளித்திருந்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
இதனை நாம் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம், விமர்சனங்கள் என்பது எதிரிக்கும் படிக்கத் தூண்டுவனவாகவும் கார்ட்டூன்கள் பார்க்க தூண்டுவனவாகவும் அமைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே!
மதியின் கார்ட்டூன்கள், குருசாமி வகுத்துத் தந்த விமர்சனத்தின் அடிப்படையிலான ஈர்ப்பு சக்தி படைத்தவை அல்ல. அவரது தி.மு.க எதிர்ப்பு கார்ட்டூன்களில் பளிச்சென்று, ‘ஜெயலலிதா ஆதரவு’ என்கிற ஒரு கட்சிச் சார்பும் நடுநிலை பிறழ்வும்தான் பளிச்சென்று காட்சி அளிக்கிறதே தவிர, தி.மு.கவி-னர் எவரும் அவரது கார்ட்டூன்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொள்ளும் அளவினதாக அவை அமைந்திருக்கவில்லை.எனினும், அறிஞர் அண்ணா வழி நின்று மதியின் வசைகளும் தி.மு.க-வின் வளர்ச்சிக்கு உரம்தான் என்று நினைத்து, அண்ணா சொன்னபடி தி.மு.க மீது தினந்தோறும் வசைபாடும் மதியை வாழ்க, வளர்க அவரது ஆற்றல் என்று பல்லாண்டு பாடி தி.மு.க-வினரும் எல்லோருடனும் சேர்ந்து வாழ்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் >>