-மதி (தினமணி, 07, ஜூலை 2007)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் மீது சாட்டப்பட்டுள்ள மிக வலுவான குற்றச்சாட்டுகள் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனையும் அதிர்ச்சியடையவைக்கின்றன. இக்குற்றச்சாட்டுகளுக்கான பிரதிபா பாட்டீலின் பதிலோ மிக சாதுர்யமானது. ‘‘நாட்டின் மிகப் பெரிய பதவிக்காகப் போட்டியிடுகிறேன். பிரசாரம் என்ற பெயரில் என் மீது குற்றம் சாட்டுவதன் மூலமாக அந்தப் பதவியின் கண்ணியத்தைக் குறைத்துவிடாதீர்கள்: இது வரை எனது 50 ஆண்டுகால பொதுவாழ்வில் எனது மனசாட்சியின்படியே நடந்து வந்துள்ளேன்’’.
மிக விநோதமான பதில் இது! மனசாட்சி என்ற அளவுகோல் எப்படி இவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக முடியும்? ஓர் ஊழல்வாதிக்கு அவரது மனசாட்சிப்படி லஞ்சம் வாங்குவது குற்றம் அல்ல; ஒரு திருடனுக்கு அவனது மனசாட்சிப்படி திருடுவது குற்றம் அல்ல; இதேபோல் கொள்ளையடிப்பவனுக்கும் கொலை செய்பவனுக்கும் அவர்களது மனசாட்சியின்படி கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் குற்றம் அல்ல!
அவருக்கு வக்காலத்து வாங்கும் வகையில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, ‘‘இது ஒன்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் அல்ல. இந்தியாவைப் பொறுத்தவரை நேரடியாக மக்களே குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாது. இங்கு எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் மட்டுமே ஓட்டளித்து தேர்வு செய்யும் பதவி இது’’ என்று ‘அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே’ என்ற அடிப்படை உண்மையைக்கூட மிக லாகவமாக மறைத்திருக்கிறார்! ‘‘மக்கள் பிரதிநிதிகள் மக்களின் விருப்பத்தை அறிந்து நடந்துகொள்ளத் தேவையில்லை; அது எங்களுக்கு அவசியமும் இல்லை; ஓட்டுப்போட்டுவிட்டாயா, உனது வேலை முடிந்தது, ஓரம் போ! மீதி விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’- என்று வாக்காளரின் கன்னத்தில் அறையாத குறையாகப் பேசியிருக்கிறார். ஆஹா, திருவாளர் பொதுஜனத்தின் மீதுதான் இவருக்கும், இவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் கூட்டணிக்கும் எவ்வளவு மரியாதை?
மே 13 உ.பி முதல்வராகப் பதவி ஏற்கிறார் மாயாவதி. பதவி ஏற்று ஒருமாத காலம்கூட ஆகவில்லை. மாயாவதியும் சோனியாவும் தில்லியில் சந்தித்துக்கொள்கிறார்கள். பேச்சுகளும் பேரங்களும் நடக்கின்றன. உ.பி மாநிலத் திட்டங்களுக்கு ரூ.70,000 கோடி நிதி தருவதாக மத்திய அரசு அறிவிக்கிறது; மாயாவதி மீதான ரூ.175 கோடி தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கைச் சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் வாபஸ் பெறுவதாக உ.பி மாநில ஆளுநர் டி.வி ராஜேஸ்வர் அறிவிக்கிறார்! பிறகென்ன, தனது நலன், உ.பி-யின் நலன் இரண்டும் கவனிக்கப்பட்டாகிவிட்டது! இனி தேசநலன் பற்றி எனக்கென்ன அக்கறை என்ற ரீதியில் ‘காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரே எங்கள் வேட்பாளர்’ எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார், மாயாவதி! புதிய குடியரசுத் தலைவருக்கான முதல் கட்டத் தேர்தல் பணி இனிதே வெற்றியுடன் முடிந்தது!
அடுத்தக் கட்டம் ஆரம்பமாகிறது! அடுத்த குடியரசுத் தலைவர் ‘தான் கேட்ட நேரத்தில், கேட்ட இடத்தில் கையெழுத்திடும் நபராக இருக்க வேண்டும்' என்ற நோக்கில் தங்களது அணியின் வேட்பாளரைத் தேட ஆரம்பித்தார் சோனியா! பிரணாப் முகர்ஜி, கரண்சிங், சிவராஜ் பாட்டீல்... என ஒவ்வொருவராக ஓரங்கட்டப்பட்டு, கூட்டணியின் ஏகோபித்த ஆதரவுடன் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் பிரதிபா பாட்டீல்!
போனஸாக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சிவசேனையும் பிரதிபாவை ஆதரிக்கிறது! பிரதிபாவை வேட்பாளராக நிறுத்தியதால், பெண்ணினத்துக்கே பெருமை தேடித் தந்துவிட்டதாக கூட்டணியினர் கூத்தாடினர்!
பிரதிபா மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பத்திரிகைகளும், டி.வி செய்திகளும், அரசியல் வல்லுநர்களும், கட்டுரையாளர்களும் வெளிச்சம்போட்டுக் காட்டியபோது, காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரிகளும் ‘தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே’ என்ற காந்திய வழியைப் பின்பற்றியன!
லஞ்சம், ஊழல் கறைபடியாத பல தலைவர்களை இன்றும் கொண்டுள்ள கட்சி இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே! ஆனால் இடதுசாரிகள், இன்று பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் கூடிய பிரதிபா பாட்டீலை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது வேட்பாளர் இவர்தான் என்று சுட்டிக்காட்ட, அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் ‘ஆமாம்' - என்று தலை அசைத்தார்கள்!
அனைத்துக் கட்சிகளும் சென்ற தேர்தலில் அப்துல் கலாமை ஆதரித்தபோது, தோல்வி உறுதி என்ற நிலையிலும் தங்களின் நிலைப்பாடு முக்கியம் என்று கேப்டன் லட்சுமி சாஹலை அப்துல் கலாமுக்கு எதிரான வேட்பாளராக நிறுத்திய இவர்களது துணிச்சல் இப்போது எங்கே போயிற்று?
இத்தனைக்கும் அப்போது இடதுசாரிகளின் ஆதரவு காங்கிரஸுக்கோ ஆளும் பா.ஜ.க அணிக்கோ தேவையேயில்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசோ இடதுசாரிகளின் ஆதரவிலும் தயவிலும்தான் காலம் தள்ளவேண்டிய நிலை! இத்தகைய வலுவான நிலையில் இருக்கும்போது சென்ற முறை போட்டியிடச் செய்த கேப்டன் லட்சுமியையே இந்த முறையும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாமே! பிரதிபா பாட்டீலை மிக மகிழ்ச்சியுடன், திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார்கள்!
சமீபகாலமாகவே நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் மத்தியில் இடதுசாரிகளின் தயவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சோனியாவின் தயவில் தற்போதைய இடதுசாரிகளின் அரசியல் இருக்கிறதா என்ற சந்தேகமே வருகிறது! மொத்தத்தில் இடதுசாரிகள் இடது ‘ஸாரி'களாக மாறி வருகிறார்கள்!
மகளிர் உரிமையை நிலைநாட்ட கிடைத்த இந்த அறிய வாய்ப்பை விடுவாரா தமிழக முதல்வர் கருணாநிதி? ‘அனைத்துக் கட்சி அருமைச் சகோதரிகள் வாரீர்! வாரீர்! அணி அணியாக வாரீர்! - அன்னை நாடு காத்திட என்றுமே அழியா ஜனநாயகம் பூத்திட அன்னையொருவர் ஏறுகிறார் அரியாசனம்! அதற்கு வாழ்த்தளிக்க - வரவேற்று மகிழ வாரீர்! வாரீர்!’ என்று தனக்கே உரிய பாணியில் அழைத்தார்! தமிழகம் முழுவதுமிருந்து கார், வேன், பேருந்துகளில் வருகை! கூட்டணிக் கட்சித் தலைவர் ராமதாஸே அதிர்ந்து போகும் அளவுக்குப் பேரணி!
சென்னை மாநகரமே திக்குமுக்காடியது! ‘‘பெண்ணினத்துக்கு பெருமை தேடிய கலைஞர் வாழ்க!, பிரதிபா பாட்டீல் வெல்க!’ என விண்ணதிர முழக்கம்! மேலும் ஒரு வரலாறு படைத்தார் கருணாநிதி!
1937-ல் நீதிக்கட்சி தொடங்கியது. 1938-ல் திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. இதன் மூலம் திராவிட இயக்கப் பாரம்பர்யத்தின் தற்போதைய வயது சரியாக 80. நீதிக்கட்சி 1944-ல் திராவிடர் கழகம் ஆனது. திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி அரசியலாகப் பரிணாம வளர்ச்சி எடுத்து, 1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. 2007-ல் இன்றும் அதே தி.மு.க. ஆட்சிதான்! துரதிருஷ்டம் என்னவென்றால், இந்த 40 ஆண்டு கழக ஆட்சிகளின் காலத்தில், சட்டசபையில் கருணாநிதியின் 50 ஆண்டு பொன்விழா சாதனைக் காலத்தில், 80 ஆண்டு திராவிட இயக்கப் பாரம்பர்யத்தில் ஒரு தமிழ்ப் பெண்கூட குடியரசுத் தலைவருக்கான முழுத் தகுதிகளுடன் உருவாக முடியாததுதான்!
பெண்ணினத்துக்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடி வரும் தமிழக முதல்வர் குறைந்தபட்சம் தனது ஐந்து முறை முதல்வர் பதவியில் ஒரு முறையாவது தனது கட்சியைச் சார்ந்த ஒரு பெண்ணை முதல்வர் பதவியில் அமர்த்தி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்ணினத்திதுக்குப் பெருமை தேடித் தந்திருக்கலாம்! ஒருவேளை ‘அதுதான் இரண்டு முறை ஜெயலலிதா முதல்வராக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோமே; அது தி.மு.கவின் சாதனைதானே’ என்று விட்டுவிட்டாரோ என்னவோ?!
அடுத்து பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலைப்பாட்டைப் பார்க்கலாம்! முதலில் இருந்தே ‘பைரோன் சிங் ஷெகாவத்தான் எங்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர்’ என்று உறுதியாக இருந்தது. பிறகு சோனியா - மாயாவதி திடீர் கூட்டு, பிரதிபாவுக்கு சிவசேனை ஆதரவு, மூன்றாவது அணி கைவிரிப்பு... என அடிமேல் அடிவிழ முற்றிலும் நிலை தடுமாறியது! ‘மூன்றாவது அணி கலாமை ஆதரித்தால் தான் போட்டியில் இருந்து விலகத் தயார்’ என ஷெகாவத் மூலமாகவே அறிக்கைவிட்டது! இரண்டாவது முறை போட்டிக்கு கலாம் மறுத்துவிடவே நிலைமை இன்னும் மோசமாகியது! வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங்... என பா.ஜ.கவின் அனைத்து முதல்கட்டத் தலைவர்கள் படை சூழ தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்குச் சென்று ஷெகாவத்தை சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய வைத்தார்கள்.
ஊழல் சம்பாத்தியத்துக்கும், சொத்துகளுக்கும்தான் இதுவரை ‘பிநாமி’ கேள்விப்பட்டிருக்கிறோம்! ஆனால் தனது கட்சியின் சார்பாக ஒரு ‘பிநாமி’ வேட்பாளரையே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், அவருக்காக கட்சித் தலைவர்களும் கூட்டணித் தலைவர்களும் நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று தங்களது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வேண்டி ‘பா.ஜ.க ஒரு வித்தியாசமான கட்சி’ என்பதை மீண்டும் உறுதி செய்தது!
இறுதியாக மூன்றாவது அணியின் லட்சணத்தைப் பார்ப்போம். முதலில் யார், யார் பெயரையோ யோசித்தார்கள். ஊடகங்களிடம் கிசுகிசுத்தார்கள். இறுதியில் ஒன்றும் உருப்பட்டு வராது எனத் தோன்றவே ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ போல் அப்துல் கலாமே இரண்டாவது முறை நீடிக்கட்டுமே என்று தங்களது பெருந்தன்மையைக் காட்டினார்கள்! அதை கலாம் முதலில் நாசூக்காகவும் பிறகு நேரடியாகவும் மறுத்த பிறகு மூன்றாவது அணியின் நிலைப்பாடு மிக மோசமானது! ‘பிரதிபா, ஷெகாவத் இருவருக்கும் நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை. தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா!
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலிகளின்போது ஊர் ஊராக, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று ‘எங்களுக்கு வாக்களிக்க மறந்துவிடாதீர்கள். உங்கள் ஜனநாயகக் கடமையை மறந்துவிடாதீர்கள்’ என்று புன்னகைத்து பிரசாரம் செய்யும் இவர்கள், தங்களுக்கும் அத்தகைய கடமை உண்டு என்ற அடிப்படை நியாயத்தைக்கூட குப்பைத் தொட்டியில் எறிந்தார்கள்! ‘தோற்றாலும் பரவாயில்லை. பிரதிபாவுக்கும் ஷெகாவத்துக்கும் எதிராக எங்கள் வேட்பாளரை நிறுத்துவோம்; ஜனநாயகத்தின் மாண்பைக் காப்போம்’ என்றல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும்!
பாவம், என்னதான் செய்வார்கள் அவர்கள்?! லக்னோ, ஹைதராபாத், சென்னை, தில்லி... என ஊர் ஊராகச் சென்று கூடிப் பேசியும் தங்கள் அணியின் தலைவரையே தேர்ந்தெடுக்க முடியாத நிலை. அவர்களுக்குள்ளேயே போட்டா போட்டி! இந்நிலையில் எங்கே இவர்கள் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடப் போகிறார்கள்?
இறுதியாக பெண்ணுரிமை பற்றிப் பேசுபவர்களுக்கும் அதன் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கும் ஒரு செய்தி. (எதற்கெடுத்தாலும் விதண்டாவாதமும் தர்க்கமும் செய்யும் தர்க்கவாதிகளை இங்கு மறப்போம்) இத்தனை குற்றச்சாட்டுகளைச் சுமந்துகொண்டிருக்கும் பிரதிபாவைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் இன்றைய மத்திய ஆளும் கூட்டணி பெண்ணினத்தை கெளரவப்படுத்துவதற்குப் பதிலாக அதை அவமானப்படுத்தியிருக்கிறது. களங்கப்படுத்தியிருக்கிறது!
ஒளவையார் முதல் சுனிதா வில்லியம்ஸ் வரை இந்த நாட்டின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பெண்கள் எத்தனையோ ஆயிரம் பேர்! வேலுநாச்சியார், ஜான்சிராணி, சரோஜினி நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, அருணா ஆஸப் அலி, உஷா மேத்தா, நிர்மலா தேஷ் பாண்டே, செளந்தரம் ராமச்சந்திரன், இந்திரா காந்தி, கேப்டன் லட்சுமி, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், மேதா பட்கர், உஷா ராய், அருந்ததி ராய், ருக்மிணி அருண்டேல், எம்.எஸ்.சுப்புலஷ்மி, லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி, டாக்டர் சாந்தா, ஷபனா ஆஷ்மி, இந்திரா நூயி, கிரண்பேடி, கல்பனா சாவ்லா, பி.டி.உஷா, சானியா மிர்சா... என சுதந்திரப் போராட்டம் தொடங்கி, அரசியல், வரலாறு, கல்வி, விஞ்ஞானம், சமூக சேவை, கலை, இலக்கியம், விளையாட்டு... இன்னும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, படைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் எத்தனை எத்தனை பேர்? நிலைமை இவ்வாறு இருக்க, இந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பதவிக்கு இவ்வளவு குற்றச்சாட்டுகளுடன் கூடிய ஒரு பெண்மணிதான் கிடைத்தாரா?
ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசேன், வி.வி.கிரி, சஞ்சீவ ரெட்டி, கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் என மாபெரும் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், மேதைகள் அலங்கரித்த பதவியில் அமரப் போகிறார் பிரதிபா பாட்டீல்!
ஒரு டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்... விண்ணப்பிக்க திருவாளர் பொதுஜனம் எவ்வளவு ஆதாரங்களைக் காண்பிக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவு அலைச்சல் அலையவேண்டியிருக்கிறது? அது இல்லை, இது இல்லை, இது போதாது, தகுதிச் சான்றிதழ் வேண்டும்... என எத்தனை முறை திருப்பி அனுப்பப்படுகிறார்.
ஆனால், இன்றைய மத்திய ஆளும் கூட்டணியோ தனது குடியரசுத் தலைவர் வேட்பாளரின் பின்னணி என்ன, அவரிடம் உள்ள குறைபாடுகள் என்னென, உயர் தகுதிகள் என்னென...? என்பதையெல்லாம் ஆராயாமல், பரிசீலனைக்கு உட்படுத்தாமல் இத்தனை குற்றச்சாட்டுகள் வந்த பிறகும் மறுபரிசீலனை தேவையில்லை, எங்கள் முடிவை மாற்ற இயலாது, எங்கள் வேட்பாளரின் வெற்றியை யாரும் தடுக்கவும் முடியாது. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும், வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்பதில்லையே’ - என்பதையே கூட்டணியின் தாரக மந்திரமாகக் கொண்டு நாளை நடக்கும் தேர்தலில் வெற்றியும் பெறப் போகிறார்கள்!
எனது 18 ஆண்டு கார்ட்டூனிஸ்ட் பணியில் இது வரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட குடியரசுத் தலைவரை கார்ட்டூனில் கொண்டு வந்ததில்லை! அதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்! ஆனால், அதைத் தங்களது வேட்பாளர் தேர்வு மூலம் உடைத்துக் காட்டியிருக்கிறார்கள் இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினர்! ‘‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோ வென்று போவான்!’’ என்ற மகாகவி பாரதியின் வரிகளை நினைத்துக்கொண்டு இப்போதைக்கு நம் மனதைத் தேற்றிக்கொள்வதைவிட வேறு வழி நமக்குத் தெரியவில்லை!
சமூக ஆர்வலர்கள்மீது அடக்குமுறை, கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி கைது என்று காங்கிரஸ் அரசு பாசிச வழியில் செல்கிறது. -மதி (இந்தியா டுடே, செப்டம்பர் 26, 2012)
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
‘கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்’ என்று கூறுகிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். இன்றைய மத்திய அரசு ஆகட்டும், பெரும்பாலான மாநில அரசுகள் ஆகட்டும் இந்தக் கூற்றை கண்கூடாக மெய்ப்பித்து வருகின்றன! அதற்குச் சிறந்த உதாரணம்தான் தேசியச் சின்னங்களை அவமதித்துவிட்டதாக தேசத் துரோக வழக்கில் சமீபத்தில் அசீம் திரிவேதி என்ற கார்ட்டூனிஸ்ட் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி! ஒரு பிரதமருக்கோ, ஒரு மாநில முதல்வருக்கோ தேவைப்படும்போது எல்லாம் கடிந்து அறிவுரை கூறவேண்டிய அமைச்சர்களும் அரசு உயர் அதிகாரிகளும் தங்களது பிழைப்பு கருதி அதற்குத் தயாராக இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான பத்திரிகைகள்தான் அந்தப் பணியைச் செய்துவருகின்றன.
கார்ட்டூனிஸ்ட்டும் ஒரு சாதாரண பொதுஜனமே! அவக்குள் ஒளிந்திருக்கும் திருவாளர் பொதுஜனம்தான் நாட்டில் நடக்கும் அரசியல் அவலங்களைப் பார்த்து கொதித்தெழுந்து கார்ட்டூன்கள் மூலம் ‘இது தவறு’ என நையாண்டி கலந்து ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் புரியவைக்க முயல்கிறார்! உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஒரு கார்ட்டூனிஸ்ட் மீது அநியாயமாகக் குற்றம்சாட்டி சிறையில் தள்ளுவது என்பது இவர்களுக்கு வாக்களித்து பதவியில் அமரச் செய்து அழகு பார்த்த திருவாளர் பொதுஜனத்தையே சிறையில் அடைப்பதாகத்தான் அர்த்தம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் என்ற பெருமை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருந்தாலும், பத்திரிகைகளுக்கும் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கும் சுதந்திரம் என்பது அமெரிக்காவில் உள்ள அளவில் இங்கு பாதி கூட இல்லை என்பதே உண்மை!
ஓர் அமெரிக்க ஜனாதிபதியை பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் ஒரு பொது இடத்தில் ‘மிஸ்டர் புஷ், மிஸ்டர் ஒபாமா...’ என்று அழைக்க முடியும்! கற்பனை செய்துப் பாருங்கள், தமிழகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எந்தப் பத்திரிகையாளராவது ‘மிஸ்டர் கருணாநிதி, மிஸ் ஜெயலலிதா...’ என்று அழைக்க முடியுமா? நேரு, கார்ட்டூனிஸ்ட் சங்கரின் தீவிரமான ரசிகர். அதனால் Don’t Spare me shankar (நட்பின் காரணமாக என்னை விமர்சிப்பதை விட்டுவிடாதீர்கள்) என்று சங்கருக்கு ஒரு கடிதமே எழுதினார். தமிழக அரசியலில் காமராஜரைப் பற்றிய கார்ட்டூன்களை காங்கிரஸ்காரர்கள் யாராவது அவரிடம் கோபமாக சுட்டிக்காட்டினால் ‘‘பொம்மை போட்டால் பத்திரிகை விற்கும் என்பதற்காகப் போடுகிறார்கள், அதைப் பெரிது படுத்தக் கூடாது’’ என்று அறிவுரை கூறி அனுப்பிவிடுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மூப்பனார் தன்னைப் பற்றிய கார்ட்டூன்களை விரும்பி ரசிப்பது உண்டு. ஒருமுறை எனது கார்ட்டூனில் அவரது வேட்டி பறந்துவிட்டதுபோல் சித்திரித்து இருந்தேன். கார்ட்டூன் வெளியான நாள் அன்றே நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ‘‘யாரப்பா, இன்று தினமணியில் இருந்து வந்திருப்பவர்?'' என சற்றுக் கோபமாகவே கேட்க, அன்று தினமணியில் இருந்து சென்ற புகைப்படக்காரர் வேதன் (சற்று துடிப்பாகப் பேசக் கூடியவர்), ‘‘நான்தான்’’ என ஆஜராக, ‘‘என்னப்பா இது கார்ட்டூன்?’’ என மூப்பனார் வினவ ‘‘அட, விடுங்க சார். அந்த ஆளு எப்பவுமே இப்படி தான். போன வருடம் ஒரு கார்ட்டூனில் அத்வானி வேட்டியையே உருவிவிட்டுட்டார்’’ எனச் சொல்ல, மூப்பனார் உட்பட அத்தனை பத்திரிகையாளர்களும் சிரித்துவிட்டனர். இந்த நிகழ்ச்சி நடந்தது 12 வருடங்களுக்கு முன்னர். பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களையோ கார்ட்டூன்களையோ மக்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு தன்னை பட்டைத் தீட்டிக்கொள்ள எந்த அரசு முயல்கிறதோ, அந்த அரசு பெரும்பாலும் அடுத்தத் தேர்தலில் ஆட்சியை இழக்க வாய்ப்பே இல்லை!
மாறாக, அவர்களை எதிரிகளாகப் பாவித்தால் தோல்வி நிச்சயம்! பத்திரிகை விமர்சனங்களைப் புறக்கணித்து தங்களின் பிழைப்புக்காக கும்பிடு போடும் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் பேச்சை மட்டும் நம்பியதாலேயே 1996-ல் ஜெயலலிதா ஆட்சியை இழந்தார். இதே கதிதான் 2001-ல் தி.மு.க அரசுக்கும் நேர்ந்தது.
ஆனால், இடித்துரைப்பவர்களின் பேச்சைக் கேட்க வேண்டுமென்பது சில சமயங்களில் வாக்காளர்களுக்கும் பொருந்தும். ஆனால், இதைப் புறக்கணித்ததால் சென்ற தி.மு.க ஆட்சியில் மக்கள் பல்வேறு அவதிக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அதன் விளைவாகவே 2011-ல் மீண்டும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி. ஆனாலும் என்ன செய்வது. புலி வால் பிடித்த கதையாக தி.மு.க ஆரம்பித்து வைத்த இலவச அரசியலை இன்று அ.தி.மு.கவும் விடமுடியாத நிலை. இதனால் ‘‘டாஸ்மாக்’’ மூலமாக தமிழகத்தின் எதிர்காலமே இப்போது விலை போய்க்கொண்டிருக்கிறது.
தனது கட்சிப் பத்திரிகைகள் மூலமாக மிரட்டுவது, திட்டித் தீர்ப்பது ஒருவகை. கடந்த ஐந்தாறு வருடங்களாக ‘மதிகெட்டவன்’, ‘மதியிலி’ என்றெல்லாம் முரசொலி என்னைத் திட்டித் தீர்த்தது. ஒரு காலகட்டத்தில் பதில் கார்ட்டூன்கள் போட்டு என்னை விமர்சிக்கும் அளவுக்குச் சென்றது. இது விமர்சகரின் எண்ணங்களுக்கே தடை போடும் ஒரு வகை! 2-வது மிக சிம்பிள்! விமர்சகரின் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்து அவர்களது கையை கட்டிவிடுவது! இதை தற்போதைய அ.தி.மு.க அரசு செய்ய ஆரம்பித்திருக்கிறது! ஆனால் இதையெல்லாம் தாண்டி பல படிகள் மேலே போய் விமர்சகரின் கழுத்திலேயே கத்தி வைப்பது என்ற அராஜகத்தின் உச்சியை தொட்டுவிட்டன தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசுகள்.
அஹிம்சா வழியில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவை கைதுசெய்ய போலீஸாரை நள்ளிரவில் அனுப்பிவைத்ததும், அண்ணா ஹசாரேவை கைதுசெய்து, மாபெரும் ஊழல்வாதிகள் அடைக்கப்பட்டிருக்கும் திகார் சிறையிலேயே அடைத்ததும், தற்போது கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதியை தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க முயன்றதும்... எல்லாமே காங்கிரஸ் அரசுகள் பாசிச வழியில் நடைபோட ஆரம்பித்துவிட்டதையே நமக்குக் காட்டுகிறது.
குறிப்பாகச் சொல்லப் போனால், இது ஓர் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’. பண்டித ஜவாஹர்லால் நேருவிடம் இருந்த சில குணங்களை இந்திரா காந்தியிடம் எதிர்பார்க்கலாம். இந்திரா காந்தியிடமிருந்த குணாதிசயங்களை ராஜீவ் காந்தியிடம் எதிர்பார்க்கலாம். ஆனால், இத்தாலி நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி முசோலினியிடம் பணியாற்றிய ஒரு படைத்தலைவருக்கு பிறந்த பெண்ணின் ஆணைப்படி நடக்கும் இன்றைய காங்கிரஸ் அரசுகளிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?!
மேலே காணும் புகைப்படத்தை ஒருமுறை பாருங்கள். எனது பிரத்யேக கணினியில் ‘Wall paper’. படமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நான் உபயோகித்து வரும் படம். அவ்வப்போது படங்களை நான் மாற்றுவதும் உண்டு. ஆனால், எனது கணினியில் Wall paper படமாக அதிக நாள் ஓடிய படம், ஓடிக்கொண்டிருக்கும் படம் இதுவே! டாக்டர் கலாம் இருக்கிறார். கணினி முன் உட்கார்ந்து ஏதோ வேலை செய்துகொண்டிருக்கிறார்! சரி! இந்தப் படத்தில் வேறு என்ன செய்தி இருக்கிறது என்ற சந்தேகம் இதைப் பார்ப்பவர்களுக்கு எழக்கூடும்!
மிக மிகச் சிலருக்கே வயது அதிகம் ஆக ஆக முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். வயது ஏற ஏற அவர்களது அழகு கூடிக்கொண்டே போகும். இதைத்தான் ‘தேஜஸ்’ என்பார்கள். தங்களது எண்ணங்களாலும் செயல்களாலும் அவர்களது ஆன்மா சேர்த்துவைத்திருக்கும் சக்தி அது! அவர்களது ஆத்ம சக்தியின் பிரதிபலிப்பே தேஜஸ்! அந்த தேஜஸ் டாக்டர் அப்துல் கலாமின் முகத்தில் ஒவ்வொருவரும் பார்க்கக்கூடும்! அந்த தேஜஸ் தெரிவதை கலாம் அவர்களின் எல்லாப் புகைப்படங்களிலுமே உணர முடியும்! ஆனால், அதற்கு மேலும் இப்படத்தில் வேறு என்ன சிறப்பு இருக்கிறது எனக் கேட்கத் தோன்றும்!
அவரது ஐந்தாண்டுகால குடியரசுத் தலைவர் பதவியின் கடைசி நாளன்று எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். ‘குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் கடைசி நாள்’ என்ற தலைப்பில் 24, ஜுலை, 2007 அன்று தில்லி ராஷ்டிரபதி பவனில் இருந்து பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம்! (Official Picture)இதுநாள் வரை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் புகைப்படம். நன்றாக அவரது முகத்தைப் பாருங்கள்… ஒரு புன்சிரிப்பு, ஒரு குழந்தையின் கைகளுக்கு முதன்முதலில் ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் அதை எப்படி ஆர்வத்துடன் கையாளுமோ அதுபோல் ஓர் ஆர்வம், ஓர் உற்சாகம்! இத்தகைய புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் எனக்குள்ஒரு புத்துணர்ச்சியும் உத்வேகமும் பிறக்கின்றன என்பதாலேயே கடந்த 10 ஆண்டு காலமாக அதை எனது கணினி Wall paper–ஆக உபயோகித்து வருகிறேன். குறிப்பாக, சோதனையான காலங்களிலும் எனது மனம் சோர்வுறும் நேரங்களிலும் எனது Wall paper–ல் இடம்பிடித்துவிடுவார். நான் மட்டும்தானா? புகைப்படத்தை நீங்களும் ரசிக்‘கலாம்’.
நினைத்துப் பாருங்கள், பெரும் பதவி வகிக்கும் நமது அரசியல் தலைவர்களுள் யாராவது தனது ‘அலுவலகத்தில் கடைசி நாள்’ – அன்று இத்தகையப் புன்முறுவலோடு உட்கார்ந்திருப்பார்களா? அது மிகச் சந்தேகமே! தனது வாழ்க்கையின் கடைசி நாள் வரை பதவியில் இருக்க வேண்டுமே, மீண்டும் தெருத் தெருவாகத் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்ல வேண்டுமே, முறைகேடுகளையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் எப்படி சந்திப்பது? எதிர்க்கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் என்ன பதில் சொல்வது? மீண்டும் பதவிக்கு வருவோமா? என்ற பதற்றமும் பயமும்தான் அவர்கள் முகத்தில் இருக்க முடியும் என்றே நினைக்கிறேன்! இந்த முகத்தைக் கொண்டு கேமரா முன் எப்படி உட்காருவது என்று, அதைத் தவிர்த்தேவிடுவார்கள் என்பதுதான் நிதர்சனமாக இருக்க முடியும்! நான் எதற்காக இத்தனை ஆண்டுகள் இப்படத்தை ‘Wall paper’ஆக வைத்திருக்கிறேன் என்பதற்கான விளக்கம் தங்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் என நம்புகிறேன்!
தெருத் தெருவாக போஸ்டர் ஒட்டி, கட்அவுட் வைத்து ஊர்ப் பணத்தைக் கொள்ளையடித்து, ஊழல் பணத்தில் ஊறித் திளைத்து வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா அல்லது ஒருவர் வாழ்ந்து மறைந்த பிறகு ஊர் மக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் அவருக்கு தட்டிகள் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்துமாறு வாழ்ந்து மறைவது வாழ்க்கையா? நமது அரசியல்வாதிகள் சிந்திக்‘கலாம்’!
அக்டோபர் 9-2003 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் அப்துல் கலாம் அவர்களை முதன்முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அறையின் உள்ளே நுழைந்தும், என்னைப் பார்த்து கைகொடுத்தவர் என்னிடம் பேசுவதற்கு முன்பே, எனது பையனைப் பார்த்து (அப்போது அவன் 1-ம் வகுப்பு அல்லது 2–ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன்) ‘‘என்னடா, எப்படி இருக்கறே? என்ன படிக்கறே?’’ –எளிய மிக மென்மையான குரலில் கேட்டார்.
அவருடைய பேச்சு ஓர் எளிய கவிதைபோல இருந்தது. அவரது எளிமை என்னை வசீகரித்தது. PSLV–யில் ஆரம்பித்து, அக்னி, பிரத்வி, ஆகாஷ், திரிசூல்… என்று உலகம் வியக்க ராக்கெட்டுகளை விண்ணில் பறக்கச் செய்தவர், அமெரிக்கா உள்பட பல வல்லரசு நாடுகளின் கழுகுப் பார்வையில் மண்ணைத் தூவி பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனையை நடத்திக்காட்டியவர்… அவரது குரலா இது? அவ்வளவு மென்மையாக இருந்தது அவரது பேச்சு!
ஆனால், அதுதான் எனது ஆதங்கமே! அவரின் சுயசரிதை நூல் ‘அக்னிச் சிறகுகள்’ பற்றிப் பேசினேன். ‘‘உங்களுடைய புத்தகத்தில் உங்கள் இளமைப் பருவத்தை முதல் இரண்டு மூன்று பகுதிகளுக்குள்ளாகவே முடித்து விட்டீர்கள். பெரும்பகுதி அறிவியல், விஞ்ஞான ஆராய்ச்சிகள், ராக்கெட் தயாரிப்புகள், அது சம்பந்தப்பட்ட வெற்றி தோல்விகள்… இதுபற்றியே எழுதியிருக்கிறீர்கள். தங்களது தாய், தந்தை, உறவினர், வறுமை, பள்ளிப் பருவம், இறை நம்பிக்கை ஆகியவற்றை இன்னும் விலாவாரியாக அதிகமாக எழுதியிருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது! உளவியல்ரீதியாக அது மாணவர்களுக்கும், நாட்டிற்கும் இன்னும் பெரிய செய்தியை சொல்லியிருக்க முடியும் என்று நினைக்கிறேன். உங்கள் வாழ்க்கை மொத்தமுமே ஒரு பெரிய பாடம்! எனவே உங்கள் இளமைப்பருவ அனுபவங்களை மட்டும் இன்னும் விலாவாரியாக எழுதி அது மட்டுமே ஒரு தனிப் புத்தகமாக வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்’’ என்றேன்! புன்முறுவலுடன் ‘‘யோசிக்கிறேன்’’ என ஒரே வரியில் பதில் அளித்தார்!
இதை ஞாபகம் வைத்திருந்தாரா என்பது தெரியாது. சுமார் ஒன்பது வருடங்கள் கழித்து கலாம் சாரின் அறிவியல் ஆலோசகர் நண்பர் பொன்ராஜ் அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு! “சார் கூட நேற்று ‘டிஸ்கஷன்’லே இருந்தோம். அவரது Autobiography–யை முழுக்க முழுக்க கார்ட்டூன் வடிவில் கொண்டு வரலாம் என்று நினைக்கிறார். அதற்கு நீங்க கார்ட்டூன்கள் வரைந்து தந்தால் நல்லா இருக்கும்–னு நினைக்கிறார், உங்களால் முடியுமா? ன்னு கேட்கச் சொன்னார்” என்றார்.
“இது என்ன கேள்வி சார்? சந்தோஷமாகப் பண்ணித் தருகிறேன் என்று சாரிடம் சொல்லுங்கள்” என்றேன்! மீண்டும் ஓரிரு நாள்கள் கழித்து பொன்ராஜ் அவர்களிடமிருந்து மீண்டும் அழைப்பு! “கலாம் சாரே அதற்கான ‘மேட்டர்’ ஐ தயாரித்துத் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்” என்று பதிலளித்தார்.
இந்த உரையாடல் நடந்து முடிந்து சுமார் நான்கைந்து மாதங்கள் ஆகியிருக்கும்! கலாம் சாரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை! நானே நண்பர் பொன்ராஜ் அவர்களுக்கு போன் செய்து ‘‘என்னவாயிற்று சார்? ‘மேட்டர்’ எழுதித் தருகிறேன் என்றாரே, மறந்து விட்டாரா?” என்றேன். “சார் மறக்கவில்லை, ஆனாலும் ‘இன்னும் அவர் ஆரம்பிக்கவே இல்லை. எங்கே மதி, தினசரி ஒரு நிகழ்ச்சி! கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் ஓடிக் கொண்டே இருக்கிறோம்” என பதிலளித்தார்! இதே மாதிரி மேலும் ஒரு வருடம் கழித்தும் ஞாபகப்படுத்தினேன். மீண்டும் அதே பதில்தான் கிடைத்தது!
என்ன செய்வது? மாணவ சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையால் நாள் விடாமல் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அவர்களைச் சந்திக்கவே தனது வாழ்நாட்களை செலவழித்த கலாம் சாரால் அந்தப் புத்தகத்திற்கான மேட்டர்–ஐ இறுதி வரை தரவே முடியவில்லை! எங்கேயோ படித்த பழமொழி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது! ‘விதைத்தவன் உறங்கலாம்; விதைகள் உறங்குவதில்லை’ மேலும் ஒரு பழமொழி, நம்மாழ்வார் முழங்கியது – ‘முயற்சி என்பது விதைபோல… அதை விதைத்துக்கொண்டே இரு… முளைத்தால் மரம்… இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்’.
தனது வாழ்நாள் முழுவதும் முயற்சி என்ற விதைகளை விதைத்துக்கொண்டே இருந்தார் கலாம். மரமோ, உரமோ மொத்தத்தில் நம் மண்ணில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அயராது உழைத்திருக்கிறார்! அவரது வாழ்க்கை முழுவதுமே ஒரு பாடம்! மாணவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும்தான். படிக்‘கலாம்’!
அருகருகே இடது வலமாக, அல்லது வலது இடமாக உட்கார்ந்து அவரோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு நான்கு முறை கிடைத்திருக்கிறது. அருகிலிருந்து பார்க்கும்போது அவரது முகம் எனக்கு ஒரு குழந்தையைப் பார்ப்பது போலவே இருக்கும்! ‘என்ன ஒரு கவர்ச்சி? எப்படி இத்தனைப் பேரை, இத்தனை மாணவர்களை, ஏழை, பணக்காரர், ஜாதி, மதம், இனம், மொழி, பெரியவர், சிறியவர் என்கிற அத்தனை வேறுபாடுகளையும் மீறி கடந்து, கோடிக்கணக்கானவர்களை வசீகரித்து வைத்திருக்கிறார்?’ என்று நினைத்துப்பார்க்கும்போது சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய சம்பவம்தான் என் நினைவுக்கு வருகிறது!
History of Parliament of Religions என்ற புத்தகம் குறிப்பிடுகிறது – சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ மதச் சபையில் ‘சகோதரிகளே, சகோதரர்களே…’ என்றதும், கூடியிருந்த 6,000 பேரும் இரண்டு நிமிடம் கைதட்டி மகிழ்ந்தார்கள்! அச்சபையில், ‘சகோதரிகளே, சகோதரர்களே’ என்ற வார்த்தைகள் ஐந்தாவதாகப் பேசிய மிஸ் அகஸ்டா, 20–வது பேச்சாளரான பேராசிரியர் மினாஸ் செராஸ் ஆகியோரும் பயன்படுத்தினர். 23–வதாக சுவாமிஜி பேசியபோது மட்டும் மக்களிடையே அப்படி ஓர் உத்வேகம், எழுச்சி ஏற்பட்டதற்குக் காரணம் என்ன? ‘சகோதரிகளே, சகோதரர்களே’ என்பதைப் பிறர் சம்பிரதாயமாக உச்சரித்தபோது சுவாமிஜி இதயத்தின் ஆழத்திலிருந்து அதை உரைத்தார். எதுகை மோனைகளுடன் கவர்ச்சியாகப் பேசுவது பெரியதல்ல. தங்கள் பேச்சுக்குத் தாங்களே பிரதிநிதி ஆகிக் காண்பிக்க வேண்டும். பிரதிநதி புதுக் கருத்துகளுக்காக ஏங்குவார். ‘என் மூலம் இம்மக்களுக்கு ஏதாவது கூறு’ என அவரது இதயம் இறைவனிடம் ஏங்குகிறது; ஏக்கம் பிரார்த்தனையாகிறது; புதுக் கருத்துக்கள் ஊற்றெடுக்கின்றன. அவை ஆக்கபூர்வமாகவும் சக்திமிக்கதாகவும் இருக்கும்.
அந்த வகையில் தனது எண்ணங்களுக்கும் பேச்சுகளுக்கும் இன்னும் சொல்வதென்றால் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் மூலம் அவர் நம்மிடம் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசி, அதற்குப் பிரதிநிதியாக ஆகியிருந்தார் கலாம்! உதடுகளில் இருந்து வராமல் இந்தப் பிரதிநிதியின் வார்த்தைகள் இதயத்திலிருந்து வந்தன! ஆகவேதான் அவருக்கு இப்படி ஒரு கவர்ச்சி! அவர் எங்கு சென்றாலும் இந்தக் கூட்டம் இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு!
சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டும்போதுதான் பலர் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான விஷயம் எனது நினைவுக்கு வருகிறது! இங்கு, அதை உங்களுக்குச் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். ஒரு விழாவில் காலம் சென்ற பிரபல இயக்குநர் பாலச்சந்தர் அவர்கள் கலாம் அவர்களை வாழ்த்திப் பேசும்போது, அவர் வாங்கிய விருதுகளை, பட்டங்களையெல்லாம் பட்டியலிட்டு ‘இவர் Doctor of Science, Doctor of Engineering, ஆசிரியர், விஞ்ஞானி, அணு விஞ்ஞானி, இந்திய ராக்கெட் டெக்னாலஜியின் தந்தை, பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா, மக்கள் குடியரசுத் தலைவர்… Still he is a bachelor!’ என்று முடித்தார்.
ஏற்புரையாற்ற கலாம் எழுந்து வந்தார். ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று தனது பேச்சை ஆரம்பித்தவர், ‘நண்பர்களே! பாலச்சந்தர் அவர்கள் சொன்னதில் ஒரு திருத்தம், நான் ‘பேச்சுலர்’ அல்ல, ஒரு பிரம்மச்சாரி’ என்றார்!
கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது! ஆஹா! எவ்வளவு பெரிய விஷயம்? ‘பேச்சுலர்’ என்பதற்கும் பிரம்மச்சாரி என்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பது அப்போதுதான் பலருக்குப் புரிந்தது! கலாம் அவர்களைப் பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்தச் சம்பவத்தை நான் பேச மறப்பதில்லை!
‘பிரம்மச்சரியம் என்பது கத்தி மேல் நடப்பது போன்ற மிகச் சிரமமான காரியம்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார். இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இத்தனை சாதனைகளையும் பிரம்மச்சரியம் என்ற கத்தியின் மேல் நடந்துகொண்டே சாதித்திருக்கிறார் கலாம். மனிதராகப் பிறந்தார், கர்மயோகியாக வாழ்ந்தார், இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது முற்றும் துறந்த ஒரு ஞானியாகவே மறைந்தார் என்பது உறுதி! வணங்கப்பட வேண்டிய வாழ்க்கை. வணங்‘கலாம்’!
2008, ஏப்ரல் 24 – ‘தினமணி’யின் முதல் பக்கத்தில் வெளி வந்துகொண்டிருந்த எனது ‘அடடே’ பாக்கெட் கார்ட்டூன்களை ஆறு தொகுப்புகளாக கிழக்குப் பதிப்பகம் மிகச் சிறப்பாக வெளியிட்டது. ஆறு புத்தகங்களையும் வெளியிட்டு சிறப்புச் செய்தார் மக்கள் குடியரசு தலைவர் டாக்டர் கலாம். மதியம் 3:00 to 4:00. மொத்தமே ஒரு மணி நேர நிகழ்ச்சிதான். ஆனால் நெகிழ்ச்சிகள் பல!
இந்தப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின்போது, வரவேற்புரை ஆற்றிய தினமணி ஆசிரியர், ‘ஓவியர் மதி’ என்றே என்னைக் குறித்துப் பேசினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கலாம் அவர்கள் என்னிடம் திரும்பி ‘என்ன? அவர் உங்களை ஓவியர், ஓவியர்… என்றே அழைக்கிறார்! அவர் தெரிந்துதான் பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா? ஒரு ஓவியருக்கு ஓவியம் வரையும் திறமை இருந்தால் மட்டும் போதும். ஆனால், ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் வேலை அத்தோடு முடிந்து போவதில்லை. மிகக் கடினமானதாயிற்றே! ஓவியத் திறமையோடு தினசரி பல்வேறு விஷயங்களைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்; அதை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும்; கார்ட்டூனுக்கான ஐடியா பண்ண வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக இறுதியில் அதனுடன் நகைச்சுவை உணர்வையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஆனால், இப்படி உங்களை ஓவியர் என்று அழைக்கிறாரே!’ என்று என்னிடம் ஆதங்கப்பட்டார்.
புத்தக வெளியீடு நடந்து முடிந்த பிறகு எனது பேச்சைப் பேசி முடித்தேன். அதற்குப் பிறகு பேச வந்த கலாம் அவர்கள், விழாவில் என்ன பேச வேண்டும் என்று ஏற்கெனவே அவர் தயாரித்து எடுத்து வந்திருந்த விஷயங்களைப் பேசினார். அதைப் பேசி முடித்த பிறகு ‘நண்பர்களே, இங்கு ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கார்ட்டூனிஸ்ட்டுகளை தமிழில் ‘கருத்துப்பட ஓவியர்’ அல்லது ‘கேலிச் சித்திரக்கலைஞர்’ என்று குறிப்பிடுகிறார்கள். வெறும் கருத்தைச் சொல்வதோ அல்லது ஒரு விஷயத்தைக் கேலி செய்வதோ ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் பணி அல்ல. அவர் அதன் மூலமாக இந்தச் சமுதாயத்திற்கு தனது உயரிய கருத்துகளை பாமரனுக்கும் புரியும் வண்ணமாக சொல்ல முயற்சிக்கிறார். பெரிய பெரிய கட்டுரைகள் மூலம் சொல்லில் புரிய வைக்க வேண்டிய விஷயங்களைக்கூட சில விநாடிகள் பார்த்தால் போதும், மிக எளிதாகப் புரிந்துவிடும் வகையில் ஒரு சிறிய படம் மூலம் விளக்கிவிடுகிறார்! எனவே, ஒரு கார்ட்டூனைக் ‘கருத்துப்படம்’ என்றோ ‘கேலிச் சித்திரம்’ என்றோ சொல்வது அதற்கு முழுமையான பொருள் தரவில்லை. ஆகவே, இங்கு யாரும் தமிழ் அறிஞர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்,‘கார்ட்டூனிஸ்ட்’ என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நானும் என்னால் முடிந்த அளவு யோசிக்கிறேன்’ என்று கேட்டுக்கொண்டு தனது பேச்சை நிறைவு செய்தார்!
விழா முடிந்ததும், அவரின் Speech Copy (6 பக்கங்கள்) உடனடியாக எனது கைகளில் கொடுக்கப்பட்டது. அதில் அவர் கடைசியாகப் பேசிய இந்த விஷயம் இடம் பெறவே இல்லை.
அவர் ஒரு பாரத ரத்னா, மக்கள் குடியரசுத் தலைவர். இந்த உயரத்திற்குச் சென்றவருக்கு இந்தப் புத்தக வெளியீடு என்பது ஒரு சின்ன விஷயம். (எனது விழா முடிந்ததும் இன்னொரு விழாவிற்கு உடனடியாகச் செல்ல வேண்டும். அன்று இரவே தில்லிக்கு திரும்புகிறார்). இவ்வளவு நேர நெருக்கடி இருக்கும் போதும்கூட வரவேற்புரை ஆற்றியவரின் பேச்சைக் கூர்ந்து கவனித்து, அதிலுள்ள தவறைக் கண்டுபிடித்து, அதைத் தனது பேச்சின் முடிவில் சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல், ‘கார்ட்டூனிஸ்ட்டிற்கான சரியான தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க முயலுங்கள்’ என்று கேட்டுக்கொண்டது என்னை வியக்கச் செய்தது. அவர் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவு கவனம் செலுத்தினார், அக்கறை காட்டினார், அர்ப்பணிப்புடன் இருந்தார் என்பதற்கு இது ஒன்றே உதாரணம்!
சரி! ‘கார்ட்டூனிஸ்ட்’ தமிழில் எவ்வாறு அழைக்கலாம்? கலாம் அவர்கள் வேண்டுகோள் விடுத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப் போகிறது! யோசிக்‘கலாம்’!
விழாவில் வெளியிட்ட எனது ஆறு நூல்களையும் பெற்றுக்கொள்ள ஆறு முக்கியப் பிரமுகர்கள் (Celebrities), இலங்கை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி ஆத்மகனாநந்தர் மகராஜ், எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்கி பத்திரிகையின் ஆசிரியர் ராஜேந்திரன், பிரபல நடிகை ஆச்சி மனோரமா, பட்டிமன்றப் புகழ் பேச்சாளர் சாலமன் பாப்பையா, பிரபல நசைச்சுவை நாடக நடிகர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா கிரேஸி மோகன், The New Indian Express குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா மற்றும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கலாம் சாரையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக மேடையில் இருந்த ஒன்பது பேரையும் வரவேற்கும் விதமாக பூங்கொத்து கொடுப்பதற்காக ஒன்பது குழந்தைகளை ஏற்பாடு செய்திருந்தேன். அவ்வாறு பூங்கொத்து கொடுத்து முடித்தவுடன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும்விதமாக ஓர் புகைப்படம் எடுத்துக்கொள்ள கலாம் சாரை எழுந்து வருமாறு வேண்டுகோள் விடுத்தேன். மகிழ்ச்சியுடன் தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்த கலாம், குழந்தைகளோடு நெருங்கி நின்று அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளத் தயாரானவர், திடீரென ஆச்சி மனோரமாவைத் திரும்பிப் பார்த்து, ‘ஆச்சி, நீங்களும் புகைப்படத்திற்கு வாருங்கள். குழந்தைகள் அனைவருக்கும் உங்களையும் ரொம்பப் பிடிக்குமே…’ என்று அழைத்தார். மனோரமா அவர்கள் விழா முடிந்ததும் ‘இப்படி குழந்தைகளுக்கு என்னையும் பிடிக்கும் என்று சொல்லி என்னை நெகிழச் செய்து விட்டாரே! என்ன ஒரு மனசு! என்ன ஒரு எளிமை! என்ன ஒரு பண்பு…!’ என்று இது குறித்து என்னிடம் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்ந்தார்.
தன்னுடனும் ஆச்சியுடனும் குழந்தைகள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பிப் பார்த்து மேடையில் உட்கார்ந்திருந்த மற்ற பிரபலங்கள் அனைவரையும் ‘இப்ப நீங்களும் வாங்க, குழந்தைகளோட எல்லோரும் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம்’ என்று அழைத்தார். அவர் விருப்பத்திற்கு ஏற்ப அப்படி ஒரு புகைப்படமும் எடுக்கப்பட்டது. குழந்தைகள் முதல் ஆச்சி வரை அன்று அவர் காண்பித்த அன்பையும் அக்கறையையும் மேடையிலிருந்த ஒவ்வொருவரும் அனுபவித்து அறிந்தனர்! அந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் யாராவது அன்று அந்த மேடையில் இருந்திருந்தால் நீங்களும் அவர் காட்டிய அன்பை அனுபவித்து இருப்பீர்கள்! அனுபவிக்‘கலாம்’!
சரி, இந்த இடத்தில் ஒரு சின்னக் கதை! ஆனால் நிஜக் கதை! அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்கள் நான் சொல்ல வரும் காட்சியை ஒரு முறையாவது ரயில் நிலையங்களில் கண்டிருப்பார்கள்! நன்றாக கஞ்சி போட்டு, விரைப்பாக அயர்ன் பண்ணினச்சட்டை, வேஷ்டியில் ஓர் உருவம் வண்டி கிளம்புவதற்குச் சரியாக 10 நிமிடங்களுக்கு முன் மெதுவாக நடந்துவரும்! அருகே நான்கைந்து காவலர்களும் வருவார்கள்! இதன் பின்னே ஒரு முப்பது – நாற்பது பேர் வாயைப் பொத்திக்கொண்டு பின்பக்கம் கையை கட்டிக்கொண்டு, மௌனிகளாக ஏதோ நல்லடக்கத்திற்குச் செல்வதுபோல் நடந்து வருவார்கள்! கிட்டத்தட்டப் பார்ப்பதற்கு ஒரு சவ ஊர்வலம்போலவே இருக்கும்!
நாம் யாரிடமாவது ‘இதென்ன ஊர்வலம்? ஒருவர் பின்னால் நடைப்பிணங்கள்போல் நாற்பது பேர் போகிறார்களே!’’ என்று விசாரித்தால்தான். முதலில் செல்வது ஓர் அமைச்சர், பின்னால் செல்லும் கூட்டம், வட்டம், மாவட்டத்திலிருந்து வார்டு கவுன்சிலர்கள் வரை வழியனுப்ப வந்திருக்கும் விசுவாசிகள் என்றத் தகவல் கிடைக்கும்!
‘ஏன் சார், மதுரைலேருந்து சென்னைக்குத்தானே போறாரு! இதுக்கா இத்தனை அமர்க்களம்?’ என்று கேட்டால், ‘என்ன சார் அரசியல் புரியாமப் பேசறீங்க? நீங்களும் நானும் அன்றாடம் காய்ச்சி! அவர் அப்படியா? அமைச்சர். சரி, இதுதான் இறுதி மரியாதைனு நினைச்சுடாதீங்க! இன்னும் ரெண்டே நாள்ல சென்னைலேருந்து திரும்புவார்! அவர் பல்லு தேய்ச்சாரா, தேய்க்கலையான்னுகூடத் தெரியாது! அவரை வரவேற்க இதே கூட்டம் அவர் கோச் (Coach) வந்து நிற்கும் இடத்தில் இளிச்சுக்கிட்டே நிற்கும், இது முதல் மரியாதை!’
‘ஆனால் வழியனுப்பவோ, வரவேற்கவோ வந்தவன் ஒருவன்கூட ‘பிளாட்ஃபாரம்’ டிக்கெட் எடுத்திருக்க மாட்டான்’ என்ற கூடுதல் தகவலும் கிடைக்கும்!
ஒரு சாதா தலைவருக்கே இத்தனை அமர்க்களம்! ஆனால், நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி உயரத்திற்கு உயர்ந்த ஒருவர் காட்டிய அன்பையும் பண்பையும் பாருங்கள்! அரசுப் பதவி வகிப்பவர்கள் மட்டுமல்ல, ஒரு அலுவலகத்தில் Team leader–ஆக இருப்பவர்களுக்குக் கூட இத்தகையப் பண்புகள் தேவை! கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்‘கலாம்’! சரி! கதையில் வந்த இத்தகைய அரசியல் தலைவர்களை எப்படித்தான் மாற்றுவது? மரித்துப்போன அரசியல் மாண்புகளை எப்படித்தான் மீட்டெடுப்பது? முதலில் நல்ல விஷயங்களை நாம் கற்க‘கலாம்’! பிறகு அவர்களுக்குக் கற்பிக்‘கலாம்’! முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை! முயற்சிக்‘கலாம்’!
‘‘தெய்வத்தால் ஆகாதெனின் முயற்சிதன்
மெய் வருந்தக் கூலி தரும்’’
என்பது வள்ளுவனின் வாக்கு ! எனவே வெற்றி உறுதி! நாம்தான் முதலில் களத்தில் இறங்கவேண்டும்! இறங்‘கலாம்’!
இதேபோல் கிரேஸி மோகன் அவர்களுக்கும் அந்த விழாவில் ஓர் அனுபவம்! கலாம் சார் மறைவுக்குப் பின்னர் அதை தினமலர் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகளில் அவருக்கே உரிய பாணியில் அதை எழுதியிருந்தார்! ‘ஹாய் கிரேசி’ – கலாமின் குழந்தை மனம் பற்றி கிரேஸி மோகன் என்றத் தலைப்பில் வந்த செய்தியை அப்படியே இங்கு தருகிறேன்!
‘சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். கார்ட்டூனிஸ்ட் மதி என்னை ஃபோனில் கூப்பிட்டு, தன்னுடைய கார்ட்டூன் படைப்புகளை ஆறு தொகுதிகளாக அப்துல் கலாம் சார் வெளியிடப் போவதாகவும், அதைப் பெறும் பாக்கியம் படைத்த அந்த ஆறு பேரில் அடியேனும் ஒருவன் என்றும் கூறினார். என்னைத் தவிர மீதி ஐந்து பேரும் சிங்கங்கள் (ஜெயகாந்தன், ராமகிருஷ்ணா மட் இலங்கை ஸ்வாமிஜி, மனோரமா ஆச்சி, சாலமன் பாப்பையா, கல்கி ராஜேந்திரன்).
நான் ஒருவன்தான் அந்தக் கும்பலில் ஓடுற நரியில ஒரு நரி குள்ள நரி டோய். வர ஒப்புக்கொண்டுவிட்டாலும், வெட்கம் பிடுங்கித் தின்னுது… பெரியவாள்லாம் பேசறச்சே.., பொடிப் பசங்க விஷமம் பண்ணக் கூடாது என்று என் வீட்டுப் பெரியவர்கள் அடிக்கடி சொல்வது என் காதில் ஒலித்தது. மேலே குறிப்பிட்ட, ஐந்து சிங்கங்களையும் நிச்சயம் அப்துல் கலாம் சார் நன்கு அறிந்திருப்பார். ‘யார், இந்த அரை டிராயர்?’ என்று என்னைக் கேட்டுவிடுவாரோ என்ற அச்சம். மியூசிக் அகாடமி மேடையில், தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே, 10 ஆண்டுகளுக்கு முன் பரதமாட சதைக் கொழுப்பும் ஜாஸ்தி. அதுபோல் நான் ஆடாவிட்டாலும் என் நீ (KNEE) ஆடியது. (அப்துல் கலாம் அய்யா வெளியிடுவதை, ஸ்நானப் பிராப்திகூட இல்லாத நீ வாங்கிக் கொள்ளப் போறியா? பாத்துடுறோம் ஒரு (கைக்கு பதில்) கால் என்று என்னை என் KNEE மிரட்டியது)!
சரியாக 3 மணிக்கு ரதகஜ துரகபதாதிரிகளோடு (செக்யூரிட்டி கார்ட்ஸ்) அப்துல் கலாம் சார் லிட்ரலாக மேடைக்குத் தாவி ஏறினார். ‘எம் பேர் கிரேஸி மோகன். என்னை உங்களுக்கு தெரியாது! அதனால என்ன இப்போ உங்களை எனக்குத் தெரியுமே’ – என்று நான் யோசித்து வைத்திருந்ததைச் சொல்வதற்குள், “ஹாய் கிரேசி… ஹவ் ஆர் யூ?” என்று சொல்லி என் கன்னத்தைக் கிள்ளினார்! (‘கன்னத்தில் கிள்ளிவிட்டால்...’ என்று மனதுக்குள் பாடிக் கொண்டிருந்தேன்). ஆனால் எனக்கு கூச்செரிந்தது கைகளில்… பிறகு மனோரமா ஆச்சியுடன் 5 நிமிடம் பேசினார் அந்த விஞ்ஞானி. பின் விழாவுக்கு வந்த குழந்தைகளை மேடைக்கு அழைத்து அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ‘Simplicity Thy Name is Abdul Kalam’… என்று நெகிழ்ச்சியுடன் எழுதியிருந்தார் கிரேஸி மோகன். ஆம், கிரேஸி மோகன் அவர்கள் சொல்வதுபோல அவரது எளிமை எல்லோரையும் வியக்கச் செய்தது! வியக்‘கலாம்’!
விழா நடந்துகொண்டிருக்கும்போதே எனக்கு திடீரென்று ஒரு கவலை! எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு அன்று 75-வது பிறந்தநாள் (ஏப்ரல் 24, 2008). இசைஞானி இளையராஜா முன்னின்று அந்த விழாவை நடத்துகிறார். எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அடுத்த நிகழ்ச்சி அது. வேறொரு அரங்கத்தில் நடைபெறுகிறது. அந்த விழாவுக்கும் கலாம் அவர்கள்தான் தலைமை தாங்கிச் சிறப்பிக்கவிருக்கிறார். சென்னை டிராஃபிக், அதுவும் அலுவலகங்கள் முடியும் நேரம் எப்படி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!
எனக்கு இடதுபுறமாக அமர்ந்திருந்த ஜெயகாந்தன் அவர்களைப் பார்த்துச் சொன்னேன் கேட்டேன். ‘சார், அடுத்த விழா உங்களுடையது. கலாம் சாரோ வேகமாக நடப்பார். சாலைகளும் பாதுகாப்பு காரணமாக அவருக்குத் தயார் செய்து வைத்திருப்பார்கள்! எனவே பறந்து மிக விரைவாக உங்களது விழா அரங்கிற்குச் சென்றுவிடுவார். ஆனால், நீங்கள் தற்போதெல்லாம் மெதுவாகத்தான் நடக்கிறீர்கள். அதனால் உங்களது விழாவுக்கு நீங்களே தாமதமாகச் சென்றுவிடக் கூடாது என்று எனக்கு பயமாக இருக்கிறது. பேசாமல் நீங்கள் கலாம் சாருடன் அவரது காரிலேயே சென்றுவிடுங்கள், அது நல்லது.’ என்றேன். பதிலுக்கு அவர் ‘நீங்க சொல்வது சரிதான். ஆனால், அவரிடம் எப்படிக் கேட்பது. தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?’ என்று என்னிடம் கேட்டார். பதிலுக்கு நான் ‘அப்படி யோசிக்காதீங்க சார்! நானே அவர்கிட்டே கேட்கிறேன்’ என்று சொல்லி எனக்கு வலதுபுறம் அமர்ந்திருந்த கலாம் சாரைப் பார்த்து இந்த விஷயத்தைச் சொன்னேன். ‘ஓ நல்லது, அவர் எனது காரிலேயே வரட்டும்’ என்றார்.
தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டதும் ஜெயகாந்தன் அவர்களின் கையைப் பிடித்து அப்துல் கலாம் சாரிடம், ‘சார் ப்ளீஸ், உங்க ஸ்பீடுக்கு சாரால் நடக்க இயலாது. கொஞ்சம் மெதுவாக அழைத்துச் செல்லுங்கள் சார்’ என்றேன். ‘கவலையேபடாதீங்க மதி, ஜே.கே சார்… வாங்க’ என்று அவரது கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
அன்று விழா நாயகர், மாபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் காண்பித்த அதே அன்பையும் அக்கறையையும் அவர் சாதாரண மனிதர்களிடமும் கொண்டிருந்தார் என்பது அவரது கடைசி நாள் வரை நன்றாகத் தெரிந்தது. ஷில்லாங் பயணத்தின்போது தனக்கு முன்பாகச் சென்ற காரில் நின்று கொண்டே பயணித்த ஒரு பாதுகாப்பு வீரரை, ‘அவரை உட்காரச் சொல்லுங்கள்…’ உட்காரச் சொல்லுங்கள் என்று தனது காரிலிருந்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். அப்படியும் கேட்காத அந்த வீரரை ஷில்லாங் சென்றடைந்ததும் அழைத்து ‘ஏன் இப்படி நான் பலமுறை சொல்லியும் நின்றுகொண்டு வந்தீர்கள்?’ என்று வருத்தப்பட்டிருக்கிறா பதிலுக்கு அவரோ ‘சார், உங்களுக்காக ஒரு மணி நேரமென்ன, 6 மணி நேரம்கூட நின்றுகொண்டு வருவேன்’ என்று சொன்னதைப் பத்திரிகைகள் வாயிலாக அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்நாள் முழுவதும் பெரிய மனிதர், சிறிய மனிதர் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் நேசித்த அவரது பேரன்பு இங்கு இந்த இரு நிகழ்வுகள் மூலமாக நன்றாகவே நமக்குப் புரியும்!
கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் அன்பு ஒன்றுதான்! எவ்வளவு கொடுத்தாலும் தேய்வதற்குப் பதிலாக வளரும்! தனது வாழ்நாள் முழுவதும் அன்பை அள்ளி அள்ளிக் கொடுத்தார்! மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்! மாபெரும் மனிதர் கூட்டத்தைச் சம்பாதித்தார்! அன்பு! அன்பு! அன்பு! நாமும் கொடுக்‘கலாம்’! சம்பாதிக்‘கலாம்’!
‘You must be the change you want to see in the world’– என்று மகாத்மா காந்திஜி கூறினார். அக்கினிக் குஞ்சாக இவ்வுலகில் பிறந்தார். ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் என்ற பெயரில் வாழ்ந்து காட்டினார். மீண்டும் விண்ணுலகிற்குப் பறந்து சென்றுவிட்டார்!
‘Generations to come will scarce believe that such a one as their ever in flesh and blood walked upon this earth’ – என்று மகாத்மா காந்தி குறித்து ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறியிருந்தார்! இன்று அவர் இருந்திருந்தால், காந்திஜியோடு கலாமையும் சேர்த்திருப்பார்!
• ‘எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால், கழுகு மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்’ – என்றார். தடைகளாகிய மேகக் கூட்டங்கள் அனைத்தையும் பிளந்து விண்ணை நோக்கிப் பாய்ந்தன அவரது விண்கலங்கள்!
• ‘கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களைக் கண்டுபிடிக்க முடியும்’ – என்றார்!. ராமேஸ்வரம் என்ற குட்டித் தீவின் கரைகளைக் கடந்தார், கடல் அளவு சாதனைகளைச் சாதித்தார்!
• ‘தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள் தான்’– என்றார்! தேசத்தின் மகுடமாகவே மாறிக் காண்பித்தார்!
• ‘நீங்கள் சூரியனைப்போலப் பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப்போல எரிய வேண்டும்’– என்றார்! ஒரு சூரியனாகவே மாணவர் சமுதாயத்தினரிடம் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியிருக்கிறார்!
• ‘உங்களுக்குச் சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே பறந்து செல்லுங்கள்’ – என்றார்! தனது ‘அக்னிச் சிறகுகள்’ மூலம் பறந்து காண்பித்தார்!
• ‘பெரிய விஷயங்களுக்காக காத்திருக்கக் கூடாது. கையில் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு பயணத்தைத் தொடங்க வேண்டும்’ – என்றார்! பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது வீடுகளுக்கு சைக்கிளில் பயணித்து பேப்பர் விநியோகம் செய்தவர், பின்னர் மக்கள் குடியரசுத் தலைவராக, செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்!
• ‘கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது’ – என்றார். ஊனமுற்றவர்களுக்கு மிகக் குறைந்த எடையில், செயற்கைக் கால்களை செய்து கொடுத்தார்!
• ‘வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது’ – என்றார். உலகம் முழுவதும் நட்புப் பாராட்டினார்! கனவு கண்டார், உழைத்தார், சிகரங்களைத் தொட்டார்!
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்…
‘இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்துவிடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த லட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தெய்வமாகவும் பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்துகொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய பூஜைக் கிரியை முறைகளாக வைத்துக்கொள்ளும். மனித ஆன்மாவையே அது பலிபீடத்தில் பலியாக்கும். ஆனால், அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றுமே நடக்கப் போவதில்லை…’
மேலும் கூறுகிறார்… ‘மற்ற ஆரிய நாடுகளின் முன்னேற்றத்திற்கு முன்பு, இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? அவள் அறிவாற்றலில் குறைந்தவளா அல்லது திறமையில்தான் குறைந்தவளா? அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றைப் பார். பிறகு அறிவாற்றலில் இந்திய அன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியமா? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்…’
‘நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு’ – என்றார், கலாம்.
நம்மை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பியிருக்கிறார், இன்று பலரையும் உறங்கவிடாமல் செய்திருக்கிறார்! ஒரே வரியில் சொல்வதாக இருந்தால், அவரது வாழ்க்கை முழுவதுமே ஒரு பாடம்!
படிக்‘கலாம்’!
விழிக்‘கலாம்’!
கரைகளைக் கடக்‘கலாம்’!
கழுகைப்போல் பறக்‘கலாம்’!
சூரியனாகப் பிரகாசிக்‘கலாம்’
மொத்தத்தில் சாதிக்‘கலாம்’!
எழுத்தாளர் ஜெயகாந்தனை நான் முதன்முதலில் சந்தித்தது நண்பர் ஒருவரின் 70–வது பிறந்த நாள் விழாவின்போது! அதுவும் சாப்பாட்டுப் பந்தியில் அருகருகே உட்காந்திருந்தோம். ஜே.கே–வைத் தெரிந்து கொள்வதற்கு அவரது நாவல்களைப் படித்திருக்கவேண்டிய அவசியமோ, இலக்கிய அறிவோ ஒருவருக்கு அவசியமே இல்லை! காரணம், அவருடைய முறுக்கு மீசையும், நீண்ட கிருதாவும், சட்டை காலரை மறைக்கும் வண்ணம் வளர்ந்துவிட்டிருக்கும் நீண்ட முடியும், அவருடைய தடித்த ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடியுமே அவரை அடையாளம் காட்டிக் கொடுத்துவிடும், அவர் ஜே.கே என்று!
இலை போடப்பட்டிருந்தது! இன்னும் உணவு பரிமாறப்படவில்லை! லேசாக அவரிடம் பேச்சுக் கொடுத்தேன் ‘‘சார், உங்களை எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை! அறிமுகப்படுத்திக்கொள்ளலாமா?’’ என்றேன். ஒரு புன்முறுவலோடு என்னைப் பார்த்து, ‘‘சொல்லுங்க’’ என்றார். ‘‘என் பெயர் மதி. தினமணி பத்திரிகையில் கார்ட்டூன்கள் வரைந்து வருகிறேன்’’ என்றேன். ‘‘அட, நீங்க தான் மதியா? உங்க முகத்தைத்தான் இப்பப் பார்க்கிறேன். உங்க கார்ட்டூன்களைப் பல வருஷங்களா பார்க்கிறேன்! இன்னிக்கு முதல் பக்கத்துல இந்த ஐடியாவில் கார்ட்டூன் போட்டிருந்தீங்க! உள்பக்க கார்ட்டூன்ல இந்த ஐடியா! நேற்று காலைல வந்த ‘அடடே’ இந்த மாதிரி! முந்தா நேத்து வந்த கார்ட்டூன் ஐடியா, இதுதான்... நான் சொல்லறது, சரியா?'' என்று சரியாக கடைசி நான்கு நாட்கள் வெளியான கார்ட்டூன்களை அப்படியே அதில் வந்த படம், வரிகளை என்னிடம் வர்ணித்தார்! இலையில் ஸ்வீட் வைப்பதற்கு முன்பே எனக்கு ஜே.கே இப்படி நான்கைந்து ஸ்வீட் தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை! ஏனென்றால் ஜே.கேவிடம் பாராட்டைப் பெறுவதென்பது சாதாரண விஷயமில்லை என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதுவும் அவர் பாராட்டிய விதம்தான் என்னை ஆச்சரியப்படுத்தியது!
எனது கார்ட்டூன்களை ரசிப்பவர்கள் 99% பேர், ‘‘சார், நான் உங்க கார்ட்டூன்களுக்கு மிகப் பெரிய ரசிகன். நான் மட்டுமில்லை எனது மனைவி, எனது மகள், மகன், அப்பா, அம்மா… என்று தங்கள் குடும்பத்தினரைத்தான் வரிசைப்படுத்துவார்கள்! ஆனால் ஜே.கே எனது கார்ட்டூன்களை வரிசைப் படுத்தினார்! அவர் பாராட்டைவிட நான் மிக மகிழ்ச்சியடைந்தது அவரது சிந்தனைகள் என்னும் மாபெரும் கணினிக்குள் எனது கார்ட்டூன்களுக்கென்று ஒரு Folder ஒதுக்கி, அதில் எனது Cartoon–களை Save – பண்ணி வைத்திருந்ததுதான். சாப்பாடு முடிந்ததும் எனது மனைவியை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன்! பெயரென்ன? ஊர் என்ன? என்று அன்போடு விசாரித்தார். இவ்வளவே ஜே.கே – யுடனான எனது முதல் சந்திப்பு!
2005, எனது கார்ட்டூன்களின் 2–வது தொகுப்பு ‘டூன் – 2’ தயாராகிக்கொண்டிருந்தது. 2003, ஆகஸ்ட்–ல் வெளிவந்த எனது முதல் தொகுப்புக்கு ‘தினமணிடூன்’ சுமார் 12 பேர்களிடம் அணிந்துரைகள் வாங்கியிருந்தேன். அதில் சோ, கார்ட்டூனிஸ்ட் தாணு, கல்கி ராஜேந்திரன் மூவர் மட்டுமே எனக்கும், எனது கார்ட்டூன்களுக்கும் பரிச்சயமானவர்கள்! மற்றவர்கள் எனது கார்ட்டூன்களுக்கு மட்டுமே பரிச்சயமானவர்கள்! காரணம், எனக்கு சீனியர் கார்ட்டூனிஸ்ட்டுகள், தமிழ்ப் பத்திரிகை உலகில் கோலோச்சியவர்கள் பலர் இருந்தாலும் தமிழில் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒருவரின் கார்ட்டூன்கள் புத்தகமாக வெளிவந்தது அதுவே முதன்முறை! இது இறைவன் எனக்கு அளித்திருந்த ஓர் அரிய வாய்ப்பு! எனவே, எனது கார்ட்டூன்களுக்கு மட்டுமல்ல, நான் சார்ந்தத் துறைக்கே பெரிய அளவில் ஓர் அறிமுகமும், அணிந்துரைகளும் தேவைப்பட்டன! முதல் பிரதி 5000, 2–வது பிரதி 5000 எனக் குறுகிய காலத்திலேயே 1st edition / 2nd edition 10,000 புத்தகங்கள் விற்பனையாகின. நான் மட்டுமல்ல, நான் சார்ந்திருந்த நிறுவனமும் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை! அதனால் இந்த முறை, எனது 2–வது தொகுப்புக்கு ஒரே ஒருவரிடம், ஜே.கே-விடம் மட்டும் அணிந்துரை வாங்கி வெளியிடலாம் என்று நினைத்தேன்.
ஜே.கே-வை அவர் வீட்டில் சென்று சந்தித்து வந்த விஷயத்தை சொன்னேன்! ‘‘சார், இந்த மாதிரி, உங்களை முதன்முதலா சந்தித்தபோது நீங்க வரிசையா எனது கார்ட்டூன்களைப் பட்டியலிட்டு பாராட்டினீர்கள்! அந்தத் துணிச்சலில்தான் கேட்கிறேன், உங்களால் அணிந்துரை தர இயலுமா?’’ என்று ஒரு பயம் கலந்த மரியாதையுடன்தான் கேட்டேன். காரணம், இலக்கிய உலகில் பலர் அவருக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கியிருந்தனர். ‘‘அவர் ஒரு சிங்கம், பார்த்துப் பேசணும், அவருக்குப் பிடிக்கலைன்னா ஒரே அடி, நமது விலா எலும்புகள் நொறுங்கிவிடும், நம்மை குதறிப்போட்டுவிடுவார்...’’ கிட்டத்தட்ட இப்படித்தான்! அவரது தோற்றமும் அவரது மீசையும் இப்படி ஒரு பிம்பத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே இருந்தன. இதற்கு ஆதாரமாக அவரது மேடைப் பேச்சுக்கள் பல இருந்திருக்கின்றன. பெரும் அரசியல் தலைவர்களுக்கே அவர் சிம்ம சொப்பனமாக இருந்த காலங்கள் உண்டு. எனவே எனது ஜாக்கிரதை உணர்வுக்கான காரணங்கள் வாசகர்களுக்கு இங்கு புரியும்!
‘‘நான் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச் சிறிய மனிதர்களுள் நீங்களும் ஒருவர்! கண்டிப்பா எழுதித் தர்றேன், என்னிக்குள்ள வேணும்?’’ என்றார். எனது deadline–ஐ சொன்னேன். ‘‘எனக்கு நிறையவே அவகாசம் இருக்கிறது’’ என்று மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். ‘‘ஆனா நீங்க எனக்கு ஒரு உதவி பண்ண வேண்டியிருக்கும்’’ என்றார்!
‘நான் இவருக்கு என்ன உதவி பண்ணிவிட முடியும்? என்ன சொல்ல வர்றாரோ,’ என்ற குழப்பத்தில் ‘‘சொல்லுங்க சார்’’ என்றேன். ‘‘நான் பேனாப் பிடித்து எழுதுவதை நிறுத்தி ரொம்பக் காலம் ஆச்சு. ஆதலால் என்ன எழுத வேண்டும் என்ற விஷயம் எனது சிந்தனையில் தயாரானதும் உங்களுக்குச் சொல்கிறேன். நான் ‘டிக்டேட்’ செய்யச் செய்ய நீங்கள் எழுதிக்கொள்வீர்களா, உங்களால் முடியுமா?’’ என்றார். ‘‘தாராளமாக சார், என்னிக்கு வரணும்னு சொல்றீங்களோ அன்னிக்கு வர்றேன்!’’ நான் வந்த ‘டாப்பிக்’ நிறைவுற்றது!
பேச்சு, அவருடைய வாழ்க்கை, அரசியல், சினிமா அனுபவங்கள்... எனப் பல விஷயங்களுக்குச் சென்றது. நான் கேட்கக் கேட்க அழகாக ஒளிவு, மறைவு ஏதுமில்லாமல் உள்ளது உள்ளபடி, யார் என்ன நினைத்தால் என்ன? என் கருத்து இதுதான் என்ற பாணியில் பதில் அளித்தார். கருத்துப் பரிமாற்றங்களின் போது சில இடங்களில் அவரிடம் விவாதம் செய்ய நேர்ந்தது! அம்மாதிரி சமயங்களில் அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் யோசித்து யோசித்தே பதில் சொல்லவேண்டியிருந்தது.
ஆனால் நான் கேட்ட கேள்விகளுக்கு அவரிடமிருந்து பதில்கள் spontaneous –ஆக வந்து விழுந்தது. ATM –ல் பணம் எடுப்பதாக இருந்தாலும் அட்டையைச் சொருகிய பிறகு PIN No. உட்பட ஏழெட்டுப் பொத்தான்களை அமுக்கிய பின்தான் பணம் வரும்! ஆனால் card swipe செய்ததுமே நாம் நினைக்கும் தொகை அப்படியே வந்து விழுந்தால், எப்படியிருக்கும்?! அதுபோலத்தான் அவரிடமிருந்து பதில்கள் வந்தன! அவருடைய உலகியல் ஞானத்தைப் பற்றி, அது தரும் பதில்களின் வேகத்தைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் ஜே.கே-வைப் பற்றி இப்படிச் சொல்லலாம். அவர் ஓர் ATA – ‘Any Time Answer’!
கிளம்பும் நேரம் வந்தது! ‘‘சார், கிளம்பறதுக்கு முன்னாடி உங்ககிட்டே இன்னொரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன். அணிந்துரை எழுதிக் கொடுக்க தாங்கள் முன் வந்ததற்கு நன்றி. பெரிய மனிதர்கள் என்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ யாரையும் அடிக்கடி போய்ச் சந்திக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. ஆதலால் நீங்கள் அணிந்துரை தந்த பிறகு நன்றி பாராட்டும் விதமாக உங்களை அவ்வப்போது நான் வந்துப் பார்ப்பதோ அல்லது முக்கிய தினங்களில் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ வந்து மரியாதை நிமித்தம் வாழ்த்துகள் சொல்வதோ இந்த மாதிரி பழக்கங்கள் என்னிடம் கிடையாது! நீங்கள் அணிந்துரை ‘டிக்டேட்’ செய்து தருகிறேன் என்று கூறிய நாளுக்குப் பிறகு எப்போது வந்து உங்களைச் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஏன் பல வருடங்கள்கூட இடைவெளி வரலாம்! ஆதலால் என்னை, நன்றி மறந்தவன் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது! எனவே எனது குணத்தையும் இப்போதே உங்களிடம் சொல்லி விடுகிறேன்’’ என்றேன்!
என்னைப் பார்த்து மீசையைத் தடவி விட்டபடியே ஒரு புன்னகை புரிந்தார்! ''இந்த மாதிரி ஆட்களைத் தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்படித்தான் இருக்கணும். நீங்கள் நீங்களாகவே இருங்கள்'' என்று என்னை அன்புடன் வழியனுப்பினார். அடுத்த வாரமே ஜே.கே-வின் தொலைபேசியில் இருந்து ஓர் அழைப்பு ‘‘ஒருநாள் evening போன் பண்ணிட்டு வாங்க. அணிந்துரை தயார்’’ என்றார். மறுநாளே சென்றேன். பொறுமையாக வரி, வரியாக எனது புத்தகத்திற்கான அணிந்துரையை மீசையை அவ்வப்போது வருடிக்கொண்டே ‘டிக்டேட்’ செய்தார்! அவர் 'டிக்டேட்' செய்த வார்த்தைகளையோ வாக்கியங்களையோ ஓரிடத்தில்கூட மாற்றவோ திருத்தம் செய்யவோ இல்லை! ‘டிக்டேஷன்’ முடிந்ததும், அதன் கீழ் மறக்காமல் அவரது கையெழுத்தை வாங்கிக் கொண்டேன். எனது 3–வது சந்திப்பு இத்தோடு முடிந்தது!
அதன் பின்னர் புத்தகம் வெளிவந்ததும் அதன் பிரதியை அவரிடம் கொடுக்கவே சென்றேன். அணிந்துரையையும் கார்ட்டூன்களையும் ஒரு glance பார்த்தவர் ‘கபாலி’ யில் ரஜினி சொன்னது மாதிரி ஸ்டைலாக ‘மகிழ்ச்சி’ – என்றார்! இந்தச் சந்திப்பு நடந்தது 2005, ஆகஸ்ட் முதல் வாரமாக இருக்கும் என்று ஞாபகம்!
அதற்கு பிறகு 2008, பிப்ரவரி –யாக இருக்கலாம், அப்போதுதான் மீண்டும் சந்தித்தேன். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு வந்த விபரத்தைச் சொன்னேன். ‘‘சார், தினமணி – யில் வெளியாகி வரும் எனது ‘அடடே’ – Pocket கார்ட்டூன்களை ஆறு– தொகுப்புகளாக வெளியிடுவதாக இருக்கிறேன். அப்துல் கலாம் சார் புத்தகங்களை வெளியிட சம்மதித்துள்ளார். ஆறு புத்தங்களையும் கலாம் சார் வெளியிட, நான் மதிக்கும் ஆறு பிரபலங்கள் (Celebrities) பெற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று முடிவெடுத்திருக்கிறேன். முதல் பிரதியை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவி ஒருவர் பெற்றால் நன்றாக இருக்கும். ஒரு வகையில் இது நான் இறைவனுக்குச் செலுத்தும் நன்றி! இரண்டாவது பிரதியை நீங்கள் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். மீதி நான்கு பேர்கள் யார் என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. தங்களால் முடியுமா?'' என்று கேட்டேன். ‘‘தாராளமா வர்றேன். தேதி என்ன? நிகழ்ச்சி நேரம் என்ன?’’ என்று கேட்டு குறித்து வைத்துக்கொண்டார்!
ஏப்ரல் 24, 2008 சென்னை மியூசிக் அகாதமியில் புத்தக வெளியீடு. சரியாக ஒரு வாரத்திற்கு முன் ஜே.கே அவர்கள் விழாவுக்கு எப்படி வரப் போகிறார், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்! வந்த விஷயத்தைச் சொன்னேன். ‘‘வேண்டுமானால் கார் மட்டும் அனுப்புங்கள் போதும்’’ என்றார். ‘‘கார் மட்டுமில்லை, டிரைவர் தவிர்த்து உங்களை அழைத்து வருவதற்காகப் பொறுப்பான ஒரு நபரும் வருவார். உங்களுக்கு வேறு ஏதும் உதவிகள் தேவைப்பட்டாலும் செய்வார். ஏற்கெனவே கிழக்குப் பதிப்பம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டது’’ என்று சொன்னேன்.
‘‘உங்கள் விழா முடிந்ததும் எனக்கு இன்னொரு விழா இருக்கிறது. அதற்கும் அப்துல் கலாம்தான் தலைமை. அதற்கு அந்த விழா அமைப்பினர் எனக்கு கார் அனுப்பிவிடுவார்கள். எனவே மியூசிக் அகாதமி வரை எனக்கு கார் வந்தால் போதும், பிறகு அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார். ‘‘இல்லை சார், இதில் ஏதாவது குழப்பம் வந்துவிடக் கூடாது. அன்று முழுவதும் நாங்கள் அனுப்பும் காரையே உபயோகித்துக் கொள்ளுங்கள்’’ என்றேன் நான். ‘‘சரி சார், அது என்ன function?’’ என்றேன். அவர் தந்த பதில் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது!
‘‘உங்கள் புத்தக வெளியீடு நடக்கும் நாள், ஏப்ரல் 24 எனது 75–வது பிறந்த நாள்! இளையராஜா இதைப் பெரிய விழாவாக எடுக்கணும்னு விரும்பி அவர்தான் எல்லா ஏற்பாடுகளும் செய்யறார்’’ என்றார்! ‘‘என்ன சார் சொல்றீங்க, இது உங்களுக்கு முன்னமே தெரியாதா? விஷயம் இப்படியிருக்க நீங்கள் எனது விழாவை ஒத்துக் கொண்டே இருக்க வேண்டாமே’’என்றேன். ‘‘அதுவும் இளையராஜா சார் உங்களுக்கு எடுக்கும் விழா என்கிறீர்கள். அவரும் உங்களைத் தடுக்கவில்லையா, ஏதும் கேட்கவில்லையா?’’ என்றேன்!
கேட்டாரே! ‘என்ன இப்படிப் பண்ணறீங்க? உங்களது 75–வது பிறந்தநாள். ரொம்ப சிறப்பா பண்ணனும்னு முடிவெடுத்து செய்யறேன். விழா தொடங்குவதற்கு குறைந்த பட்சம் 1/2 மணி நேரம் முன்பே வந்து உங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்த்து, சிறிது நேரம் செலவிட்டு, அவர்களை வரவேற்கும் வகையில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டாமா? அப்படி என்ன இதைவிட வேறு முக்கியமான function?’ என்று கேட்டார்! நான் ‘‘இதப் பாருங்க, எனக்கு மதியோட கார்ட்டூனை மட்டுமல்ல, மதி–யையும் ரொம்பப் பிடிக்கும். ரெண்டு function–ம் ஒரே நாள்தான் என்றுத் தெரிந்தே தான் மதி–க்கு வாக்குக் கொடுத்தேன்! விழா மேடையில் நான் 4:15–க்கு இருக்கணும் அவ்வளவுதானே! இருப்பேன்! என்று இளையராஜாகிட்ட சொல்லிட்டேன்’’ என்றார்!
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் குறிப்பிட வேண்டும். இளையராஜா அவர்களுக்கு என்னைத் தெரியுமா என்பது இதுவரை எனக்குத் தெரியாது! ஆனால், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.
இப்படி ஜே.கே தந்த பதில் எனக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது! ஏனென்றால், எனது விழா நேரம் மதியம் 3:00 to 4:00. அவரது விழா 4:15 to 5:15! இடையில் 15 நிமிடங்கள் மட்டுமே! அதுவும் சென்னையில் வேறு ஓர் அரங்கத்தில் நடக்கிறது! ஜே.கே இப்படிச் செய்தது எனக்குள் ஒரு திகிலை ஏற்படுத்திவிட்டது என்றாலும், அவர் இதயத்தில் எனக்கு எவ்வளவு பெரிய இடத்தை கொடுத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பூரித்துப் போனேன்! இதை விழா மேடையிலேயே அனைவரிடமும் மிக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன்!
அன்று விழா மேடையில் இருந்த பிரபலங்கள் 8 பேருக்கும் 8 குழந்தைகள் மூலம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றேன். 8 பிரபலங்களுக்கும் நினைவுப் பரிசும் கொடுக்கப்பட்டது. பிறந்த நாளுக்கென்று ஜே.கே அவர்களுக்குத் தனியாக நான் ஏதும் பரிசு கொடுக்கவில்லை. கடைசி நேரத்திலேயே தெரிய வந்ததால் விழா ஏற்பாடுகள் குறித்த டென்ஷன் – ல் எங்களில் யாருக்கும் அது தோன்றவும் இல்லை! ஆனால் அவரது 75th Birthday; அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களுள் ஒன்று; அந்த நாளில் எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கியதை அவர் எனக்குத் தந்த பரிசாகவே உணர்கிறேன்!
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவைப் பொறுத்தவரையில் மேலும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்! பிரபல பட்டிமன்றப் பேச்சாளர், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் ஒரு மேடையில் ஏறிய பிறகு பேசாமல் இருப்பதென்பது நடக்கக்கூடிய காரியமல்ல. விழாவுக்கு வருகிறவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்! ஒரு மணி நேர விழா. அதற்குள் ஆறு புத்தகங்கள் வெளியீடு, தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, ஏற்புரை, கலாம் சாரின் பேச்சு, நன்றியுரை, தேசிய கீதம்… என ‘மினிட் to மினிட்’ நிகழ்ச்சி எப்படி அமைய வேண்டும் என்று ஏற்கெனவே கலாம் சார் அலுவலகத்திலிருந்து எனக்குக் குறிப்பு வந்திருந்தது!
புத்தகத்தின் ஐந்தாவது தொகுப்பை சாலமன் பாப்பையா அவர்கள் பெற்றுக்கொள்வதாக இருந்தது. மேடையில் கலாம் சாருக்கும், எனக்கும் மட்டுமே பேச நேரமும் அனுமதியும் இருந்தது. ஏற்கெனவே எனக்கு திகிலாக இருந்த விஷயம் இதுதான். சாலமன் பாப்பையா அவர்கள் பேசாமல், நான் மேடையில் பேசினால்?
‘‘ஏய்… யார்யா அது? அவரு…. அதான்… அந்த வெள்ளை சொக்கால இருக்காரே… அவரு… எவ்வளவு பெரிய ஆளு… நடுவரு… எத்தனை தீர்ப்பு வழிங்கியிருப்பாரு… எப்படி ஒரு பேச்சாளரு… முதல்ல அவர பேசச் சொல்லுய்யா… நீ உட்காரு...’’–ன்னு சாலமன் பாப்பையா அவர்களின் பாணியிலேயே கூட்டத்திலிருந்து ஏதாவது ஒரு குரல் வந்துவிடுமோ என்று!
இதில் சாலமன் பாப்பையா உட்பட மீதி ஐந்து நபர்களில் யாருக்குமே பேச அனுமதி இல்லை என்று எப்படிச் சொல்வது? அதுவும் சாலமன் பாப்பையா அவர்கள் விழாவுக்காக மதுரையிலிருந்து சென்னை வருகிறார்! எனது மண்டைக் குடைச்லைத் தயங்கி தயங்கி தொலைபேசியில் அவரிடம் சொன்னேன்.
‘‘அட, என்ன சார்? இதுவா விஷயம்? பேசிப் பேசி சலிச்சுப் போய் இருக்கேன். உங்க ஒரு விழாவிலேயாவது பேசாம இருக்கிறேனே! இப்படி ஒரு புது அனுபவத்தை எனக்குத் தந்திருக்கீங்க! அது போக உங்க கார்ட்டூன்களுக்கு நான் ரசிகன். உங்கப் புத்தகம், அதுவும் கலாம் ஐயா கையால வாங்குகிற வாய்ப்பு… கசக்கவா செய்யும்? இனிப்பான விஷயம் நேர்ல சந்திப்போம்!’’ என்று அவருக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.
புத்தக வெளியீட்டு விழா நன்றாக நடந்து முடிந்தது. ஆனாலும் இப்படி சாலமன் பாப்பையா சார் பேச முடியாமல் போச்சே! ஒரு குற்ற உணர்வு (guilty conscious) எனக்குள் இருந்துகொண்டே இருந்தது! 2010–ல் திருநெல்வேலியில் நடந்த எனது ‘மதி கார்ட்டூன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் அவரேயே சிறப்புப் பேச்சாளராக அழைத்து பேசச் செய்து, நானும் ரசித்து, விழாவிற்கு பார்வையாளர்களாக வந்திருந்த பலருக்கும் அந்த வாய்ப்பைக் கொடுத்து எனது ஆதங்கத்தையும் ஆசையையும் தீர்த்துக்கொண்டேன்.
சாலமன் பாப்பையா பேசுகிறார் என்றால், அவரது பேச்சைக் கேட்க ஒரு பெரும் கூட்டம் வரும் என்பது நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. எனவே அந்த வாய்ப்பு ஒருவருக்குக்கூட கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக விழாவை ஓர் அரங்கத்திற்குள் நடத்தாமல் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தினேன். அன்று சாலமன் பாப்பையா அவர்கள் எனக்கு கொடுத்த பட்டம் ‘‘மதி, ஒரு சித்திரக்காரர் அல்ல, ஒரு வி–சித்திரக் காரர்!’’
1996, சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் இதே டிசம்பர் மாதம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவரிடம் இருந்து தினமணி கார்ட்டூனிஸ்ட் வேலைக்காக எனக்கு அழைப்பு வந்தது! சோ சார் மூலமாகவே தொடர்புகொண்டார்! ஏனென்றால் அப்போது நான் ‘துக்ளக்’கில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். (‘துக்ளக்’கிலும் என்று சொல்வது சரியாக இருக்கும்!) நியூஸ் டுடே, சாவி, கல்கி, இதயம் பேசுகிறது, வாசுகி, கதிரவன்… என கிட்டத்தட்ட ஏழு நிறுவனங்களில் ஒரே நேரத்தில் freelancerஆக கார்ட்டூன்கள் வரைந்து கொண்டிருந்தேன்!
எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியாவை சந்தித்தப்போது, ‘தினமணிக்கு நீங்கள் ஒரு முழு நேர கார்ட்டூனிஸ்ட்டாக வேண்டும் (Staff cartoonist). ஆனாலும், நீங்கள் துக்ளக்கிற்கு கார்ட்டூன்கள் வரைவதை நிறுத்த வேண்டாம்’ என்றார். ஆனால், இந்த ஏற்பாடு அப்போதைய தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தத்துக்கு உடன்பாடாக இல்லை! எனது கார்ட்டூன்கள் தினமணிக்கு மட்டுமே exclusive–ஆக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது.
விஷயத்தை சோ சாரிடமே. ‘சார், இப்போது நான் பணிபுரிந்துவரும் பத்திரிகைகள் எனக்கு ஒரு Staff கார்ட்டூனிஸ்ட்டுக்குத் தருவது போல மாதச் சம்பாளமாகவே தந்துகொண்டிருக்கிறார்கள். மேலும், துக்ளக்–கைவிடச் சொல்வது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை’ என்றேன்.
சிறிதும் யோசிக்கவில்லை! ‘இதப் பாருங்க சார், இதில் தர்மசங்கடத்திற்கு ஏதுமில்லை. அவ்வளவு பெரிய நிறுவனம், தனக்கு ஒரு முழுநேர கார்ட்டூனிஸ்ட் வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. இது போக துக்ளக்கில் நீங்கள் எத்தனை கார்ட்டூன்கள் போட்டாலும் அது உங்களுடைய ஐடியாக்கள்தான் என யாரும் நம்ப மாட்டார்கள். ‘சும்மா கதை விடாதீங்க சார்! எங்களுக்குத் தெரியாதா சோதான் ஐடியா கொடுப்பார். நீங்க படம்தான் போடுவீங்க…’ என்றுதான் வாசகர்கள் கூறுவார்கள். மேலும், இப்படி ஏழெட்டுப் பத்திரிகைகளில் வேலைபுரிவதும் சரியில்லை. உங்கள் கருத்துகள் முழுமையாக வெளிப்பட வேண்டுமென்றால், உங்களுக்கென்று தனியாக ஒரு இடம் வேண்டும். அதற்கு தினமணி தான் மிகச் சரியான இடம். மேலும், நீங்கள் துக்ளக்கை விட்டுச் செல்வது என்பது எனக்கு ஓர் இழப்புதான். ஆனால், எனது நஷ்டம் மிகச் சிறியது. நான் ஏற்கெனவே சம்பாதிக்கவேண்டியதை எல்லாம் சம்பாதித்துவிட்டேன். நான் தற்போது வாசகர்களுக்காகவும் எனது பொழுதுபோக்கிற்காகவும்தான் துக்ளக்கை நடத்திவருகிறேன். ஆனால், உங்களுக்கு இன்னும் திருமணம்கூட ஆகவில்லை. இனிதான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போகிறது. எனவே, தினமணியில் சேருவது உங்களுக்குப் பெரிய நன்மையையும் லாபத்தையும் தரும். யோசிக்கவே வேண்டாம், Go ahead, all the best!’ என்று என்னை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக தினமணிக்குள் தள்ளினார்!
வியக்கச் செய்தது அவரது பெருந்தன்மை! ஒருவனால் தனக்கு இனி பிரயோஜனம் இல்லை என்று தெரிந்து விட்டால் திரும்பிக்கூட அவனைப் பார்க்க விரும்பாத காலம் இது. ஆனால், நான் துக்ளக்கில் இருந்து விலகிய பிறகும் தனது நண்பர்கள் ஐந்து பேரோடு எனது திருமணத்திற்கு வந்து சிறப்புச் செய்தார். எனது கார்ட்டூன்களின் முதல் தொகுப்பான ‘தினமணிடூன்’ – புத்தகத்தை ஆகஸ்ட், 2013 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமமே கொண்டு வந்தது. அதை சோ சாரை வைத்தே வெளியிட்டுப் பெருமை அடைந்தேன்.
தினமணிக்கு வந்த பிறகும் கார்ட்டூன்கள் குறித்து ஏதாவது சந்தேகங்கள் எழுந்தால் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்பேன். ‘சார் இப்படிப் போட்டால் ஏதாவது பிரச்சனை வருமா வழக்கு வருமா?’ என்பேன். ஏனென்றால், இது மான நஷ்டஈடு கேட்கும் காலம்! மானம் போனால் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்டு போன மானத்தை மீண்டும் வரச் செய்துவிடலாம்! எனது சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கமளிப்பார்!
ஆனால், தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் ‘அது சரி சார். முன்னாடி Freelancer–ஆக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தீங்க! இப்போ ஓரே சீட்ல உட்கார்ந்து கார்ட்டூன் போட்டுக்கிட்டியிருக்கீங்க! Bore அடிக்கலையா? ஏதாவது Contempt–வந்தால் போங்களேன், இரண்டு மூணு நாள் ஜெயில்லே இருந்துட்டுதான் வாங்களேன்! நல்லதுதானே! உங்களுக்கு மேலும் Popularityயும் Publicityயும் கிடைக்கும்’ என்பார்!
துக்ளக்கில் கார்ட்டூனிஸ்ட் பணி கேட்டு அவரை முதன்முதலில் சந்தித்தபோதே ‘உங்களை மாதிரி ஒரு ஆளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்! இந்த வார இதழுக்கான வேலை ஏற்கனவே முடிந்து விட்டதால் நீங்கள் அடுத்த வாரத்தில் இருந்து கார்ட்டூன்கள் போடலாம்’ என்றவர், ‘அது சரி, பொதுவாக இங்கு கார்ட்டூன்களுக்கான ஐடியா தருவது நான்தான். இது வரை என்னிடம் பணியாற்றியவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஓவியர்கள் மாதிரிதான். நீங்களோ கார்ட்டூனிஸ்ட் என்கிறீர்கள். அப்படியானால் நீங்களே ஐடியா பண்ணுவீர்களா?’ என்று கேட்டார். ‘ஒரு கார்ட்டூனிஸ்ட் வேலையே அதுதான் என்று நினைக்கிறேன் சார். ஐடியாவும் நானே பண்ணினால்தான் கார்ட்டூன்கள் சிறப்பாக அமையும் என்பது எனது கருத்து’ என்றேன். பதிலுக்கு அவரோ ‘சரி, இரண்டுபேருமே பண்ணுவோம். எவை நன்றாக இருக்கின்றனவோ அந்த ஐடியாக்களை எல்லாம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இறுதி முடிவு நான் எடுப்பதாகத் தான் இருக்கும், பரவாயில்லையா?‘ என்றார். ‘அதில் என்ன சார் சந்தேகம் இருக்க முடியும்’ என்று பதில் அளித்தேன்.
துக்ளக் மாதம் இரண்டு இதழ்கள் (Fortnightly) என்ற இடத்தில் இருந்து வாரப் பத்திரிக்கையாக (Weekly) மாறும் நேரம் வந்தது. இதழின் முதல் அட்டைக்கான ஐடியாவை என்னிடம் தந்தார். சென்டிமென்ட்–ஆக துக்ளக்கில் அடிக்கடி வரும் இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போன்ற கார்ட்டூனை வரைந்து முடித்து, அவர் அறைக்கு கொண்டு சென்றேன். படத்தை வாங்கி, சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், ‘ஒன்று சொல்கிறேன், தப்பாக எடுத்துக்காதீங்க. கழுதைப் படம் அழகாக வந்திருக்கிறது. இதுவரை ‘துக்ளக்’ அட்டையில் எத்தனையோ முறை, எத்தனையோ கழுதைகள் வந்திருக்கின்றன. ஆனால், இது வரை வந்த கழுதைகளிலேயே இது தான் பெஸ்ட் கழுதை’ என்றார் அவர். எனக்குக் கிடைத்த இந்த ‘பெஸ்ட் கழுதை’ பட்டத்தையும் ஒரு மறக்க முடியாத பெருமையாகவே கருதுகிறேன்.
அவரோடு ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக நான் பழகியபோது பல்வேறு அரசியல் சூழ்நிலைகள், தலைவர்கள் எடுத்த சரியான, தவறான முடிவுகள், அது பற்றி இவரது விமர்சனங்கள் எனப் பல விஷயங்களை எனக்குச் சொல்லியிருக்கிறார். அவர் பழகாத அரசியல் தலைவர்களே இல்லை என்பதால், பல்வேறு சந்திப்புகளில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்துகொள்வார். நான் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன்னரே நடந்த அரசியல் வரலாற்று நிகழ்வுகளைக் கேள்விகளாகக் கேட்டு கேட்டு அவரிடம் ஒரு மாணவனைப்போல் பல விஷயங்களைப் பாடமாகவே கற்றிருக்கிறேன்! இதெல்லாம் அரசியல் பற்றிய என்னுடைய கண்ணோட்டம், அறிவு வளர்வதற்கு மிகப் பெரிய உதவியாக இருந்தன.
சுமார் ஐந்து வருடங்கள் துக்ளக்கில் பணியாற்றினேன். 1993 முதல் 1997 வரை. 1995, 1996 அப்போதைய ஜெயலிலதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியை அகற்றி, தி.மு.க –த.ம.க கூட்டணியை அமைத்து, ஆட்சியில் அமர்த்த சோ அவர்கள் தீவிர முயற்சி செய்துகொண்டிருந்த நேரம்! நான் ஒருமுறை கேட்டேன் ‘சார் நீங்கள் எடுத்த இந்த முடிவால், அ.தி.மு.க ஆட்சி வீழ்த்தப்பட்டு, பிற்காலத்தில் ஜெயலலிதா மீது வழக்குகள் பாய்ந்து, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் தண்டனை பெற்று, சிறை செல்ல நேரிட்டால், அது உங்களை மனதளவில் பாதிக்காதா? உங்களின் மிக நெருங்கிய நண்பர் அல்லவா அவர்?’ என்றேன். ‘இதில் என்ன சந்தேகம்? அப்படி ஒருவேளை நேர்ந்தால், எனக்கு மிக மிக வேதனையைத் தரும்! வலியைக் கொடுக்கும்! ஆனால், எனது நலனைவிட நாட்டின் நலன் மிக முக்கியம், சார்’ என்றார்! தேச நலனின் மீது அவர் கொண்டிருந்த அக்கறையைக் கண்டு வியந்தேன்.
‘ஜெயலலிதாவின் ஆலோசகர் சோ’ என்று தமிழக ஊடகங்கள் செய்திகளைப் பலமுறை வெளியிட்டிருகின்றன. ஆனால் உண்மை அது மட்டுமே அல்ல! எந்தக் கட்சித் தலைவரும் சிறிய, பெரிய தலைவர் என்ற பேதம் இல்லாமல் யார் வந்து ஆலோசனை கேட்டாலும் ஆலோசனை கூறுவார். அதனால் அவர்கள் கட்சியில் விளையும் நன்மை தீமைகளையும், பின் விளைவுகளையும்கூடக் கூறிவிடுவார்! ஆனால், எந்தக் கருத்தையும் தேசத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டே கூறுவார்! மற்றபடி அவரது கருத்துகளையும் அரசியல் விமர்சனங்களையும் துக்ளக் மூலம் வெளிப்படுத்த மட்டுமே விரும்பினார். ஆனாலும் ஓர் ஆட்சி வரம்பு மீறுகிறது, இதனால் தேசத்தின் நலனுக்கு ஆபத்து என்ற நிலை வரும்போது, களத்தில் இறங்கி, அதற்கானத் தீர்வைக் காண முயற்ச்சி செய்வார். அத்தகைய முயற்சிகள் பலமுறை வெற்றியைப் பெற்றிருக்கின்றன. பத்திரிகை என்பது தொழிலோ, வியாபாரமோ மட்டுமில்லை, அது தேசத்தின் நலனுக்கானதும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காண்பித்தார். ஆனாலும் நமது துரதிருஷ்டம்! இன்று பெரும்பாலான ஊடகங்களுக்கு இந்த உணர்வு இல்லை என்பதே உண்மை!
பெரிய பெரிய தேசியத் தலைவர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருவது சர்வ சாதாரணம்! அலுவலகத்திற்கும் வருவார்கள்! ஆனால் ஒருபோதும் அவர் இந்தப் புகழை, தனது தலைக்கு ஏற்றிக்கொண்டதே இல்லை! நான் பணிபுரிந்த காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி அவரைச் சந்திக்க வருவது வழக்கம்! அவர் வந்திருப்பது தெரிந்தால், அவரைப் பார்க்க துக்ளக் அலுவலகம் வெளியே பெரும் கூட்டம் கூடிவிடும்! அதனால் சில சமயங்களில் அவர் வருவது தெரிந்தால், ‘நீங்க இங்கு வர வேண்டாம் சார், நீங்கள் வந்தால் இங்கு பெரும் கூட்டம் கூடிவிடுகிறது. நான் இப்போது ஃப்ரீயாகத்தான் இருக்கிறேன். ஆதலால் நானே உங்கள் வீட்டிற்குவந்து விடுகிறேன்!’ என்று அவரைத் தடுத்துவிட்டு, இவரே ரஜினி வீட்டிற்குச் சென்றுவிடுவார்!
சுமார் 25 ஆண்டு காலம், ரஜினிகாந்த் தங்களது கட்சிக்கு ஆதரவு தர மாட்டாரா என்று அவரது வீட்டு வாசலில் நிற்காத மாநில, தேசியத் தலைவர்களே இல்லை! இன்றளவும் அந்த நிலை மாறவும் இல்லை! ஆனால், அப்படி ஒரு மனிதர் தன்னை வந்து பார்க்கிறார் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளவே விரும்பாதவர்! அந்தத் தலைவருடன் நான், இந்தத் தலைவருடன் நான், அவர் என்னை வந்து பார்த்ததார், இவர் வந்து பார்த்தார் என்று தங்களது பத்திரிகைகளிலேயே புகைப்படம் வெளியிட்டு புகழ் தேடும் இக்காலத்தில் யாருக்கும் இதெல்லாம் தெரியவே வேண்டாம் என ஒரு மனிதர் வாழ்ந்தது, ஓர் ஆச்சரியம்தான்!
ஒருமுறை அவரது மிக நெருங்கிய நண்பர் ரங்காச்சாரி என்னிடம் கூறியது நினைவுக்கு வருகிறது. ‘சார், இவருக்கு இருக்கும் தொடர்புகள், மரியாதைகள் வேறு ஒருவருக்கு இருந்தால், ஒன்று அதை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பார் அல்லது புகழ் போதை தலைக்கேறி பைத்தியமாகியிருப்பார்’ என்று கூறினார். அவர் கூறியது சத்தியமான உண்மை. முகஸ்துதியை அறவே வெறுத்தவர்! பிடிக்கவேப் பிடிக்காது. யாராவது அவரைப் புகழ ஆரம்பித்தால் ‘ஆமா, சார்! சாதிச்சுட்டேன்… முதல்ல நீங்க வந்த காரியத்தைச் சொல்லுங்க’ – என்று அந்த இடத்திலேயே அதை ‘கட்’ – செய்துவிடுவார்.
ஆனால், தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பெருமைப்படுத்துவதில் அவர் மகிழ்ச்சி அடைந்தார்! ஒவ்வொரு ‘துக்ளக்’ ஆண்டு விழாவிலும் அவரது அலுவலக ஊழியர்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகவே கொண்டிருந்தார்! 1995, 96 காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியைத் தீவிரமாக எதிர்த்து, தலையங்கங்களும், கார்ட்டூன்களும் துக்ளக்கில் வெளிவந்துகொண்டிருந்த நேரம். அ.தி.மு.கவினர்கூட இதை எதிர்த்தார்களோ இல்லையோ, ஆனால் துக்ளக் வாசகர்கள் பெரும்பாலோரிடம் இருந்து எதிர்க் கருத்துகள் வந்துகொண்டிருந்த நேரம்! (எந்தக் காரணமிருந்தாலும் சரி, கருணாநிதியையும் தி.மு.க வையும் சோ ஆதரிப்பதை அவர்களில் பலர் விரும்பவில்லை!)
ஓர் ஆண்டு விழாவுக்கு முதல் நாள் என்னை அழைத்தார்! ‘ஆமாம் இது வரை துக்ளக் ஆண்டு விழா மேடையில் உங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேனா?’ என்றார்! ‘இல்லை’ என்று நான் பதிலளித்தேன். ‘ஏன்? நாளைக்கு நீங்க மேடைக்கு வரணும்’ என்றார்! ‘சார் நான் துக்ளக்கில் மட்டும் கார்ட்டூன்கள் வரைந்து வந்தால், பரவாயில்லை! Freelancer–ஆக வேறு பல பத்திரிகைகளிலும் பணியாற்றி வருகிறேன். பிறகு எப்படி நான் வருவது? சரியாக இருக்காதே’ என்றேன். ‘மற்றதைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை. தி.மு.க.வுக்கு ஆதரவு எடுத்ததையும் துக்ளக்கில் வருகிற கார்ட்டூன்களையும் நிறைய ரீடர்ஸ் திட்டறாங்க! அட்லீஸ்ட்–அதற்கு நான் மட்டும் காரணம் அல்ல, அதில் உங்களுக்கும் பங்கு உண்டு–ன்னாவது நான் சொல்லிக்கறேன்’ என்று அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகக் கூறி என்னை மேடையேற்றி மகிழ்ந்தார்!
அது மட்டுமல்ல எனது கார்ட்டூன்களுக்கு அவரது நண்பர்களோ, உறவினர்களோ பாராட்டுத் தெரிவித்தால் துக்ளக் அலுவலகத்திற்கு நான் செல்லும்போது மறக்காமல் அப்படிப் பாராட்டியவர்களுக்கே ஃபோன் போட்டு, ‘இதோ, மதி… அவரிடமே சொல்லிடுங்க…’ என்று ஃபோனை என்னிடம் கொடுத்துவிடுவார்! அடுத்தவர் புகழ் பெறுவதை சகித்துக்கொள்ள முடியாத மனிதர்கள் அதிகமாக இருக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதர்!
நான் பணிபுரிந்த காலத்தில் ‘துக்ளக்’கின் நடுப் பக்கங்கள் இரண்டிலும் சுமார் 4-5 கார்ட்டூன்கள் போடுவேன்! அதற்கு 7-8 கார்ட்டூன்களாவது Rough sketch செய்து கொடுப்பேன்! அதில் எதைப் போடலாம் என்று ஒருமுறைக்கு இருமுறை பார்த்து ‘டிக்’ செய்து கொடுப்பார்! ஆனால், என் மீது நல்ல நம்பிக்கை வந்துவிட்ட பிறகு ‘டிக்’ செய்து கொடுப்பதை நிறுத்திவிட்டார்! ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘எல்லாமே நன்றாகத்தான் இருக்கின்றன, நீங்களே ‘செலக்ட்’ செய்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிடுவார்! தான் ஆசிரியர் என்ற அதிகாரத்தை ஒருபோதும் அவர் காண்பித்ததே இல்லை!
எனது பள்ளிப் படிப்பின்போது பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன! அந்தத் தமிழிலேயே நான் படித்ததால், எனது கார்ட்டூன்களும் அதே தமிழிலேயே அமைந்தன! ஆனால், ‘துக்ளக்’கில் அந்தத் தமிழ் கடைப்பிடிக்கப்படவில்லை! ஒவ்வொரு முறையும் நான் படித்த தமிழிலேயே எனது கார்ட்டூன்களை வரைவேன்! ஒவ்வொரு தடவையும் அவர் அதைத் திருத்துவார்! ஒருநாள் சோ சாரிடமே கேட்டேன் ‘சார், உங்கள் கொள்கை சரி, ஆனால் நான் இந்தப் புதிய தமிழிலேயேதான் படித்தேன், ஆதலால் அதிலேயே கார்ட்டூன்கள் போட விடுங்களேன்! இதற்குக் கூட எனக்குச் சுதந்திரம் இல்லையா.?’ என்றேன். உடனே இன்டர்காமில் தனது தலைமை உதவி ஆசிரியரை (மதலை) அழைத்து ‘சார், அவருக்கு சுதந்திரம் வேண்டுமாம். அவர் பெரியார் தமிழில்தான் போடுவாராம், இனி அப்படியேப் போடட்டும், விட்ருங்க’ எனக் கூறிவிட்டார்! அவர் ஒரு நிறைகுடம்! அதனால்தான் இதெல்லாம் சாத்தியப்பட்டன!
கடந்த 20 வருடங்களாக தினமணி வாசகர்களுக்கு எனது கார்ட்டூன்கள் மூலம் சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தந்துகொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காலணம் சோ சார்தான் என்பதை இந்தக் கட்டுரை மூலம் தங்களுக்குச் சொல்லியாகவேண்டிய தருணம் இது!
அடுத்த Millenium பிறந்துவிட்டது! இன்றும் நடிகர், நடிகைகளை அட்டைப்படமாகப் போட்டுதான் பல பத்திரிகைகள் வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கின்றன! இப்படி ஒரு காலகட்டத்தில் அரசியல் விமர்சனக் கார்ட்டூன்களை மட்டுமே அட்டைப்படமாகப் போட்டு 48 வருடங்கள் ஒரு பத்திரிகை வந்துகொண்டிருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய சாதனை! அதன் மூலம் கார்ட்டூன்களின் முக்கியத்துவத்தை இச் சமூகத்திற்கு எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், ‘கார்ட்டூனிஸ்ட்’–டுகளையும் பெருமைப்படுத்தியிருக்கிறார்! துக்ளக்கில் அவர் எழுதிய சுயசரிதையின் தலைப்பு ‘அதிர்ஷடம் தந்த அனுபவங்கள்’ ஆசிரியர் சோவுடன் பழகிய, பணிபுரிந்த நாள்கள் எனக்கும் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்களே!
-மதி