அனைவரும் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, ‘‘டாக்டர் அப்துல் கலாமின் மறைவைப் பதிவுசெய்யும் விதத்தில் இன்றைய தினமணியில் உங்கள் கார்ட்டூன் ஏதும் இல்லையே! ஏன்?’’ என்பதுதான்.
கலாம் சார் அவர்களின் மறைவு குறித்து எனக்கு முதல் தகவல் வந்ததே இரவு 9 மணிக்குத்தான். ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு எனது கார்ட்டூனை முடித்துக் கொடுத்தால்தான் தினமணி-யின் அனைத்து பதிப்புகளிலும் கார்ட்டூன் வெளிவரும். எஞ்சிய ஒரு மணி நேரத்துக்குள் யோசிப்பது என்பது முடியாத காரியம்.
இன்னொரு காரணம், எனது குடும்பத்தில் ஒருவரை திடீரென்று இழந்திருந்தால் என்ன வேதனை ஏற்படுமோ, அந்த அளவு வேதனையில் இருந்தேன். மனமும் புத்தியும் அவரது இழப்பு குறித்து மீண்டும் மீண்டும் சிந்தித்ததே ஒழிய, மறுநாள் கார்ட்டூனைப் பற்றிக் கூட சிந்திக்கவில்லை. இந்தப் பேரிழப்பிலிருந்து மீள பலமணி நேரங்கள் பிடித்தன.
என்ன கார்ட்டூன் போடுவது என்று சிந்திக்க ஆரம்பித்தபோது, டாக்டர் கலாம் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய மறுநாளன்று (25, ஜுலை 2007) தினமணியில் வெளியாகின எனது கார்ட்டூன்தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது!
ஒட்டுமொத்த தேசமும் குடியரசுத் தலைவர் பதவி அவருக்கு இரண்டாவது முறை கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்த நேரம், தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தேசத்தின் எதிர்பார்ப்புகளை செய்யும் வகையில் தினமணியில் பல கார்ட்டூன்களை வரைந்தேன்.
கார்ட்டூன்களை போட்டுப் போட்டு சலித்துப் போன பிறகும் எனது வேதனையும் கோபமும் குறையாததால், தினமணியின் நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதிவிடுவதாகத் தீர்மானித்து, எழுத முடிவெடுத்தேன்.
நான் எழுத்தாளன் அல்ல. அடிக்கடி எழுதியதும் இல்லை! ஆனாலும், வேதனை தாளாமல் எழுதிய கட்டுரை நடுப்பக்க கட்டுரையாக வெளியிடப்பட்டது. வாசகர்களின் வேதனைக்கு அந்தக் கட்டுரை பெரும் வடிகாலாக அமைந்தது.
2007, ஜுலை 24, குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் டாக்டர் அப்துல் கலாம். அவரையே குடியரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசு விரும்பவில்லை. இதை நான் கார்ட்டூனில் பதிவு செய்தாகவேண்டிய கட்டாயம்.
இது நையாண்டிக்குரிய அரசியல் நிகழ்வு அல்ல. ஆதலால், எனது கார்ட்டூன் மூலம் தமிழ் சமூகத்திற்கு ஆறுதல் அளிக்க வேண்டும். அதே சமயத்தில், கார்ட்டூன் உண்மைக்கு புறம்பாகவும் இருக்கக் கூடாது. மிகவும் கடினமான இக்கட்டான சூழ்நிலை எனக்கு.
பொதுவாக ஒரு விஷயம் எனக்குக் கடும் வேதனையையோ கோபத்தையோ ஏற்படுத்துகிற அன்று வரும் கார்ட்டூன்கள் பெரும் நகைச்சுவையுடன் அமைவதுண்டு! பச்சை மிளகாயின் காரம் அப்படியே ஒரு பலாச்சுளையின் இனிப்பாக மாறுவதற்கு ஒப்பானது இது! ஆனால், இந்த சப்ஜெக்ட்டில் நகைச்சுவைக்கும் இடமில்லை.
வாசகர்களின் மனதில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருந்து தடவுவதாக மட்டுமே எனது கார்ட்டூன் அமைய வேண்டும். அந்தத் தருணத்தில் நான் வரைந்த கார்ட்டூன்தான் இன்று இங்கு மீண்டும் வெளியிடப்படுகிறது.
2008, ஏப்ரல் 24, எனது ‘அடடே…’ கார்ட்டூன்களின் ஆறு தொகுப்புகளை சென்னை மியூசிக் அகாதமியில் வெளியிட்டார் டாக்டர் கலாம். அந்த நிகழ்ச்சியில் நினைவுப் பரிசாக அந்த கார்ட்டூனை ஒரு பித்தளைத் தகட்டில் பதித்து அவருக்குப் பரிசளித்தேன்.
ஒரு நிமிடம் அந்தக் கார்ட்டூனை பார்த்த கலாம் ‘‘அடடே! நான் மிகவும் ரசித்த கார்ட்டூன் ஆச்சே இது! மதி, எப்படி இதை கணித்தீர்கள்? நான் எனது பதவிக் காலம் முடிந்ததும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றவே முடிவெடுத்திருந்தேன். ஆனால், உங்கள் கார்ட்டூனில் உள்ளபடி இன்று ஒரு நாள் திருவனந்தபுரத்திலும், இன்னொரு நாள் மும்பை, தில்லி, கொல்கத்தா… என்று நாடு முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்'' என்றார்.
(நான் கார்ட்டூனில் சொல்ல வந்தது இனி அவர் தேசம் முழுக்க, தேசத்தின் இதயத்தில் குடியிருக்கப் போகிறார் என்பதே.)
நானோ பதிலுக்கு, ‘‘மனத்துக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது சார், அந்த நேரத்தில் எனது உள்ளுணர்வு சொன்னதைத்தான் கார்ட்டூனாக வரைந்தேன்’’ என்று ஓரேவரியில் பதில் அளித்தேன். அத்தோடு அதைப் பற்றிய விஷயம் முடிந்தது.
விழாவுக்கு முன்னரே அவரது அலுவலகத்தில் இருந்து எனக்கு வந்த கடிதத்தில் ‘‘நிகழ்ச்சியில் டாக்டர் கலாமுக்கு நினைவுப் பரிசுகள் ஏதும் அளிக்கப்பட்டால், அதைப் பெற்றுக்கொள்வார். ஆனால், அதைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மாட்டார். தாங்கள் விரும்பினால் அதை அவரது தில்லி விலாசத்திற்கு அனுப்பி வைக்கவேண்டியது தங்களது பொறுப்பு'' என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
எனவே, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்ததும், எனது கண்கள் தேடியது அவருக்கு அளித்த அந்த நினைவு பரிசைத்தான், ஆனால், அதைக் காணவில்லை! எங்கு போயிற்று? தேடியும் பலன் இல்லை. அவருக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்த கார்ட்டூனை அவரது அலுவலகத்துக்கு அனுப்பித்தர முடியவில்லையே என்கிற குற்ற உணர்வு என்னை வாட்டியது.
‘‘எத்தனை உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள், எத்தனை நிகழ்ச்சிகள், எண்ணற்ற முனைவர் பட்டங்கள், பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா… விருதுகள்! இதற்கிடையே நாம் அளித்த நினைவுப் பரிசு அவருக்கு எங்கே நினைவிருக்கப் போகிறது?அப்படியே அவரது உதவியாளர்கள் அதை எடுத்துச் சென்றிருந்தாலும், அவருக்கு வந்து குவிந்திருக்கும் நூற்றுக்கணக்கான நினைவுப் பரிசுகளில் ஒன்றாகக் கடலில் கரைத்த பெருங்காயம்போல ஏதாவது மூலையில் இருக்கக்கூடும்’’ என்று நினைத்து ஆறுதலடைந்தேன். எனவே, இந்த நினைவுப் பரிசு தொடர்பாக அவரது அலுவலகத்தைத் தொடர்புகொள்வது மிக அல்பமாகவே இருக்கும் என்று தோன்றியதால் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டேன்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து எனது செல்லிடப்பேசிக்கு ஓர் அழைப்பு. எதிர்முனையில் ராமேஸ்வரம் தினமணி செய்தியாளர், ‘‘சார், உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ராமேசஸ்வரத்தில் கலாம் சார் பிறந்த இல்லத்தைத் தற்போது அருங்காட்சியகமாக (House of Kalam) மாற்றியிருக்கிறார்கள். நேற்றுதான் சென்று பார்த்தேன். அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்ததும், கண்ணில் படுமாறு நீங்கள் அவருக்கு நினைவுப் பரிசாக அளித்த கார்ட்டூனை இரண்டு தனி ஃபோகஸ் விளக்குகள் பொருத்தி அற்புதமாக இடம் பெறச் செய்துள்ளார்கள்! மேலும், கலாம் சார் கையில் ராக்கெட்டுடன் நிற்பது போன்று நீங்கள் அளித்த இன்னொரு கார்ட்டூனையும் வைத்துள்ளார்'' என்றார். மறுநாள் புகைப்படங்களும் எடுத்து அனுப்பினார். எத்தனையோ கோடிப் பேரின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்த அவரது இல்லத்தில் எனது கார்ட்டூன் இடம்பிடித்திருப்பது எனக்கு எத்தனை மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பதை இங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நூறு கோடி இந்தியர்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற டாக்டர் அப்துல் கலாமின் நெஞ்சில் நானும் எனது கார்ட்டூனும் இடம்பெற்றிருக்கிறோம் என்றால், எனது தூரிகைக்குஅதைவிடப் பெருமை என்னவாக இருக்க முடியும்? ‘விண்கல நாயகன்’ என் நெஞ்சில் விண்ணுயரம் உயர்ந்து நிற்கிறார். அவருக்குப் பிடித்த அந்தக் கார்ட்டூன் இன்றும் மிகப் பொருத்தமாக இருப்பதும், அதுவும் அவர் இல்லத்திலேயே இடம் பெற்றிருப்பதும் எல்லாம் வல்ல இறைவனின் அருளே!
ராமேஸ்வரத்தில் பிறந்தார்; விஞ்ஞானியாக சாதித்தார்; குடியரசுத் தலைவராக உயர்ந்தார்; இறுதியாக தனது அளப்பரிய அன்பின் மூலம் மக்கள் குடியரசுத் தலைவராக ஒவ்வோர் இந்தியனின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்தார் இந்த வாராது வந்த மாமணி!