‘மதி’ என்ற மதிகுமார் 1968–ம் ஆண்டு நவம்பர் மாதம் 5–ம்தேதி திருநெல்வேலியில் பிறந்தார். தந்தையார் ஆ.சுப்பிரமணியன், தாயார் மரகதகோமதி. தனது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை (B.sc. Geology) தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியிலும் பயின்றார்.
சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், Cartoon Drawing, Pencil Sketching, Poster Colour Painting, Advertising என்று பல போட்டிகளில் பல்கலை அளவில் தங்கப் பதக்கங்கள் வென்றவர். 1990–ம் ஆண்டு ‘ஆனந்தவிகடன்’ மாணவ நிருபர் திட்டத்தின் மூலம் சென்னைக்கும் பத்திரிகைத்துறைக்கும் அறிமுகமானார். சென்னையிலிருந்து வெளிவரும் ‘News Today’ ஆங்கில மாலை தினசரியில் 1990–ம் ஆண்டு Staff கார்ட்டூனிஸ்டாகச் சேர்ந்தார். பிறகு Freelancer ஆக கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, துக்ளக், குங்குமம், வாசுகி, கதிரவன் பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் வரைந்து வந்தார். 1997–ம் ஆண்டில் இருந்து 2017 வரை சரியாக 20 ஆண்டுகள் தினமணி நாளிதழுக்கு கார்ட்டூன்கள் வரைந்து வந்தார். 2017–ல் தினமணி பத்திரிகையிலிருந்து வெளியேறினார். 2002 முதல் 2007 வரை The New Indian Express நாளிதழுக்கும் அவர் கார்ட்டூன்கள் வரைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இவரது கார்ட்டூன்களின் முதல் தொகுப்பான ‘தினமணிடூன்’ புத்தகம் 2003, ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. தமிழ் நாளிதழ்கள் வரலாற்றில் இத்தகைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக கார்ட்டூன்களின் தொகுப்பு ஒன்று புத்தக வடிவில் வந்தது அதுவே முதன்முறை. புத்தகம் வெளிவந்து ஒரு மாத காலத்திற்குள்ளேயே முதல் பிரதி 5,000 புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன. 2–வதுபிரதியாக மேலும் 5,000 புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவையும் குறுகிய காலத்தில் விற்று சாதனை புரிந்தது தமிழ் பத்திரிகைகளின் கார்ட்டூன் வரலாற்றில் ஒரு மைல்கல். தமிழ்ச் சமூகம் இவரது கார்ட்டூன்கள் மீது கொண்டிருந்த மதிப்பையும் மரியாதையையும் காட்டுவதாக இந்தப் புத்தகத்தின் வெற்றி அமைந்திருந்தது! இரண்டாவது தொகுப்பான ‘டூன்–2’ ஆகஸ்ட், 2005–ல் வெளியானது.
தினமணி–யின் முதல் பக்கத்தில் தினசரி வெளியாகும் ‘அடடே’ (Pocket Cartoon)–களின் தொகுப்புகள், ஆறு புத்தகங்களாக ஏப்ரல், 2008–ல் வெளியானது. மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்று அப்புத்தகங்கள் அவராலேயே வெளியிடப்பட்டன. தினமணியின் நடுப் பக்கத்தில் வெளியாகி வந்த இவரது பெரிய கார்ட்டூன்களின் தொகுப்பு மே, 2010–ல் வெளியானது. கடந்த 27 வருடங்களில் (1990 – 2017) மொத்தம் 17,000 கார்ட்டூன்கள் வரைந்திருக்கிறார்.
13 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். தற்போது காட்சி ஊடகங்களிலும் தடம்பதிக்கும்விதமாக www.mathicartoons.com என்ற பெயரில் தனது கார்ட்டூன்களுக்கென பிரத்யேகமாக ஓர் இணையதளம் ஆரம்பித்திருக்கிறார் மதி.