தினமணி–யின் முதல் பக்கத்தில் வெளியான எனது ‘அடடே’ கார்ட்டூன்களின் ஆறு தொகுப்புகள் 2008, ஏப்ரலில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டன. அடுத்ததாக தினமணி–யின் நடுப் பக்கத்தில் வெளியாகும் எனது பெரிய கார்ட்டூன்களின் தொகுப்பு வெளியிடப்படுவதற்குத் தயாராக இருந்தது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவையும் சென்னையிலேயே நடத்துவதா அல்லது வேறு ஏதாவது ஊரில் நடத்துவதா என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது ‘‘இதில் என்ன சந்தேகம்? மீண்டும் சென்னை எதற்கு? உங்கள் சொந்த ஊரான திருநெல்வேலியில் அந்த விழாவை நடத்துவதுதான் சரியாக இருக்கும்’’ என பளிச்சென்று பதில் அளித்தார். எனக்கும் அந்த ஐடியா பிடித்திருந்தது. கிழக்கு பதிப்பகம் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களும் அதையே விரும்பினார். புத்தகத்தை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனை வைத்தே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.
எனது அடுத்த கேள்வி! புத்தகத்தின் முதல் பிரதியைப் பெறப் போவது யார்? அந்நேரத்தில் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தவர் நான் படித்த பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஃபாதர் ஜான் லூர்து அவர்கள்தான்! நான் அப்பள்ளியில் பயின்றபோது தனது அன்பாலும், அவரது தலைமைப் பண்பாலும் என்னை மிகவும் வசீகரித்தவர் அவர்! அவரை எப்படியாவது தேடிப் பிடித்து விழாவுக்கு அழைத்து வந்துவிடுவது என முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டேன்.!
இறைப் பணியில் மட்டுமே தனது முழு ஆர்வத்தையும் காட்டி வந்த அவர் எனது கார்ட்டூன்களின் மீதுள்ள மரியாதை காரணமாக மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்துகொள்ளச் சம்மதித்தார்! சரி, புத்தகத்தையும் அதில் இடம்பெற்றிருக்கும் கார்ட்டூன்களைப் பற்றியும் சிறப்புரை ஆற்றப் போவது யார் என்ற எனது அடுத்தக் கேள்விக்கான பதிலை யோசிக்க எனக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. பக்கத்து ஊர்க்காரர் ஆன மதுரையைச் சேர்ந்த எனது மரியாதைக்கும் அன்புக்கும் உரிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள்தான் அவர். நிகழ்ச்சிக்கு வந்து சிறப்புரையாற்ற உடனடியாகச் சம்மதித்தார்.
மே 31, 2010 மாலை திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விழா ஏற்பாடாகி இருந்தது. விழா நாளன்று விழா தொடங்குவதற்கு முன் ஃபாதர் ஜான் லூர்து அவர்கள், சொந்த ஊர்க்காரர்கள், உடன் படித்த மாணவர்கள் என ஒவ்வொருவராகத் தேடிச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எனது கண்ணில்பட்டார் அவர்!
பார்த்ததும் ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோஷம்! ஆனாலும் யார் இவர்… நம்மோடு நெருக்கமானவராகத் தெரிகிறாரே? என்ற குழப்பம்! ஓரிரு நிமிடங்கள் ஆயிற்று. ஹா! கண்டுபிடித்து விட்டேன். பள்ளி நாட்களில் என்னை வசீகரித்த, எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய எனது கணித ஆசிரியர் பீட்டர் ஃபெலிக்ஸ்தான் அவர்! பார்த்து சரியாக 25 ஆண்டுகள் ஆகிவிட்டன! மிகுந்த சந்தோஷத்துடன் ஓடிச் சென்று அவரது கையைப் பிடித்துக்கொண்டேன்! “சார், உங்க மாணவன்தான், நான்தான் மதி, கார்ட்டூனிஸ்ட்!” கட்டி அரவணைத்துக்கொண்டார் அவர்! அவருக்கும் மகிழ்ச்சி. “சரி, உன்னைப் பார்த்து உன்னிடம் சேரவேண்டிய ஒன்றை உன்னிடம் கொடுக்கவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்” என்று என்னிடம் ஒரு கவரை நீட்டினார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுப்பதற்கு அப்படி என்ன இருக்க முடியும்? அதுவும் எனது பொருள் என்று கூறுகிறார்! சிறிது கலக்கத்துடன் பிரித்துப் பார்த்தேன்! எனது வாய் மெளனமானது! கண்கள் கலங்கின! இதயத்தில் அந்த ஆசிரியரின் அன்பு ஏற்படுத்திய இனம் புரியாத ஓர் அழுத்தம்! அப்போதுதான் எனக்கு மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது, நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 10-வது படித்துக்கொண்டிருந்தபோது விளையாட்டாக போட்ட ஒரு கார்ட்டூன்தான் அது! அதுவும் எனது பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்த ஃபாதர் ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களையே கிண்டல் செய்த கார்ட்டூன்! உண்மையாகச் சொல்வதென்றால் நான் அன்று போட்டது ஒரு கார்ட்டூன் என்றே எனக்குத் தெரியாது!
இங்கு வாசகர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். எனது 8- ம் வகுப்பு வரை பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஃபாதர் ஜான் லூர்து அவர்கள். அதன் பின் அப்பொறுப்புக்கு வந்தவர் ஃபாதர் ஜோசப் ஃபெலிக்ஸ்.
அப்போது ஃபாதர் ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்கள் ஒரு மாதப் பயணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குச் சென்றிருந்தார். எங்களுக்கு அந்நாளில் ஒருவர் வெளிநாடு செல்வது என்பது பெரிய விஷயம். அதனால் நண்பர்களுக்குள் ஒரு விவாதம். ‘‘இவர் எதற்கு திடீர்னு பிலிப்பைன்ஸ் போறாரு?” நான் கேட்ட கேள்விக்கு “இதோ பாரு, இந்த ஸ்கூல் நூற்றாண்டு கண்டுவிட்டது. பிரிட்டிஷ்காரன் கட்டிக் கொடுத்துட்டுப் போயிட்டான். அவற்றில் பாதி பில்டிங் இன்னும் ஓட்டுக் கட்டிடங்களாகவே உள்ளன! பள்ளியை இன்னும் பெருசா டெவலப் பண்ண வேண்டாமா? அதற்கு நிதி வேண்டாமா? இப்படியெல்லாம் வெளிநாடு போனாதான் அது சாத்தியமாகும்! அதற்காகத்தான் போறாரோ என்னவோ?” என்று நண்பன் ஒருவன் அவனுக்குத் தோன்றியதைச் சொன்னான்! அன்றே விளையாட்டாக எனது நோட்டில் வரைந்த கார்ட்டூன்தான் அது!
பொதுவாக பொருளாதார நெருக்கடி, பற்றாக்குறை என்றாலே இன்றும் உலகம் தழுவிய கார்ட்டூனிஸ்ட்டுகள் கையில் எடுப்பது பிச்சைப் பாத்திரத்தைதான்! எனது மூளையிலும் அந்த ஐடியாதான் அன்று உதித்தது! ஃபாதர் அவர்கள் மணிலா விமான நிலையத்திலிருந்து இறங்கி ஒரு திருவோட்டுடன் செல்வது போல் கார்ட்டூன் வரைந்தேன்! நான் கிழித்துப் போட மறந்த அந்த கார்ட்டூனை மிகப் பத்திரமாக எனக்கே தெரியாமல் ஆசிரியர் பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்களிடம் கொடுத்துவிட்டான் எனது நண்பர்களுள் ஒருவன்!
பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்கள் நல்ல கணித ஆசிரியர் மட்டுமல்ல, மாணவர்களிடம் மிக நகைச்சுவை உணர்வுடனும் அன்போடும் பழகும் நபரும்கூட என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். இதனால் எனக்கு எந்த ஆபத்தும் நேராது, என்றும் அவன் நினைத்திருக்கலாம். ஆனாலும், நான் மாட்டிக்கொண்டேன்.
அந்த நாள் முதல் நான் 12-ம் வகுப்பு முடித்து பள்ளியைவிட்டு வெளியேறும் நாள் வரை பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்களைப் பார்க்கும் நேரமெல்லாம் பள்ளி செல்லும் வழியிலோ, பள்ளி வராண்டாவிலோ, அல்லது கடைத்தெருவிலோ தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் அவர் தனது சட்டை பாக்கெட்டில் இருக்கும் மடித்து வைத்திருக்கும் தாளை (அது ஏதாவது கடிதமாக இருக்கலாம், டிக்கெட்டாக இருக்கலாம், ஏதோ ஓர் காகிதம்) லேசாக வெளியே தெரியுமாறு எடுத்து ‘‘டேய், கார்ட்டூனா போடறே? ஃபாதர்கிட்ட கொடுத்திடவா? ஜாக்கிரதை. இந்த மாதிரி குறும்பெல்லாம் இனி பண்ணாதே, ஒழுங்கா படி’’ என்று கண்டித்துவிட்டு சிரித்தவாறே இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார். மிக அன்பான ஆசிரியர், அதுமாதிரி மாட்டிவிட மாட்டார் என்று எனது உள்ளுணர்வு சொன்னாலும், அந்த மாணவப் பருவத்துக்கே உரிய பயம் அவரைப் பார்த்தாலே ஓர் உதறல், நடுக்கம் எனக்குப் பள்ளிப் படிப்பு முடியும் வரை இருக்கத்தான் செய்தது!
நான் வரைந்து சரியாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கார்ட்டூனை மீண்டும் பார்க்கும் ஓர் ஆச்சரிய அனுபவம்! மீண்டும் ஆசிரியர் பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்களின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன்! நன்றி வார்த்தைகளாக வராமல், எனது கண்களில் இருந்து கண்ணீராக வந்தது!
விழா மேடையில் ‘சில்வர் ஜூப்ளி’ கண்ட அந்த கார்ட்டூனைக் காண்பித்தேன்! அதுவே நான் வரைந்த முதல் கார்ட்டூன்! மேடைக்கு வர மாட்டேன் என்று தவிர்க்கப் பார்த்த பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அறிமுகப்படுத்தினேன்! அவரை கூட்டத்தினரிடையே பேசவும்வைத்து மகிழ்ச்சி அடைந்தேன்!
தனது மாணவர்கள் மீது எப்பேர்ப்பட்ட அன்பும் தனது தொழிலின் மீது எப்பேர்ப்பட்ட பக்தியும் கொண்டிருந்தால் இப்படி ஓர் ஆசிரியர் தனது மாணவன் ஒருவன் வரைந்த கார்ட்டூனை 25 ஆண்டுகள் பத்திரப்படுத்திவைத்திருப்பார்! இறைவனின் சக்தி அல்லவா அவர்களின் பின்னாலிருந்து இயக்கியிருக்க முடியும்! இத்தகைய ஆசிரியர்கள் கிடைத்தது எங்களது பொற்காலம் என்று பெருமிதத்துடன் கூறினேன்! விழா நிகழ்ச்சி, விழா ‘நெகிழ்ச்சி’யானது! பலர் கண்களில் கண்ணீர்த் துளிகள்! அன்றைய ஹீரோ நான் அல்ல: ஆசிரியர் பீட்டர் ஃபெலிக்ஸ் அவர்கள்தான் என்று அனைவரும் உணர்ந்தோம்!