× Photographs படம் வளர்ந்த கதை வாசகர் கார்ட்டூன்கள் Contact Us

''கார்ட்டூனிஸ்ட் ஆவது எப்படி?'' – இந்தக் கேள்வி யாருக்காவது எழுமானால் அதற்கு இந்த இணையதளத்தின் பல்சுவை–ப் பகுதியில் என்னால் முடிந்த வரை விளக்கம் அளித்திருக்கிறேன். இந்தப் பக்கம் ஒரு வகையில் அதன் தொடர்ச்சிதான். ஆனால் இது Practical வகுப்பு. பொதுவாகவே ஒரு Professional artist எப்படி படம் போடுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்று ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் விரும்புவது இயற்கை. அவர்களது ஆவலுக்கு இந்தப் பகுதி நல்லத் தீனி–யாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு கார்ட்டூனை எங்கிருந்து ஆரம்பிக்கிறேன், எப்படி அது படிப்படியாக வளர்கிறது, இறுதியில் எவ்வாறு முழுமை பெறுகிறது என்பதை Frame by Frame – ஆக விளக்க முயற்சிக்கிறேன். அவ்வப்போது முடிந்தால் இதனை வீடியோவாகவும் இங்கு பதிவிடுகிறேன்.

படம் போடுவதைக் காட்டிலும் இது சற்றே சிரமமான காரியம். ஏனென்றால் வேகமாக வரையும் போது நானே எங்கு ஆரம்பிக்கிறேன், எப்படி படிப்படியாக வரைகிறேன், என்பதை என்னால் சரியாக கவனிக்க முடியாது. ஏனென்றால் ஒரு தேர்ந்த ஓவியனுக்கு அது அனிச்சைச் செயலாகவே மாறிவிடுகிறது. எனவே, நான் வரைவதை நானே வீடியோ எடுத்து, பிறகு Step by Step அதைப் போட்டு பார்த்த பின்தான் Frame -1, Frame -2,3,4… என்று இங்கு தரமுடியும். இது என்னுடைய ஒரு மணி நேர வேலையை 4 மடங்கா ஆக்கிவிடும். ஆதலால் குறைந்தபட்சம், மாதம் ஒரு முறையாவது இந்த ‘படம் வளர்ந்த கதை’ –யை உங்களிடம் படங்கள் மூலமாகவே சொல்ல முயற்சி செய்கிறேன்.

அது சரி, என்பதைப் படிப்படியாக எப்படி படம் வளர்கிறது என்பதைப் பார்த்துவிட்டு ''அட இவ்வளவுதானா, இந்த ஆள் வேலை? ரொம்ப ஈஸி!'' என்று சுலபமாக எடை போட்டு விடாதீர்கள். படம் வரைவது என்பது ஒரு கார்ட்டூனின் கடைசி கட்டப் பணி மட்டுமே! அதற்கு முன் நான் படிக்க வேண்டிய செய்திகள் ஏராளம்! ஆனாலும் அதற்கு தாராளமான நேரம் கிடையாது! ஏனென்றால் அடுத்து இன்று எந்த சப்ஜெக்ட்–ல் கார்ட்டூன் போடுவது என்று நான் தான் தீர்மானிக்க வேண்டும். இதுவே பல சமயம் பெரும் குழப்பத்தை தரும். எனது நேரத்தை சாப்பிடும்! சப்ஜெக்ட்– தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் நான் கார்ட்டூன்களுக்கான ஐடியா-வை யோசிக்க வேண்டும். சில சமயம் 4 மணிநேரம் யோசித்தாலும் ஒரு நல்ல ஐடியா வராது. வராமலே கூட போகும்! சில சமயம் 4 மணிநேரம் என்ன, ஒரு செய்தியை படித்துக்கொண்டு இருக்கும் போதே 4 வினாடிக்குள் ஒரு ஐடியா Flash ஆகலாம். (ஆனால் இப்படி flash-ஆவது வெகு அபூர்வமாகவே நிகழும்). எனவே ஒவ்வொரு நாளும் ஒரு ஐடியா பண்ணுவது என்பது ஒரு பிரசவம் போல.

சில சமயம் Labour pain– அதிகமாக இருக்கும். சில சமயம் 'சிசேரியன்' போல் இரவு ஒன்பது மணி deadline என்றால் அதற்குள் ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும். சில சமயம் சுகப் பிரசவம்! ஒரே வரியில் சொல்ல போனால், நிறைய படிக்கிறேன், கார்ட்டூன் வரைவதற்காக யோசிக்கிறேன், ஆனால் இறுதியில் ஐடியா என்பது எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்தே வரவேண்டும் அது எப்போது வரும்? எப்படி வரும், என்பதை கருவியாகிய நான் தீர்மானிக்க முடியாது. அதை அவரே தீர்மானிக்கிறார்.

சரி, படம் போடுறது அப்போ நம்ம திறமையா? நன்றாக யோசித்தால் அதுவும் உண்மை அல்ல. சிறு வயதிலேயே இறை அருள் நமக்கு அந்த அதை தந்து விட்டதால் நமக்கு அந்த உண்மை மறந்துவிடுகிறது. அதுவும் 100% அவரிடம் இருந்துதான் வர வேண்டும். சரி, OK! நகைச்சுவை உணர்வு? அதுவும் அவரோடதுதான், என்ன சந்தேகம் இருக்க முடியும்!

சரி, கார்ட்டூனை ரசிக்கிறதோட நிறுத்திடாதிங்க. mathicartoons@gmail.com –க்கு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்! வாசகர்கள் கார்ட்டூன் பகுதியிலே கார்ட்டூன்களும் போடுங்கள்! என்னால் முடிந்தவரை இந்த, கலை குறித்து எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் நோக்கமே இந்த கலை பெரும் வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே! மேற்கத்திய நாடுகளில் கார்ட்டூனிஸ்ட்களை அவர்களின் கலாச்சார சின்னமாக கொண்டாடுகிறார்கள்! ஊதியமாக பணத்தை அள்ளித் தருகிறார்கள்!ஆனால் நம் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை!

ஒரு கார்ட்டூனுக்கான உரிமை (Copy right) அதை உருவாக்கியவருக்குத்தான் என்ற விஷயத்துக்கே நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைதான் தொடர்கிறது. இந்த அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் இன்றும் இருக்கிறார்கள்! திருட்டிலேயே மோசமான திருட்டு பிறர் அறிவைப் திருடுவது தான்! இதைக் கண்டு பிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டிய ஊடகங்களே இதைச் செய்தால்? இன்னும் ஏராளமான விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது! மாறுவோம்! மாற்றுவோம்!