× Photographs படம் வளர்ந்த கதை வாசகர் கார்ட்டூன்கள் Contact Us

Stepping Stones

ஆனந்த விகடன்:

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான கார்ட்டூனிஸ்ட்டுகளை உருவாக்கிய மற்றும் வளர்த்த பெருமை ஆனந்த விகடன் பத்திரிகைக்கு உண்டு. அந்த வரிசையில் நான் கார்ட்டூனிஸ்ட்டாக ஆவதற்கு பிள்ளையார் சுழி போட்டதும் ஆனந்த விகடன் பத்திரிகைதான். ஆனால், இதில் ஒரு சின்ன வித்தியாசம்! ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக இல்லாமல் ஆனந்த விகடனின் மாணவப் பத்திரிகை நிருபராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். சிறு வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அம்புலிமாமா, ரத்னபாலா, முத்து காமிக்ஸிலிருந்து குமுதம், ஆனந்த விகடன், கல்கி... என ஒன்றுவிடாமல் நானும் எனது சகோதரர்களும் கேட்கும் அத்தனைப் பத்திரிகைகளையும் எனது தந்தை வாங்கித் தந்தார். எனது அண்ணன்களுக்காக ‘தி ஹிந்து’வும், Empolyment News–ம் வாங்கப்பட்டன. ஆனாலும், அக்காலத்திலேயே காலை நாளிதழ்களில் ‘தினமணி’ படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

திருநெல்வேலி ஜங்ஷனில் படங்களுக்கு ஃபிரேம் போடும் வியாபாரம் செய்து வந்த ஒரு முஸ்லிம் குடும்பம் எங்களது எதிர் வீட்டில் இருந்தது. அவரது பையன் பெயர் பிலால். அதனால் அவரது வீட்டை ‘பிலால் வீடு’ என்றே அழைப்போம். அவர்களது வீட்டில் ‘தினமணி’ வாங்கிக் கொண்டிருந்தனர்.

தனது மூத்த மகன்கள் இருவரையும் காலையிலேயே கடைக்கு அனுப்பிவிடும் பிலால் அப்பா, மதியச் சாப்பாட்டிற்குப் பிறகுதான் தனது வியாபாரத்துக்குக் கிளம்புவார். இரவு, கடையை அடைத்துவிட்டு வீடு திரும்ப வெகுநேரமாகிவிடும் என்பதால், காலை மிகத் தாமதமாகவே எழுந்திருப்பார். இது தினசரி காலையிலேயே அவர் வீட்டிற்குச் சென்று ‘ஓசி’யிலேயே தினமணி படிக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்தது. எனக்கென்னவோ அந்த வயதிலேயே தினமணியில் வரும் செய்திகளும், தலையங்கங்களும் பிடிக்கும். குறிப்பாக, பரபரப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஷயங்களைப் பெரிதுபடுத்தி பூதாகரமாக்கி செய்திகளைத் தரும் நாளிதழ்கள் மத்தியில் தினமணியின் செய்திகள் அப்போது தெளிந்த நீரோடையைப் போல் பளிச்சென்று இருந்தன.

இத்தகைய படிக்கும் பழக்கம் இருந்த காரணத்தினால்தானோ என்னவோ ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தால் நான் வெகுவாகக் கவரப்பட்டேன்! விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வைத்தத் தேர்வுகள் சவாலாக இருந்தன! முதலில் ஒரு வினாத்தாள் கட்டு வீட்டிற்கு வரும். அதிலேயே பதில் எழுதி அனுப்ப வேண்டும். அவர்கள் கொடுத்தத் தலைப்பிற்கு ஒரு கட்டுரையும் எழுதி அனுப்ப வேண்டும். இதில் தேர்வானவர்கள் மதுரை, திருச்சி, கோவை, சென்னை என ஏதாவது ஒரு பெருநகரத்திற்குச் சென்று அடுத்தத் தேர்வை எழுத வேண்டும். நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தேர்வு எழுதினேன்.

அந்தத் தேர்வில் ‘பாஸ்’ ஆன பிறகு சென்னையில் இன்னொரு தேர்வு! நான் ‘ரிப்போர்டர்’ மற்றும் ‘ஃபோட்டோகிராஃபர்’ பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். ஒரு நாள் முழுக்க டைம். சென்னைக்குள் சுற்றி நாமே ஏதாவது செய்தியைக் கண்டுபிடித்து கட்டுரை எழுதி, புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படச் சுருளையும் கட்டுரையையும் இரவுக்குள் கொடுத்துவிட்டு ஊர் கிளம்பிவிட வேண்டியதுதான் ! அதிலும் தேறிவிட்டால் அடுத்தது நேர்காணல்!

நேர்காணலுக்கும் தேர்வானேன். ஒவ்வோர் ஊர் மாணவர்களும் ஒரு ‘செட்’டாக அழைக்கப்பட்டனர். ஆனந்த விகடன் எம்.டி. மற்றும் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் மாணவர்களிடம் உரையாடுவதுபோல் நடுநடுவே கேள்விகள் கேட்பார். நாங்கள் அளிக்கும் பதில்களுக்கு அருகில் அமர்ந்திருந்த கார்ட்டூனிஸ்ட் மதன் மார்க் போட்டுக் கொண்டிருந்தார். நேர்காணல் முடிந்து ஊர் திரும்பிய ஒரு வாரத்திலேயே ‘‘நீங்கள் ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள், அடுத்த வாரமே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ நிருபர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம், கிளம்பி வரவும்’’ என்று கடிதம் வந்தது!

சென்னை தி.நகரில் இருக்கும் மீனாட்சி திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக அந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முகாம் நடக்கும்போதே, கிடைக்கும் நேரத்தில் விளையாட்டாக ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், மதன், எழுத்தாளர் சுதாங்கன் மேலும் அங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்தவர்கள்… என பல வி.ஐ.பி–க்களை ‘கேரிக்கேச்சர்’களாக ஸ்பாட் ஸ்கெட்ச் செய்துகொண்டிருந்தேன்!

மூன்றாம் நாள் முகாம் முடியும் தருவாயில் அந்த ‘கேரிக்கேச்சர்’களையும், பல்கலை அளவில் எனக்கு தங்கப் பதக்கம் வாங்கித் தந்த சில கார்ட்டூன்களையும் ஆசிரியர் பாலசுப்பிரமணியனிடமும், கார்ட்டூனிஸ்ட் மதனிடமும் காட்டினேன்! இருவருமே இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள்! ‘‘உங்களிடம் இருக்கும் இந்த திறமையைப் பற்றி ஏன் சென்னையில் நடந்த நேர்காணலின்போதே எங்களிடம் சொல்லவில்லை?’’ என்று கேட்டார்கள்! ‘‘நான் நிருபர் / புகைப்படக்காரருக்குத்தானே விண்ணப்பித்திருந்தேன், அதனால் எனக்கு சொல்லத் தோன்றவில்லை’’ என்றேன். ‘‘என்ன பேசுகிறீர்கள்? இதைவிட வேறென்ன பெரிய தகுதி வேண்டும்? நீங்கள் ஒரு ‘Born Cartoonist’, உங்களுக்கு ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனும் இருக்கிறார். அவர் அருள் உங்களைச் சிறப்பாக வழிநடத்தும்’’ என்றார் கார்ட்டூனிஸ்ட் மதன்.

விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள், ‘‘நான் இப்போது சொன்னால் உங்களுக்கு நம்ப முடியாது! புரியாத புதிராக இருக்கும்! You have very very very bright future, ஒரு ‘கார்ட்டூனிஸ்ட்’டாகப் பிற்காலத்தில் நீங்கள் எவ்வளவு சாதனைகள் புரியப் போகிறீர்கள் பாருங்கள்!’’ என வாயார வாழ்த்தினார். அவர்களது தீர்க்கதரிசனமும், வாழ்த்துக்களும்தான் பலித்திருப்பதாக இப்போது நான் நம்புகிறேன்!

நியூஸ் டுடே / News Today:

அப்போது தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் எம்.எஸ்சி இரண்டாவது ஆண்டிற்குள் நுழைந்திருந்த சமயம். எல்லா மாணவர்களும் எம்.எஸ்சி முடித்ததும் என்ன செய்வது என்ற கவலையில் பல்வேறு Competitive exams எழுத ஆரம்பித்திருந்தார்கள். எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற பயம் என்னையும் தொற்றிக் கொண்டபோதுதான், பல்கலை அளவில் நடந்த கார்ட்டூன் போட்டிக்கு நடுவராக வந்தவர் எனக்குக் கூறிய அறிவுரை ஞாபகத்திற்கு வந்தது! அதை ஆமோதிக்கும்விதமாக விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களும், கார்ட்டூனிஸ்ட் மதனும் எனக்கு மேலும் பெரும் நம்பிக்கையைத் தந்திருந்தார்கள். அப்போது ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகை நிருபராகவும் ஆகிவிட்டதால் அடிக்கடி சென்னை வந்து போகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒரு தமிழ் நாளிதழிலும், டி.ஆர்.ஆர் அவர்கள் தொடங்கிய ‘நியூஸ் டுடே’ ஆங்கில நாளிதழிலும் எனது ‘சாம்பிள்’ கார்ட்டூன்கள் சிலவற்றைக் காண்பித்து வேலை கேட்டேன். அதிர்ஷ்டவசமாக இரண்டிலுமே எனக்கு வாய்ப்புக் கிடைத்தது! பல வகைகளில் ‘நியூஸ் டுடே’ தான் அப்போதைக்கு எனக்கு வேலை செய்யச் சரியான இடம் என்று தோன்றியது. வேலையில் சேர ஒப்புக்கொண்டேன். அப்போது எனக்கு வயது 21.

‘இந்த வயதில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலையில் சேருவதற்கு என்ன அவசரம்? என்ன அவசியம்?’ என்று எனது அண்ணன்களும், உறவினர்களும் கேட்டார்கள். ஆனால், எனது தந்தை மட்டும் ‘அவனுக்குப் பிடித்திருந்தால் வேலையில் சேருவதுதான் நல்லது’ எனக் கூறி மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தார். அதற்கு அவர் என் மீது வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கையும் அன்பும் ஒரு காரணம்.

1990, ஜூலை 12 அன்று நியூஸ் டுடே-யில் (News Today) Staff கார்ட்டூனிஸ்ட் ஆகச் சேர்ந்தேன். டி.ஆர்.ஆர் அவர்கள் ஒரு தீவிர காங்கிரஸ் அபிமானி. தனது மூத்த மகனுக்கு ‘ஜவஹர்’ என்று பெயர் வைக்கும் அளவிற்கு ஜவஹர்லால் நேருவின் மேல் பெரும் பக்திகொண்டிருந்தவர். டி.ஆர்.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தனது வீட்டில் இருந்தவாறே கட்டுரைகளும், தலையங்கங்களும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்த சமயம் ‘நியூஸ் டுடே’ அலுவலகப் பொறுப்பை ஏற்றிருந்தார் அவரது மகன் டி.ஆர்.ஜவஹர். அவரும் ஓர் இளைஞர் ஆதலால் எங்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது. ‘‘அப்பா உங்களைக் கூப்பிடுகிறார், வந்துப் பாருங்கள்’’ என்று வீட்டிற்கும் மருத்துவமனைக்கும்கூட கூட்டிச் செல்வார்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், நியூஸ் டுடே-யின் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படித்துவிடும் அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘உங்களது கார்ட்டூன்கள் மிக நன்றாக வந்து கொண்டிருக்கின்றன. Editorial Cartoon-கள் தவிர முதல் பக்கத்திலும் கார்ட்டூன் போடுங்கள். முடிந்தால் Sports Page-ல்கூட விளையாட்டு சம்பந்தமான கார்ட்டூன்கள் போட முயற்சி செய்யுங்கள்’ என்று மிகுந்த ஊக்கம் அளிப்பார்.

அப்போது நியூஸ் டுடேயின் ‘நியூஸ் எடிட்டர்’ ஆக இருந்த வி.பிரேமாவதி அவர்கள் அளித்த அன்பும் ஆதரவும் இங்கு நினைவுகூரத்தக்கது. மேலும், நியூஸ் டுடேயின் சகோதர பத்திரிகையான ‘மக்கள் குரல்’ பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த சண்முகவேல் அவர்களும் எனது ஆராதனைக்கு உரிய மனிதர்.

சி.பா.ஆதித்தனார் அவர்களின் பாசறையில் உருவான ஒரு மாபெரும் பத்திரிகையாளர். கரும்பைப் பிழிந்து சாறு தருவதுபோல் ஒவ்வொரு செய்திக்கும் அவர் கொடுக்கும் தலைப்புகள் இருக்கும். திருமணமே செய்து கொள்ளாமல் பத்திரிகைத் துறைக்கே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். நியூஸ்டுடே-யில் ஆங்கிலத்தில் வரும் கார்ட்டூன்கள் தமிழக செய்திகளை ஒட்டி வந்தால் மொழிபெயர்க்காமல் அப்படியே மக்கள் குரலிலும் இடம்பெறச் செய்வார். அந்த அளவிற்கு எனது கார்ட்டூன்கள் மீது மரியாதையும், என் மீது அன்பும் வைத்திருந்தார்.

1990-லிருந்து 1997-ஆம் ஆண்டு நான் ‘தினமணி’யில் சேரும்வரை கிட்டதட்ட ஏழு வருடங்கள் நியூஸ்டுடே-யில் கார்ட்டூன்கள் போட்டு வந்தேன். அதுவரை என்னிடம் ஆரம்பத்தில் காட்டிய அதே அன்புடனும் ஆதரவுடனும் நட்பு பாராட்டிய டி.ஆர்.ஜவஹர் அவர்களும் இங்கு நினைவுகூரத்தக்கவர்.

(குறிப்பு: நியூஸ்டுடே-யில் சேர்ந்தபோது எனது இயற்பெயரான மாரியப்பன் என்ற பெயரைச் சுருக்கி ‘Mari’ என்ற பெயரிலேயே கார்ட்டூன்களில் கையெழுத்து இட்டு வந்தேன். பின்னர் வேறு பத்திரிக்கைகளில் ‘மதி’ என்று கையெழுத்திட ஆரம்பித்தாலும், நியூஸ்டுடே-யிலிருந்து விலகும் வரை (1990 – 1997) Mari என்ற பெயரையே எனது கார்ட்டூன்களில் உபயோகப்படுத்தி வந்தேன்.)

சாவி:

‘நியூஸ்டுடே’ மாலையில் வெளியாகும் நாளிதழ். ஆதலால், மதியம் 2 மணிக்கெல்லாம் அன்றைய கார்ட்டூனை நான் கொடுத்துவிட வேண்டும் என்பதால், காலை 9 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து, மதியம் 1 மணிக்குள் எனது வேலையை முடித்துவிடுவேன். அதற்குப் பிறகு நான் வீடு திரும்பவேண்டியதுதான். மிஞ்சிய நாள் முழுவதும் தனிமைதான். இந்தச் சமயத்தில்தான் ‘மேலும் பல பத்திரிகைகளில் ஃப்ரீலான்சராக (Freelancer) கார்ட்டூன்கள் வரையலாமே’ என்ற எண்ணம் எனக்கு வந்தது.

டி.ஆர்.ஜவஹரிடம் எனது எண்ணத்தைச் சொன்னேன். ‘‘மிக நல்ல முடிவு, இதனால் மேலும் உங்கள் திறமை வளருவதோடு உங்களால் மேலும் சம்பாதிக்கவும் முடியும். நானே இதைப் பற்றி உங்களிடம் சொல்லலாம் என்றிருந்தேன்’’ என்று மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்! ஃப்ரீலான்சர் ஆவது என்ற முடிவு எடுத்தவுடனேயே எனக்கு ஞாபகம் வந்தது ‘சாவி’ பத்திரிகையும் அதன் ஆசிரியர் எழுத்தாளர் சாவி அவர்களும்தான்.

சாவி அவர்களைச் சென்று சந்தித்தேன். பொதுவாகவே சாவி அவர்களுக்கு கார்ட்டூன்கள் மற்றும் நகைச்சுவை மிகப் பிடித்தமான விஷயம். அதனால் பார்த்ததுமே என்னையும் அவருக்குப் பிடித்து போய்விட்டது. ‘‘பத்திரிகைகளுக்கு கார்ட்டூன்கள்தான் மிக அவசியம். என்னை பொறுத்தவரையில் கார்ட்டூன்கள் இல்லாமல் ஒரு பத்திரிகை வரவே கூடாது. உங்களைப்போல் ஓர் ஆள் எப்போது கிடைப்பார் என்றுதான் தவித்துக்கொண்டிருந்தேன். தேவையான டூல்ஸ் (Tools) எடுத்து வந்திருக்கிறீர்களா? இன்றே உங்கள் பணியைத் தொடங்கலாம்’’ என்றார்!

‘‘சரி, நியூஸ்டுடே-யில் Mari என்று கையெழுத்து இடுகிறீர்கள். சாவியில் என்ன பெயரில் போடப்போகிறீர்கள்?’’ என்றார். ‘‘மரகதகோமதி’ என்ற எனது தாயார் பெயரைச் சுருக்கி ‘மதி’ என்று போடலாம் என நினைக்கிறேன் சார்’’ என்று கூறினேன். ‘‘நல்ல பெயர்! பிற்காலத்தில் உங்கள் ரசிகர்கள் உங்களைப் பாராட்டுவதற்கும் உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களை வசை பாடுவதற்கும் பொருத்தமாக இருக்கும்’’ என்றார்! (அவரது தீர்க்கதரிசன வார்த்தைகள் நிஜமாகிவிட்டதை இன்று கண்கூடாகக் காண்கிறேன்.)

ஒவ்வொரு வாரமும் எத்தனை முக்கிய சப்ஜெட்டுகள் கிடைக்கின்றனவோ அத்தனையிலும் கார்ட்டூன்களை rough sketch ஆக வரைந்து காண்பிப்பேன். தலையங்கப் பக்கத்துக்கு தேவையான ஒரு கார்ட்டூன் போதும் என அவர் நினைத்ததே கிடையாது! எத்தனை கார்ட்டூன்கள் பிடிக்கிறதோ அத்தனையையும் முழுப் பக்க கார்ட்டூன்களாக வரைந்து தருமாறு கேட்பார். நானோ, ‘‘சார் மொத்தமே 64 பக்கங்கள்தான். எப்படி இத்தனை கார்ட்டூன்கள் போடுவீர்கள்?’’ என்பேன். அவரோ சிரித்துக்கொண்டே ‘‘அந்தக் கவலை உங்களுக்குக் கூடாது, அந்தக் கவலை என்னுடையது மட்டுமே. ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒரு பஸ்ஸுக்காகப் பெருங்கூட்டம் காத்திருக்கிறது. தூரத்தில் இருந்து பஸ் வருவது தெரியும், ஏற்கெனவே நிரம்பி வழியும். பலர் படிக்கட்டுகளில் (foot board) தொங்கிக்கொண்டு வருவார்கள். அப்படி இருந்தாலும்கூட பஸ் ஸ்டாப்புக்கு வந்து மீண்டும் கிளம்பும்போது, எப்படியாவது நான்கு ஐந்து பேர் அந்த பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறிவிடுவது இல்லையா? அதுபோல்தான் இந்தக் கார்ட்டூன்களும் எப்படியாவது இடம்பிடித்துவிடும்’’ என்பார்.

அப்படி ஒரே வாரத்தில் நான்கு, ஐந்து கார்ட்டூன்கள் வரும் நேரங்களில் ஒவ்வொரு கார்ட்டூனையும் ஒவ்வொருவிதமான கோடுகளில் வித்தியாசப்படுத்தி வரையச் சொல்வார்! சில கார்ட்டூனை மிக மெலிதான கோடுகளில் வரையச் சொல்வார். மெலிதான என்பதை விளக்குவதற்கு ‘ஓமப்பொடி’ Thin lines என்பார்! சில கார்ட்டூன்களுக்கு பார்டரே வேண்டாம். சில கார்ட்டூன்களுக்கு நல்லா ‘காராசேவு’ சைஸில் ‘திக்’காக பார்டர் போடுங்கள் என்பார்! ஒரு சில நாட்களில் எனது ஐடியாவைக் காண்பிப்பதற்காக Rough Sketch-ல் நான் வரைந்து காட்டும் கார்ட்டூன்களை, ‘‘ஐயோ பிரமாதம்! நான் இதை அப்படியே உபயோகப்படுத்திக் கொள்கிறேன். நீங்கள் இதை மீண்டும் Sketch செய்தால் பெயின்டிங் மாதிரி அழகுபடுத்திவிடுவீர்கள். அதனால் உங்கள் வேலை இத்தோடு முடிந்தது’’ என்று சிலாகித்துக் கூறுவார். ஆனாலும், ஒவ்வொரு வாரமும் தலையங்கப் பக்கத்தில் வரும் கார்ட்டூன்கள் மட்டும் அவருக்கு Brush-ல்தான் வரைய வேண்டும். ‘கார்ட்டூன்களை Brush-ல் வரைபவர் மட்டும்தான் என்னை பொறுத்தவரையில் ஒரு முழுமையான கார்ட்டூனிஸ்ட்’ என்பார்.

ஒரு முறை எனது கார்ட்டூனுக்காகப் பெரிதாக ஒரு வட்டம் வரைந்து கொண்டிருந்தேன். அருகில் இருந்து நான் வட்டம் போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த அவர் உடனடியாக உதவி ஆசிரியர் ரவிப்பிரகாஷைக் கூப்பிட்டு ‘‘பாருங்க ரவி, Compass போன்ற எந்த உபகரணத்தின் உதவியும் இல்லாமல் எப்படிப் பிசிறு இல்லாமல் வட்டம் போட்டிருக்கிறார்! இப்படி வட்டம் போடத் தெரிந்தால் அவர் ஒரு முழுமையான ஓவியத் திறமை உடையவர் என்று அர்த்தம்’’ என்று கூறினார்! இப்படியாக ஓவியத் திறமையின் மீது அவருக்கு இருந்த அறிவும் ரசனையும் என்னைப் பலமுறை வியக்க வைத்திருக்கிறது. அவரிடம் காணப்பட்ட இந்த ஆற்றலை இதுவரை வேறு எந்த ஆசிரியரிடமும் நான் கண்டதில்லை.

ஒருவரிடம் எத்தனைத் திறமைகள் இருக்கின்றனவோ அத்தனையையும் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்துவிடுவதில் அவர் ஒரு வித்தகர் என்பதைத் தமிழ் பத்திரிகை உலகமே அறியும். இதன் காரணமாக மிக குறுகிய காலத்திலேயே கார்ட்டூன்கள் தவிர சாவியில் வரும் ஜோக்குகள், துணுக்குகள் அத்தனைக்கும் விதவிதமாகப் படம் போட்டுக் கொடுக்க ஆரம்பித்தேன். அம்மாதிரியானப் படங்களை மிகவும் ரசிப்பார். ‘நீங்கள் வரையும் படங்கள் சில சமயம் அந்த ஜோக்குகளையேத் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது’ என்பார்! ஒரு சமயம் நான் ஒரு ஜோக்குக்கு வரைந்த ஒரு முகத்தை அவரே என்னைக் கூப்பிட்டு வரைந்து காண்பித்து ‘‘சென்ற வாரம் இப்படி ஒரு முகம் போட்டிருக்கிறீர்கள், பயங்கரம்! இப்படி ஒரு தைரியம் யாருக்கு வரும்! இப்போதெல்லாம் ஜோக்குகளுக்காக நீங்கள் வரையும் படங்களில் ஒரு திமிரு தெரிகிறது. ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு அவரிடம் இருக்கும் திறமையின் உச்சத்தைத் தொட்டுவிட்டால்தான் அந்தத் திமிர் வரும், அது நல்லது’’ என்று வியந்து பாராட்டினார்!

இப்படியாக ‘ஃப்ரீலான்சர்’ ஆக இருந்தாலும் சாவியைப் பொறுத்தவரை நான் ஒரு Staff Cartoonist ஆகவே மாறிவிட்டேன். அட்டை டூ அட்டை எனது படங்கள் இடம்பெறும். அதனால் அவர் அன்பாக என்னை ‘ஆஸ்தான வித்வான்’ என்றே அழைக்கத் தொடங்கினார். மற்ற ஊழியர்களிடம் ‘‘என்ன சார், நமது ஆஸ்தான வித்வான் வந்துவிட்டாரா? ஆஸ்தான வித்வான் என்னப் பண்றார்?’’ என்றெல்லாம் கேட்பார். ‘தினமணி’யில் பிற்காலத்தில் நான் வரைந்து வந்த ‘அடடே’-வைப் போன்று வாரா வாரம் ‘அப்பு-குப்பு’ என்ற தலைப்பில் ஒரு கார்ட்டூனும் வரைந்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது முழுப்பக்க, அரைப்பக்க அளவில் Silent ஜோக்குகளும் வரைந்து வந்திருக்கிறேன்.

வாரப் பத்திரிகை ஆதலால் நாம் கொடுக்கும் பலதரப்பட்ட விஷயங்களை அவை கொடுக்கப்படும் விதத்திலும், பக்கங்களின் ‘லே–அவுட்’டிலும் அவ்வப்போது மாற்றங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பார். இதற்காகவே சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர் குழுவோடு வெளியூர்களுக்கு சென்றுத் தங்கி, discussion-ல் ஈடுபடுவார். அம்மாதிரி discussion-க்கு முதல் தடவையாக என்னை அழைத்தபோது, ‘‘சார், என்னால் எப்படி வர முடியும்? மற்றப் பத்திரிகைகளிலும் கார்ட்டூன் போட்டு வருகிறேனே, அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?’’ என்றேன். அவரோ பதிலுக்கு ‘‘இப்படி எல்லாம் சொல்லாதீங்க. ஒரு நாலு நாள் உடம்பு சரியில்லாமல் போனால் என்ன செய்வீர்கள்? இன்னொன்று, நீங்கள் மனது வைத்தால் அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய கார்ட்டூன்களை முன்னரே முடித்துக் கொடுத்துவிட்டு வரமுடியும்’’ என்று கூறினார்.

முதல் தடவை எனக்கு இருந்தத் தயக்கம் அதற்கு அடுத்த discussion-க்குச் செல்வதில் இல்லை. ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் அத்தனை சுவாரசியம் மிக்கதாக இருந்தது. அடிக்கடி செல்லும் ஊர்கள் ஊட்டி மற்றும் பெங்களூர் ஆகத்தான் இருக்கும். ஊட்டி வெலிங்டனில் அவரது மருமகன் இந்திய ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்து வந்தார். அவரது வீட்டுக்கு எதிரே புல்தரையில், வெட்ட வெளியில், சுற்றிலும் மலைகள், நடுவே ஒரு பெரிய பள்ளத்தாக்கு என்ற அற்புதமான சூழலில் நாங்கள் நாள் முழுக்க உட்கார்ந்து உரையாடியது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்கள்.

சாவி சார் ‘மிமிக்ரி’ செய்வதில் வல்லவர் என்பது அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். Discussion-னின் இடை இடையே பெரிய பெரிய வி.ஐ.பி-கள், தலைவர்கள் ஆகியோருடன் தனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை அற்புதமாக ‘மிமிக்ரி’ செய்து காண்பிப்பார். இம்மாதிரி வெளியூர்களுக்குச் செல்லும்போது அவர் கொடுக்கும் சில ஐடியாக்கள் அவர் வயதுக்கு பொருந்தாத வண்ணம் இளமையுடன் இருப்பதைக் கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன். ‘டிஸ்கஷன்’ முடியும் நாள் அன்று சில சமயங்களில் ஏதாவது பரிசுப் பொருள்கள் வேறு வாங்கி கொடுப்பார். இத்தகைய ‘டிஸ்கஷன்’களில் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி), சாவியின் இணை ஆசிரியர் ரவிப்பிரகாஷ், ராணி மைந்தன், லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் மோகன்... போன்றவர்கள் தவறாமல் கலந்துகொள்ளும் எனது நண்பர்கள். எனது வளர்ச்சியில் அவர்களுக்கும் சிறந்த பங்குண்டு.

ஒரு முறை ‘சாவி’ பத்திரிகை தீவிர நிதி நெருக்கடியில் இருந்தபோது ஊழியர்கள் அனைவரையும் அழைத்து ‘‘எனக்கு வேறு வழி இல்லை, மிகுந்த பணத்தட்டுப்பாடு. ஆதலால் நீங்கள் அனைவரும் தற்போது வாங்கும் சம்பளத்தில் 50%, கிட்டத்தட்ட சரிபாதியாக குறைத்துக்கொள்வதாக இருந்தால் மட்டுமே என்னால் பத்திரிகை நடத்த இயலும். நீங்கள் இதற்குச் சம்மதம் தெரிவிப்பதாக இருந்தால், உங்களுக்காக இப்பத்திரிகையை நடத்துகிறேன்’’ என்றார். அனைவருக்கும் உண்மை நிலை நன்றாகத் தெரியும். அதனால் அதற்கு முழுமனதுடன் சம்மதித்தனர். ஆனால், அந்த ‘டிஸ்கஷன்’ நடந்தபோது நான் இல்லை.

சாவி பத்திரிகையின் இத்தகைய வீழ்ச்சிக்கு நிர்வாகக் கோளாறுகள்தான் காரணமாக இருந்தன. இதை சாவி அடிக்கடி எங்களிடம் கூறுவார். ‘‘நான் ஒரு நல்ல ஆசிரியர், ஆனால், ஒரு நல்ல நிர்வாகியோ, முதலாளியோ அல்ல. இந்தப் பத்திரிகைக்கு நான் ஆசிரியராக மட்டும் இருந்து, வேறு ஒருவர் முதலாளியாக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’’ என்பார்.

இந்த சம்பளக் குறைப்பு விவகாரம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து சாவிக்கான கார்ட்டூன் வரையும் நாளில் அலுவலகத்திற்கு வந்தேன். இணை ஆசிரியர் ரவிப்பிரகாஷ் என்னிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினார். ஏனென்றால் freelancer-ஆக இருந்தாலும் ‘ஆஸ்தான வித்வான்’ ஆன எனக்கு ஒரு Staff Cartoonist-க்கு தருவது போலத்தான் மாதச் சம்பளமும் வருடா வருடம் தீபாவளி போனஸும் கொடுத்துக்கொண்டிருந்தார் சாவி.

ரவிப்பிரகாஷ் கூறியதைக் கேட்ட நான், ‘‘எல்லோருக்கும்தானே இந்த முடிவு என்பதால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்றேன். மாலை ஆறு மணி அளவில் அப்போது சாவி-யில் கேஷியராக வேலை செய்துகொண்டிருந்த பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னை அழைத்து, ‘‘சாவி சார் உங்களுக்கு மட்டும் ஏற்கெனவே நீங்கள் வாங்கிய சம்பளத்தைப் பைசா குறைக்காமல் கொடுக்க சொல்லிவிட்டார்’’ என்றார்! எனக்கோ அதிர்ச்சி. உடனடியாக சாவி சாரை சென்று பார்த்தேன். ‘‘என்ன சார், எனக்கு மட்டும் இந்தச் சலுகை?’’ என்றேன். ‘‘இல்லை காலையில் இருந்தே உங்கள் முகத்தை நான் கவனித்து வருகிறேன். உங்கள் முகம் வாட்டமாகவே இருக்கிறது. அதனால்தான் முழுச் சம்பளம் கொடுக்கச் சொன்னேன்’’ என்றார். உண்மையைச் சொல்வதென்றால் அவர் எடுத்த முடிவில் எனக்கு எந்த வருத்தமுமில்லை என்பது எனக்குத்தான் தெரியும். ஆனால், பலமுறை அவருக்கு நான் இதை எடுத்துக் கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘என் மீது அன்பும் மரியாதையும் இருந்தால், எனது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்’’ என்று கூறினார். வேறு வழியில்லாமல் நானும் சம்மதித்தேன்.

இத்தகைய நிதி நெருக்கடியான சூழலில்தான் ஒரு முறை எனது அந்த வாரக் கார்ட்டூனை காண்பித்தபோது மிகுந்த சந்தோஷத்தில் ‘‘இந்த கார்ட்டூனைப் பார்க்கும்போது, கலைஞருக்கு அண்ணா மோதிரம் அணிவித்ததுபோல் உங்களுக்காக ஒரு பொதுக்கூட்டம் கூட்டி உங்களுக்கு நான் ஒரு மோதிரம் அணிவிக்க வேண்டும் என தோன்றுகிறது’’ என்றார். உடனடியாகவே ‘‘அதற்காக எங்கே மோதிரம்’’ என்று உடனே என்னிடம் கேட்டுவிடாதீர்கள். என்னிடம் இப்போது அதற்கான நிதி இல்லை’’ என்று சிரித்துக்கொண்டே கூறினார். அவர் என் கார்ட்டூன்கள் மீது வைத்திருந்த மரியாதைக்கும் என் மீது கொண்டிருந்த அன்பிற்கும் இதைவிட நான் வேறு என்ன ஆதாரம் கொடுத்துவிட முடியும்?!

இதயம் பேசுகிறது:

சாவியில் கார்ட்டூனிஸ்டாக வாய்ப்புக் கேட்ட அதே சமயத்தில்தான் ‘இதயம் பேசுகிறது’ ஆசிரியர் மணியன் அவர்களையும் சந்தித்து வாய்ப்புக் கேட்டேன். எனது மாதிரி கார்ட்டூன்களையும், Newstoday-யில் வந்த சில கார்ட்டூன்களையும் பார்த்துவிட்டு சந்தோஷமாக, ‘‘இந்த வாரத்தில் இருந்தே நீங்கள் எனது பத்திரிகையில் கார்ட்டூன் போட ஆரம்பிக்கலாம்’’ என்றார்!

முதல் நான்கு, ஐந்து வாரங்கள் மட்டுமே நான் கொடுக்கும் ஐடியாக்களில் எதைப் போட வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். சாவியும், மணியன் அவர்களும் ஆனந்தவிகடன் பத்திரிகையில் ஒரே நேரத்தில் உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள். விகடனில் வெளிவரும் மணியனின் சர்வதேசப் பயணக் கட்டுரைகளும், சாவியின் நகைச்சுவை ததும்பும் கதைகளும் பிரபலம். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இருவரும் ஆனந்த விகடனைவிட்டு வெளியேறி, தனித்தனியாகப் பத்திரிகை தொடங்கினார்கள். சாவி, தீவிர கருணாநிதி ஆதரவாளர். மணியனோ, எம்.ஜி.ஆரின் ஆதரவாளர். எனவே, வாசகர்கள் மத்தியில் ஒன்றுக்கு ஒன்று போட்டிப் பத்திரிகைகள் என்றே கருதப்பட்டன. காலம் செல்லச் செல்ல அவர்கள் இடையே இருந்த நட்புணர்வும் குறைந்து போய் இருவரும் ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்வதைக்கூட நிறுத்திக்கொண்டனர் என கேள்விப் பட்டிருக்கிறேன்.

சாவியில் போடும் அதே பெயரிலேயே கார்ட்டூன்கள் போட்டால், இருவருக்குமே அது பிடிக்காது என்று எனக்குத் தோன்றியது. ஆதலால், எனது அம்மாவழிப் பாட்டி ‘சிதம்பரத்தம்மாள்’ பெயரை சுருக்கி, ‘சிதம்பரம்’ என்ற பெயரில் போட ஆரம்பித்தேன். பிறகு நீங்கள் இனி உங்கள் ஐடியாக்களை என்னிடம் காண்பிக்க வேண்டாம், உதவி ஆசிரியர் மா.முருகன் அவர்களிடம் ‘டிஸ்கஸ்’ செய்து போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

மா.முருகன் அவர்களும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதால்தானோ என்னவோ எங்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது. மிக நட்புடன் பழகுவார். இதற்கிடையில் அலுவலகத்துக்கு ஆசிரியர் மணியன் வரும் நேரமும் நான் கார்ட்டூன் போட வரும் நேரமும் வெவ்வேறாக இருந்தன. அவர் காலையில் வந்துவிட்டு மதியம் கிளம்பிவிடுவார். நானோ மதியத்துக்கு மேல்தான் அதுவும் வாரத்துக்கு ஒருநாள்தான் செல்வேன். அதனால் எப்போதாவதுதான் அவரைச் சந்திக்க நேரிடும். அப்படிச் சந்திக்கும்போதெல்லாம் ‘‘தமிழகத்தில் இப்போதைக்கு மதன்தான் நம்பர் ஒன் கார்ட்டூனிஸ்ட். அவர் கொடிதான் பறந்துகொண்டிருக்கிறது. அவரைப் போல் நீங்களும் ஒரு நாள் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆவீர்கள். தமிழ்ப் பத்திரிகை உலகில் உங்களது கொடியும் ஒரு காலத்தில் உயரத்தில் பறக்கும்’’ என்று கூறுவார்.

சாவியில் கார்ட்டூன்கள் மட்டுமல்லாமல் ஜோக்குகள், துணுக்குகள் என அட்டை to அட்டை படங்கள் போட்டு வந்தது மாதிரி இதயம் பேசுகிறதில் நான் செய்யவில்லை. தலையங்கப் பக்க கார்ட்டூன்கள் மட்டுமே போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கல்கி:

சாவி, இதயம் பேசுகிறது பத்திரிகைகளுக்கு அடுத்து எனக்கு ஒரு நல்ல ஏணிப்படியாக அமைந்தது கல்கி. சிறுவயதில் இருந்தே நான் கல்கி பத்திரிகையைப் படித்துகொண்டிருந்தேன். கல்கியில் வரும் தலையங்கத்தையும், கேள்விபதில்களையும் மிக விரும்பிப் படிப்பேன். மற்ற வாரப் பத்திரிகைகளைப்போல மேம்போக்காக இல்லாமல் கல்கியின் தலையங்கங்கள் முழுமையானதாக இருக்கும். எனவே, அதில் கார்ட்டூன் போட வேண்டும் என்ற ஆசை எனக்கு இயற்கையாகவே வந்தது.

அப்போது கல்கியின் உதவி ஆசிரியராக இருந்த சீதா ரவி அவர்களையும், கல்கியின் ஆசிரியர் ராஜேந்திரன் அவர்களையும் சந்தித்து எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். ‘‘உங்களிடம் நல்லத் திறமை இருக்கிறது. உங்களை எங்கள் பத்திரிகைக்கு எவ்வளவு பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால், வேறு பல பத்திரிகைகளிலும் நீங்கள் கார்ட்டூன்கள் போட்டு வருவதால், எங்களது தலையங்கப் பக்க கார்ட்டூன்களை நீங்கள் வரைய முடியாது. எனது தந்தை கல்கியின் காலத்தில் இருந்தே இந்த கொள்கையைக் கடைப்பிடித்துவருகிறோம்’’ என்றார்கள்.

முதலில் எனக்கு இது சிறிது ஏமாற்றத்தைத் தந்தாலும் சில காலத்திற்குப் பிறகு இதுவும் நன்மைக்குதான் என்று தோன்றியது. கல்கியின் மற்றப் பக்கங்களில் முழுபக்க அளவிலோ அல்லது நடுப்பக்கத்தில் கார்ட்டூன்களாகவோ அரசியலையே அடிப்படையாகக் கொண்டு தலையங்கக் கார்ட்டூன்கள்போல் அல்லாமல் வேறுவிதமாக கார்ட்டூன்கள் போட ஆரம்பித்தேன். குறிப்பாக அந்தந்த சீஸனைப் பொறுத்து அந்தத் தொகுப்புக் கார்ட்டூன்கள் அமையும். உதாரணத்திற்கு ‘அரசியல் தீபாவளி’ ‘அரசியல் பொங்கல்’, மழைக்காலங்களில் ‘அடைமழை அரசியல்’ என வெவ்வேறு தலைப்புகளில் அந்தக் கார்ட்டூன்கள் அமையும். சில சமயங்களில் அட்டைப் படத்திலேயே கலரில் எனது முழுப் பக்க கார்ட்டூன்கள் வெளியாகின! ஆனாலும், வாரம் விடாமல் ஒரு தொடர்போல நான் ஏதாவது கல்கிக்கு பங்களிக்க வேண்டும் என்று கல்கி ராஜேந்திரனின் மகள் சீதா ரவி விருப்பப்பட்டார். ஒருநாள் தொலைபேசியில் அழைத்து, ‘‘இது விஷயமாக சீரியஸாக ஏதாவது யோசித்துச் சொல்லுங்கள்’’ என்றார்.

அப்போது உதயமானதுதான் ‘ஜில்லு-ஜானு’ என்ற Strip cartoon- ஐடியா. ‘ஜானு’ என்ற சிறுமியும், ‘ஜில்லு’ என்ற அவளது நாய்க்குட்டியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிதான் அதன் மையக் கருத்து. அரசியல், பொருளாதாரம், இதர சமூகப் பிரச்னைகள்... என அவை விவாதிக்காத விஷயமே இருக்காது. கல்கிக்குத் தேவையான மற்ற கார்ட்டூன்களை எல்லாம் வீட்டில் இருந்தே வரைந்து கொடுத்து அனுப்பிவிடுவேன். ஆனால், ‘ஜில்லு-ஜானு’வை பொறுத்தவரையில் ஒரு தலையங்கப் பக்க கார்ட்டூனுக்கு ஈடான அளவு முக்கியத்துவம் கொடுத்தார் ஆசிரியர் கல்கி ராஜேந்திரன் அவர்கள். அதனால் வாரா வாரம் ஒரு குறிப்பிட்ட நாள் மாலை சுமார் 5 மணிக்கு மேல் கல்கி ராஜேந்திரன் அவர்களுடன் நான் டிஸ்கஷனில் ஈடுபட வேண்டும். அவரது அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருப்போம். எனது ஐடியாக்களைச் சொல்வேன். உடனடியாக எதையும் சரி என்று சொல்லிவிட மாட்டார். எது ‘பெட்டர்’ ஐடியா என்று தீவிரமாக சிந்தித்துதான் ஒரு முடிவுக்கு வருவார். சில சமயம் ‘‘எது ‘பெட்டர்’ என்று நீங்களே சொல்லுங்கள்’’ என்பார். ஒரு ஐடியா பிடித்திருந்தால் மிகச் சத்தமாக வாய்விட்டு சிரிப்பார் ‘‘பிரமாதம், பிரமாதம்'' என்பார்.

இந்த மாதிரி சந்திப்புகளின்போது நான் கார்ட்டூனிஸ்ட் ஆவதற்கு முன்பு இருந்த அரசியல் காலம் எப்படியெல்லாம் இருந்தது என்று உற்சாகமாகக் கூறுவார். ஏனென்றால், கல்கி குடும்பத்தின் பாரம்பர்யம் மிகப் பெரியது. உலகமே வியந்து போற்றும் எழுத்தாளரான அவரது தந்தை கல்கி, சதாசிவம், மூதறிஞர் ராஜாஜி மூவரும் இணை பிரியா நண்பர்கள். எனவே, சிறு வயதில் இருந்தே இவர்களைப் பார்த்து, பழகி, கேட்டு அவர் அறிந்துகொண்ட பல விஷயங்களை என்னோடு பகிர்ந்துகொள்வார். அம் மூவர்களிடமும் இருந்த உழைப்பு, ஒழுக்கம், நேர்மை, தேசபக்தி... இவற்றையெல்லாம் அவர் சொல்லும்போது கேட்டு வியந்திருக்கிறேன். இத்தகைய கேள்வி ஞானம் என்னை அறியாமலேயே எனக்குள் சில பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆரம்பித்த சில வாரங்களிலேயே ‘ஜில்லு-ஜானு’ கார்ட்டூன்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஒரு காலகட்டத்தில் ‘ஜில்லு-ஜானு’ சிறப்பிதழ் என்று வெளியிடும் அளவிற்கு வந்தது. அட்டைப் படமே ‘ஜில்லு-ஜானு’ கார்ட்டூனாக வெளிவந்தது. (சாவியில் ‘மதி’, இதயம் பேசுகிறதில் ‘சிதம்பரம்’, கல்கியிலும் ‘மதி’ என்ற பெயரிலேயே கார்ட்டூன்கள் போட்டு வந்தாலும், ‘ஜில்லு-ஜானு’ கார்ட்டூனுக்கு மட்டும் ‘சுப்பிரமணியன்’ என்ற எனது தந்தையாரின் பெயரை, ‘சுபி’ எனச் சுருக்கி கையெழுத்திட்டு வந்தேன். அதற்கு காரணம் Strip cartoon என்பதால் அதற்கு ஒரு தனி ‘ஐடென்டிடி’ கிடைக்கட்டும் என்பதாலும் எனது அப்பா பாட்டி, அம்மா பாட்டி, எனது தாயார் பெயர்களில் கார்ட்டூன்களை போட்டு வந்ததால் எனது தந்தையின் பெயரையும் எப்படியாவது உபயோகப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்ததுமே!

கல்கியில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அந்தக் குழுமத்திலிருந்து வெளிவந்த சிறுவர்களுக்கான ‘கோகுலம்’ ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பதிப்புகளின் ஆசிரியர்கள் சந்தியா மற்றும் ஹரிஹரன் ஆகியோரும் குழந்தைகளுக்காக, அவர்கள் சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட்டுகளில் கார்ட்டூன்கள் போட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். எனக்குள் ஓர் ஓரத்தில் குழந்தைகளுக்காகவும் ஏதாவது காரட்டூன்கள் போட வேண்டும் என்ற ஆசை வெகுநாளாக இருந்தது. அந்த ஆசையும் அதன் மூலம் நிறைவேறியது!

இதன் மூலம் கல்கி நிறுவனம் அரசியல் தவிர்த்து, வேறு தளங்களுக்கும் நான் செல்வதற்கு வழிகாட்டியது. இங்கு இன்னொருவரையும் நான் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அவர் எழுத்தாளர் மற்றும் கல்கியில் உதவி ஆசிரியராக வெகுநாளாக இருந்தவருமான பா.ராகவன். அவர் கல்கியில் பணிபுரிந்தபோது முடிந்த அளவு என்னிடம் இருந்தத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் மிகத் தேர்ந்தவராக இருந்தார். எந்த அளவிற்கு என்றால் அவரது திருமண அழைப்பிதழின் முன் அட்டையில் அவரையும் மணமகளையும் ‘நீங்கள்தான் கார்ட்டூனாக போட்டுத் தர வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்து, என்னிடம் கார்ட்டூனை வாங்கி அச்சிட்டு மகிழ்ந்தார்! எனது வளர்ச்சியில் பங்கு பெற்றவர்களில் அவருக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

துக்ளக்:

நியூஸ் டுடே, சாவி, இதயம் பேசுகிறது, கல்கி... என முழு நேர Freelance கார்ட்டூனிஸ்ட் ஆகிவிட்டதால், அட்டைப் படத்திலேயே கார்ட்டூனைத் தாங்கி வரும் முழு அரசியல் பத்திரிகையான ‘துக்ளக்’கை மட்டும் ஏன் விட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.

அந்த விபரத்தை சோ அவர்களிடம் சொன்னேன். ‘மதி’ என்று மட்டும் இல்லாமல், நியூஸ் டுடே–யில் ‘மாரி’ என்ற பெயரிலும் நான்தான் கார்ட்டூன்கள் போட்டு வருகிறேன் என்றேன். “ஒ! அவரும் நீங்கள்தானா? நல்லது! உங்களது கார்ட்டூன்களை நான் ஏற்கெனவே தினசரி பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். இப்படி ஒருவர் இப்போது எனக்கும் தேவைப்படுகிறார். இந்த வார இதழுக்கான வேலை ஏற்கெனவே முடிந்துவிட்டதால் நீங்கள் அடுத்த வாரத்தில் இருந்து கார்ட்டூன்கள் போடலாம்” என்றவர், ‘‘அது சரி, பொதுவாக இங்கு கார்ட்டூன்களுக்கான ஐடியா தருவது நான்தான். இதுவரை என்னிடம் பணியாற்றியவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஓவியர்கள் மாதிரிதான். நீங்களோ கார்ட்டூனிஸ்ட் என்கிறீர்கள். அப்படியானால் நீங்களே ஐடியா பண்ணுவீர்களா?’’ என்று கேட்டார்.

“ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் வேலையே அதுதான் என்று நினைக்கிறேன். ஐடியாவும் நானே பண்ணினால்தான் கார்ட்டூன்கள் சிறப்பாக அமையும் என்பது எனது கருத்து” என்றேன். பதிலுக்கு அவரோ "சரி, இரண்டு பேருமே பண்ணுவோம். எது எது நன்றாக இருக்கிறதோ அந்த ஐடியாக்களை எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இறுதி முடிவு நான் எடுப்பதாகத்தான் இருக்கும். பரவாயில்லையா?” என்றார். “அதில் என்ன சார் சந்தேகம் இருக்க முடியும்!” என்று பதில் அளித்தேன். பிறகு சிறிது நேரம் எனது சொந்த ஊர், பின்னணி பற்றி எல்லாம் அன்போடு விசாரித்துக்கொண்டு இருந்தார்.

அடுத்த வாரத்தில் இருந்தே குதூகலத்தோடு ‘துக்ளக்’கிலும் எனது பணி ஆரம்பித்தது. “அட்டைப்படக் கார்ட்டூனும், நடுப் பக்கத்தில் ‘double spread’ஆக கார்ட்டூன்களும் போட விருப்பப்படுகிறேன்” என்றேன். “ஐடியா வந்தால் தாராளமாகப் பண்ணுங்கள்” என்றார். நடுப் பக்கத்தில் பொதுவாக ஐந்து, ஆறு கார்ட்டூன்கள் வரையலாம். ஆதலால் சுமார் 7-8 கார்ட்டூன் ஐடியாக்கள் ‘rough sketch’ செய்து அவரிடம் கொண்டு செல்வேன். எதெல்லாம் நன்றாக இருக்கிறது என்று இரண்டு, மூன்று முறை பார்த்து ‘டிக்’ செய்து கொடுப்பார்.

பிறகு இம்மாதிரியானத் தருணங்களில்தான் நான் பல்வேறு பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் வரைந்து வருவதை மனதில் கொண்டு ‘‘போதும் சார்! என் கடைக்கு இந்த வாரம் இவ்வளவு சரக்கு போதும்! மீதி சரக்கை வேற கடைகளுக்கு கொடுத்திருங்க!’’ என்று நகைச்சுவையாகக் கூறுவார்! பதிலுக்கு நானும் ‘‘கஷ்டம் சார்! போணியாகாது! உங்களுக்கு நான் தரும் சரக்கு அவர்களுக்குத் தேவையே இருக்காது!’’ என்று பதிலளிப்பேன்! காரணம் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு பாலிசி இருந்ததுதான்! அந்த கார்ட்டூன்களிலேயே ஏதாவது ஒன்று அந்த வார அட்டைப்பட கார்ட்டூனுக்கு பொருத்தமாக இருந்தால், ‘இதையே இந்த வார wrapper– ஆக வைத்துக் கொள்ளலாம்’ என்று கூறிவிடுவார். அப்படி அமையாத பட்சத்தில் நான் நடுப்பக்க கார்ட்டூன்கள் வரைந்துகொண்டு இருக்கும்போதே அவர் அட்டைப்பட கார்ட்டூனை சிந்தித்து என்னை அழைத்து “இதோ wrapper ஐடியா எனது வேலை முடிந்தது, இனி உங்கள் பாடு” என்று கொடுத்துவிடுவார்.

மிகச் சில நேரங்களில், இருவருக்குமே சரியான ஐடியா வராவிடில் டிஸ்கஷன் செய்து ஒரு முடிவுக்கு வருவோம். அந்த மாதிரிச் சமயத்தில்தான் ஒரு தடவை ‘‘சில சமயங்களில் நான் ஒரு கார்ட்டூன் ஐடியாவுக்கே இவ்வளவு சிரமப்படுகிறேன். நீங்கள் எப்படி இத்தனைப் பத்திரிகைகளில் சளைக்காமல் வரைந்து தள்ளுகிறீர்கள். ஆச்சர்யமாக இருக்கிறது! உங்களுக்கு இது ஒரு பெரிய ‘Gods gift’! என்று பாராட்டினார். ‘‘தாங்க் யூ சார், எல்லாக் கலைஞர்களுக்குமே இதுதான் பொதுவான உண்மை. இறைவன் அருள் இல்லாவிட்டால் எதுவும் கிடைக்காது” என்றேன்.

துக்ளக் மாதம் இரண்டு இதழ்கள் (Fortnightly) என்ற இடத்திலிருந்து வாரப் பத்திரிகையாக மாறும் நேரம் வந்தது. வார இதழின் முதல் அட்டைக்கான ஐடியாவை என்னிடம் தந்தார். சென்டிமென்ட்-ஆக துக்ளக்கில் அடிக்கடி வரும் இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போன்றக் கார்ட்டூனை வரைந்து முடித்து அவர் ரூமிற்கு கொண்டு சென்றேன். படத்தை வாங்கி சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். ‘‘ஒன்று சொல்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க. கழுதை ரொம்ப அழகா வந்திருக்குது! துக்ளக் அட்டையில் இதுவரை எத்தனையோ கழுதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இதுவரை வந்த கழுதைகளிலேயே இதுதான் பெஸ்ட் கழுதை” என்றார் அவர். எனக்குக் கிடைத்த இந்த ‘‘பெஸ்ட் கழுதை” பட்டத்தையும் ஒரு மறக்க முடியாத பெருமையாகவே கருதுகிறேன். ‘‘சரி, வார இதழின் முதல் அட்டைப் படம் இது. அதனால் அதோ அங்கிருக்கும் பிள்ளையார் முன்பு வைத்து வேண்டிக்கொண்டு எடிட்டோரியலில் கொடுத்துவிடுங்கள்” என்றார்.

பொதுவாக மிகவும் அதிகாலையிலேயே அவர் அலுவலகத்திற்கு வந்துவிடுவதால் மதிய உணவிற்கு முன்பே பத்திரிகை சம்பந்தமான பணிகள் அத்தனையையும் முடித்துவிடுவார். அதன் பிறகு அவரது நண்பர்களிடமோ அலுவலக ஊழியர்களிடமோ ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டு இருப்பார். இடையிடையே பெரும் அரசியல் தலைவர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளையும் ஏற்று ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார். அவரோடு ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக நான் பழகியபோது பல்வேறு அரசியல் சூழ்நிலைகள், தலைவர்கள் எடுத்தச் சரியான, தவறான முடிவுகள், அதுபற்றி இவரது விமர்சனங்கள் எனப் பல விஷயங்களை எனக்குச் சொல்லியிருக்கிறார். அவர் பழகாத அரசியல் தலைவர்களே இல்லை என்பதால், பல்வேறு சந்திப்புகளில் நடந்தப் பல சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்துகொள்வார். இதெல்லாம் அரசியல் பற்றிய என்னுடைய கண்ணோட்டம், அறிவு வளர்வதற்கு மிகப் பெரிய உதவியாக இருந்தன.

நான் பல பெயர்களில் கார்ட்டூன் போட்டு வருவதை ‘‘இன்னும் எத்தனைப் பெயர்களிலேதான் சார் கார்ட்டூன் போடறதா இருக்கறீங்க? குமார், மதிகுமார், மதி, மாரி, சிதம்பரம், சுபி...” என்று வரிசையாக எனது பெயர்களைச் சொல்லி “எனக்குத் தெரிந்து ராஜீவ் கொலையாளி சிவராசனுக்குப் பிறகு இத்தனை பெயர்களோடு தமிழகத்தில் திரிந்துவருவது நீங்கள் மட்டும்தான்!” என்று என்னைக் கிண்டல் செய்வார். இது போக ‘‘மதி மயக்கும் பெருமாள்” என்று அவரே எனக்கு ஒரு பட்டப் பெயர் வைத்து, என்னை அடிக்கடி அழைப்பார். ஏன் அந்தப் பெயர் வைத்தார்? அதன் அர்த்தம் என்ன? என்ன காரணம் என்று எத்தனை முறை கேட்டாலும் ‘‘எனக்கென்னத் தெரியும், கூப்பிடத் தோணுச்சு. கூப்பிடறேன், இதுக்கெல்லாமா அர்த்தம் கண்டுபிடிக்க முடியும்?” எனக் கிண்டலாக பதில் சொல்லிவிடுவார்!

எனது திருமணத்திற்கு அவரது அனைத்து நண்பர்களுடனும் வந்து வாழ்த்தியதோடு மட்டும் அல்லாமல் அவர் அளித்த மொய் கவரிலும் ‘‘மதி alias குமார் alias மதிக்குமார் alias மாரி alias சிதம்பரம் alias சுபி alias மதி மயக்கும் பெருமாள்... அவர்களுக்கு திருமண வாழ்த்துகள்” என எழுதி மேடையிலேயே என்னிடம் சிரித்தவாறே அவர் எழுதியதைச் சுட்டிக்காட்டி ‘‘பாருங்க, ஒரே கவர்லயே எத்தனைப் பேருக்கு மொய் வெச்சிருக்கேன்னு” என்று அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் வாழ்த்தினார்.

ஊழியர்களுக்கிடையே Politics இல்லாத பத்திரிகைகளே கிடையாது எனலாம். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ – என்ற நடிகர் கவுண்டமணியின் பிரபலமான காமெடி மாதிரி ‘அலுவலகங்கள்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ – தான்! ஆனால், அரசியல் செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் ‘துக்ளக்’ அலுவலக ஊழியர்களிடையே அரசியல் என்பதே கிடையாது. ஒருவருக்கொருவர் அவ்வளவு அன்போடு பழகுவார்கள்! இத்தகையவர்கள் என்னை மட்டும் என்ன விட்டுவிடுவார்களா? அதன் பிரதம உதவி ஆசிரியர் மதலை, உதவி ஆசிரியர்கள் பரக்கத் அலி, சுவாமிநாதன், நகைச்சுவை எழுத்தாளர் சத்யா அனைவரும். இன்றளவும் என்னோடு நட்பு பாராட்டிவருகிறார்கள்.

துக்ளக் சத்யா அவர்கள், சோ சார் அளவுக்கு இணையான நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றால் மிகையாகாது. வாரம் ஒரு நகைச்சுவை கட்டுரை கொடுக்க முடிந்த ஒரே எழுத்தாளர், தமிழ்ப் பத்திரிகை உலகில் இன்று அவர் மட்டுமே. ஆனால், நேரில் அவரிடம் பேசும்போதோ பழகும்போதோ, இவரிடமிருந்தா இவ்வளவு கேலியும், கிண்டலும், நையாண்டியும் வெளிப்படுகிறது என்று ஆச்சர்யமாக இருக்கும்! அப்படி ஒரு பரம சாதுவாக, ‘எனக்கும், நான் எழுதும் கட்டுரைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்பதுபோல இருப்பார்! இத்தகையப் பண்புடையவர்களிடம் எனக்குப் பழகக் கிடைத்த வாய்ப்பும் துக்ளக் மூலமாக எனக்குக் கிடைத்தது!

துக்ளக்கில் சோ சார் எழுதிய சுயசரிதை, ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. ஆசிரியர் சோவுடன் பழகிய, பணிபுரிந்த நாட்கள் எனக்கும் அதிர்ஷ்டம் தந்த அனுபவமே! ஆனால், அந்த அதிர்ஷ்டம் எனக்கு இறைவனால் அளிக்கப்பட்டது என்றே கருதுகிறேன். (பின்னாளில் துக்ளக்கில் இருந்து ‘தினமணி’ செல்வதற்கு எனக்கு உந்து சக்தியாகவும், உதவியாகவும் இருந்தவர் சோ அவர்கள்தான். இந்த இணையதளத்தில் ‘தினமணியும் நானும்’ என்ற தலைப்பில் நான் எழுதியிருக்கும் பகுதியைப் படித்தால் அது விளக்கமாகப் புரியும்.)

கதிரவன்:

மாலை முரசு நிறுவனத்தில் இருந்து திருநெல்வேலியில் மட்டும் வெளிவந்துகொண்டிருந்த காலை நாளிதழ் கதிரவன். அதன் சென்னை பதிப்பு ஆரம்பிக்கும்போது மாலைமுரசு நிறுவனர் ராமசந்திர ஆதித்தன் அவர்கள் (தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அமரர் சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன்) என்னை அழைத்தார். ‘‘கதிரவனில் உங்களது கார்ட்டூன்கள் தினம் வந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன். ஏற்கெனவே நிறையப் பத்திரிகைகளில் கார்ட்டூன் வரைந்து வருகிறீர்கள், உங்களால் முடியுமா?” என்று கேட்டார்.

கதிரவனின் திருநெல்வேலி பதிப்பு அப்போது மிக அற்புதமாக புதிய பொலிவுடன் வந்துகொண்டிருந்தது. எனது சொந்த ஊர் திருநெல்வேலி என்பதால், அங்கு செல்லும்போதெல்லாம் அதை வாங்கிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது! திருநெல்வேலி பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது, கதிரவன் காலை நாளிதழ். ஆதலால், நான் இரவு எட்டு மணிக்கு சென்றால்கூட மறுநாள் கார்ட்டூனுக்கான வேலையை முடித்துக் கொடுத்துவிட முடியும். இந்தக் காரணத்தால் நான் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன். நான் எதிர்பார்த்த சம்பளத்தையும் தருவதற்கு அவரும் அன்போடு ஒத்துக்கொண்டார்.

மாபெரும் பத்திரிகையாளர் சி.பா.ஆதித்தனாரின் மகன் என்ற எந்த அலட்டலும் அவரிடம் இருக்காது. அமைதியாகப் பேசுவார். அலுவலக ஊழியர்கள் யாரிடமும் அவர் அதிர்ந்துப் பேசியதை நான் பார்த்ததில்லை. நான் கதிரவன் அலுவலகத்திற்கு இரவு ஏழரைக்கெல்லாம் வந்து என் வேலையை ஆரம்பித்துவிடுவேன். ராமசந்திர ஆதித்தன் அவர்கள் சுமார் இரவு ஒன்பது மணிக்கு வந்து மறுநாளுக்கான முக்கியச் செய்திகள் என்னென்ன? முதல் பக்க செய்திக்குத் தலைப்பு என்ன? மறுநாள் கதிரவன் போஸ்டரில் இடம்பெறப் போகும் செய்திகள் என்னென்ன? என்று பொறுப்பாசிரியர் குமார ராமசாமி அவர்களிடம் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருப்பார். அவர் கிளம்பும் நேரத்திற்கு முன் இன்றைய கார்ட்டூன் என்ன என்று என்னை அழைத்து, நான் வரைந்த கார்ட்டூனைப் பார்ப்பார். பொதுவாக ‘‘நன்றாக வந்திருக்கிறது” என்பார். தேவைப்பட்டால், இப்படித் திருத்தம் செய்யலாமா?’’ என்று கேட்பார். நானோ ‘‘இல்லை, இப்படியே இருந்தால்தான் நன்றாக அமையும்’’ என அதற்கான காரணத்தைச் சரியாகச் சொன்னால் “சரி, உங்கள் இஷ்டப்படி இருக்கட்டும்” என்று கூறிவிடுவார்.

அது, ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகிக் கொண்டிருந்த சமயம். நானோ என் கார்ட்டூனில் அதை விளக்குவதற்கு அக்கட்சியின் சின்னமான சக்கரத்தை வரைந்து, சக்கரத்தில் இருக்கும் குறுக்குக் கட்டைகள் ஒவ்வொன்றாகக் காணாமல் போய் இறுதியில் அது Zero- ஆக மாறிவிட்டதுபோல் வரைந்திருந்தேன்.

அதைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார், ‘‘மிக நன்றாக வந்திருக்கிறது. இதைவிட சிம்பிளாக, அழகாக இந்த விஷயத்தைச் சொல்ல முடியாது” என்றவர், “கார்ட்டூனைப் பொறுத்த வரையில் எனது தந்தைக்குச் சில இலக்கணங்கள் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று, கார்ட்டூனில் உயிருடன் கூடிய ஒரு மனிதரோ, தலைவரோ குறைந்தபட்சம் ஆடோ, மாடோ அல்லது செடியாவது இருக்க வேண்டும் என்பார் (குறிப்பாக ஏதாவது உயிர் உள்ள ஜீவன்). ஆனால், இந்த கார்ட்டூனில் அப்படி ஏதும் இல்லை. இருந்தாலும் இதைவிட பொருத்தமாக வரைய முடியாது. எனது தந்தை பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை எப்படியாவது சாமானியனிடமும் வளர்த்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்தார். அவரது எண்ணம் இப்போது வெற்றிப் பெற்று இருக்கிறது. அதனால் பல மாற்றங்களும் வந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய மாற்றங்களில் இதுவும் ஒன்றாக இருக்கட்டும்” என்று சம்மதித்தார்.

“ஃப்ரிலான்ஸராக இருந்தாலும் அவர் ஒரு கார்ட்டூனிஸ்ட். சிந்தித்து வரைய வேண்டும், அதற்கான அமைதியானச் சூழலும் வேண்டும், அவருக்கு ஒரு தனி அறை ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று கூறி எனக்காக ஒரு தனி அறையை அமைத்துத் தந்தார். அதைப்போல் எனக்கு மாதச் சம்பளமாகவே அளித்ததோடு அல்லாமல் மற்ற ஊழியர்களுக்கு தருவதைப்போல எனக்கும் வருடா வருடம் கூடுதலாக ஒரு மாதச் சம்பளத்தை தீபாவளி போனஸாகவும் தந்து வந்தார்! அவரது மூத்த மகன் கண்ணன் ஆதித்தன் அவர்களும், இளைய மகன் கதிரவன் ஆதித்தன் அவர்களும் என்னிடம் மிகவும் அன்பு பாராட்டியவர்கள். அப்போது கதிரவனில் பொறுப்பு ஆசிரியராக இருந்த குமார ராமசாமி எனது வளர்ச்சிக்கு உதவியாக இருந்தவர், ஊக்கம் அளித்தவர். குமார ராமசாமி அவர்கள்தான் இன்றைய மாலைமுரசின் பொறுப்பாசிரியர், கடும் உழைப்பாளி. கதிரவனின் அப்போதைய மானேஜர் விஜயன் ஆதித்தன், உதவி ஆசிரியர் சிதம்பரநாதன் ஆகியோரும் அன்றிலிருந்து இன்று வரை எனது நல்ல நண்பர்களாகத் திகழ்பவர்கள். தினமணியில் கார்ட்டூனிஸ்ட்டாக சேரும் வரை நான் கதிரவனில் கார்ட்டூன்கள் போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

வாசுகி:

தினகரன் நிறுவனத்திலிருந்து ‘வாசுகி’ என்ற வாரப் பத்திரிகை வந்திருந்த சமயம். அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் தாமரை மணாளன் அவர்கள் என்னை அழைத்து, ‘‘வாசுகியின் தலையங்கப் பக்க கார்ட்டூன் நீங்கள்தான் போட வேண்டும்’’ என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ‘Fortnightly’–என்பதால் மாதத்திற்கு 5 + 5, பத்து மணி நேர வேலைதான். அதனால் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். அவர் சிரித்துக் கொண்டே அன்பாகப் பழகுபவர். என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘வாங்க, கார்ட்டூன் கிங்' என்றுதான் அழைப்பார். அவரும் அவரது உதவி ஆசிரியர் செல்வா அவர்களும் எனது வளர்ச்சியில் பங்குவகித்தவர்கள்.

ஐந்து, ஆறு வருடங்கள் இத்தனைப் பத்திரிகைகளில், அதுவும் ஒரே சமயத்தில் பணி புரிந்ததால், தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்களின் சூறாவளிச் சுற்றுப்பயணம்போல்தான் எனது தினசரி வாழ்க்கையே மாறிப் போய் இருந்தது. தினசரி இரவு 11 மணிக்கு படுக்கச் சென்றால், ‘அலாரம்’ வைத்து காலை ஐந்து மணிக்கே எழுந்திருக்கவேண்டியிருக்கும்! எனக்கு ஹோட்டலில் சாப்பிடுவது பிடிக்காது என்பதால், காலை மற்றும் மதிய உணவை நானேதான் சமைத்துக்கொள்வேன். இரவு மட்டும் ஒரு பாட்டி வந்து சமையல் செய்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவார். சில சமயங்களில் வீட்டில் இருந்தே படம் போட வேண்டும். சமைக்க வேண்டும். இத்தகைய வேலைகளுக்கு வசதியாக நான் சென்னையில் விடுதிகளில் (Lodges) தங்காமல், தனியாக ஒரு ‘டபுள் பெட்ரூம்’ வீடு எடுத்தே தங்கி இருந்தேன்.

இதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது எனக்கே மலைப்பாகத்தான் இருக்கிறது! எப்படி என்னால் முடிந்தது என்று சிந்தித்துப் பார்க்கும்போதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்க்கு வருகிறது. எனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் எல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளையும் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களையும் படித்து வரும் பழக்கம் இருந்தது! முக்கியமான வரிகளை அடிக்கோடிட்டு குறித்து வைத்துப் படிப்பேன். வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் ஒன்றை தியானம் செய்வதற்காகவும், இப்புத்தகங்களை படிப்பதற்காகவுமே ஒதுக்கியிருந்தேன். (திருநெல்வேலியில் இருந்து என்னைப் பார்க்க உறவினர்கள் யாராவது வந்தால்கூட அந்த அறையில் தங்க அனுமதித்தது இல்லை) இவ்வளவு அலைச்சலுக்கும், பணிகளுக்கும் தேவையான சக்தியையும் புத்தியையும் எல்லாம் வல்ல இறைவனன்றி யார் அளித்திருக்க முடியும்? நான் அவரது கையில் இருக்கும் ஒரு கருவி, அதற்கு மேல் எதுவும் இல்லை என்பதை நன்கு அறிவேன்.

இத்தனைப் பத்திரிகைகளில் பணிபுரிந்தாலும் எந்த ஆசிரியரும் ‘‘நீங்கள் எங்களுக்குக் கொடுத்த கார்ட்டூனை விட அந்தப் பத்திரிகைக்கு நன்றாக வரைந்து கொடுத்து இருக்கிறீர்களே?” என்று ஒப்பிட்டுப் பார்த்து என்னிடம் ஒருமுறைகூட கேள்வி கேட்டதில்லை. அந்த அளவுக்கு அவர்கள் என் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். எல்லாப் பத்திரிகைகளிலுமே எனக்கு fixed-ஆக ஒரு தொகை நிர்ணயம் செய்து தங்களது மற்ற அலுவலக ஊழியர்களுக்குக் கொடுப்பதுபோல மாதச் சம்பளமே கொடுத்து வந்தனர். கல்கி நிறுவனம் மட்டும் விதிவிலக்கு. அவர்கள் ஒரு ‘ஃப்ரிலான்ஸர்’க்கு கொடுப்பதுபோலவே கொடுத்து வந்தார்கள். பத்திரிகைகள் தரும் ஊதியம் ஒன்று அதிகமாகவும், ஒன்று குறைவாகவும், ஒன்று பரவாயில்லை என்ற ரகத்தில் இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே தரத்தில்தான் நான் கார்ட்டூன்கள் வரைந்து கொடுத்தேன். உழைப்பதில் நான் என்றுமே சமரசம் செய்துக்கொண்டதில்லை. என்னால் எவ்வளவு சிறப்பாக வரைய முடியுமோ அப்படித்தான் வரைவேன்.

இத்தனைப் பத்திரிகைகளில் வேலை பார்த்து வந்தது எனக்கு ஒரு திருப்தியையும் கொடுத்தது. காரணம் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஓர் அரசியல் கண்ணோட்டம், ஆதரவு, எதிர்ப்பு என்ற நிலைப்பாடுகள் இருந்தன. சாவி -- தி.மு.க ஆதரவு, இதயம் பேசுகிறது -- அ.தி.மு.க ஆதரவு, நியூஸ் டுடே -- காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தன. துக்ளக்கும், கல்கியும் நடுநிலைப் பத்திரிகைகள். ஆகவே, ஒரு பத்திரிகையில் இருந்து அ.தி.மு.க-வையும், இன்னொரு பத்திரிகையில் இருந்து தி.மு.க-வையும், நடுநிலைப் பத்திரிகைகளில் இருந்து அனைத்துக் கட்சிகளையும் தாக்கி கார்ட்டூன்கள் போடுவது எனக்குப் பரம திருப்தியை அளித்தது. எல்லோர் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறேன் என்ற சமாதானமும் எனக்குக் கிடைத்தது!

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு கார்ட்டூனுக்கு அதில் வரும் சித்திரம், கருத்து, நகைச்சுவை மூன்றுமே முக்கியம். ஆனால், ஆசிரியர் சாவிக்கு கார்ட்டூன் எப்படி இருந்தாலும் அதில் வரும் சித்திரம் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். சோ அவர்களுக்கு நகைச்சுவை மிக முக்கியம். கல்கி ராஜேந்திரன் அவர்களோ கருத்துக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பார். இது கிரிக்கெட்டில் பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங்… என்று அனைத்திலும் சிறப்பாக ஆடுபவரை ‘ஆல்ரவுண்டர்’ என்று கூறுவார்களே அதைப்போல் இந்தத் துறையில் நான் ஒரு ‘ஆல்ரவுண்டர்’ ஆக உருவாக உதவியது! இத்துறையில் நான் மேலும் மேலும் முன்னேற படிக்கட்டுகளாக இருந்து உதவிய இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்று கூறலாம்!

தினமணி :

1996, டிசம்பர் இறுதி வாரம் ‘நியூஸ் டுடே’யில் கார்ட்டூன் போட்டுக்கொண்டிருந்தபோது துக்ளக் ஆசிரியர் சோ அவர்களிடமிருந்து ஃபோன் வந்தது. “இந்த ஃபோன் நம்பரைக் குறித்துக்கொள்ளுங்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் சேர்மன் மனோஜ்குமார் சொந்தாலியா அவர்களுடையது. அவரிடம் ஃபோனில் பேசிவிட்டு அவரை விரைவில் நேரில் சென்று சந்தியுங்கள், delay பண்ணாதீர்கள்” என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.

ஒரு மிகப் பெரிய பத்திரிகை நிறுவனத்தின் சேர்மன் எதற்காக நம்மை அழைக்க வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு எழவில்லை. கார்ட்டூனிஸ்ட் வேலைக்குத்தான் என்னைக் கூப்பிடுவார் என்றுத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஆனால், எனக்கு அப்போது அவ்வளவு பெரிய நிறுவனத்தில் போய்ச் சேர்வதில் பல தயக்கங்கள் இருந்தன! எனவே, அந்த வார இறுதியில் துக்ளக் கார்ட்டூன் தொடர்பாக சோ சாரை சந்திக்கும்போது எனது சந்தேகங்களை முதலில் நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் பிறகே மனோஜ்குமார் சொந்தாலியா அவர்களைச் சந்திப்பது சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஒரு நாள் கழித்து மீண்டும் சோ சார் தொலைபேசியில் என்னை அழைத்தார். ‘‘என்ன, போய் பார்த்தீங்களா?” என்றார். நானோ “இல்லை சார், ஒரு சேர்மன் வேறு எதற்கு என்னை அழைக்கப் போகிறார், கார்ட்டூனிஸ்ட் வேலைக்காகத்தான் இருக்கும். ஆனால், அதில் எனக்குச் சில தயக்கங்கள் இருக்கின்றன, அதை உங்களிடம் பேசி ‘clear’ செய்துவிட்டு அவரைப் போய் பார்க்கலாம் என்று இருக்கிறேன்’’ என்றேன். “இதில் என்ன தயக்கம் வேண்டிக் கிடக்கிறது? இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இருந்து கூப்பிடுகிறார்கள், நல்ல வாய்ப்பு! முதலில் அவரைச் சென்று சந்தியுங்கள். உங்கள் சந்தேகங்களை அவரிடமே கேட்டுவிட வேண்டியதுதானே” என்றார்.

நான் அன்று மதியமே சோ சாரை சந்தித்தேன். ‘‘சார், முதல் சந்திப்பிலேயே ஒரு சேர்மனிடம் கேள்விகளாக கேட்டுக்கொண்டிருப்பது நன்றாக இருக்காது. ஆதலால் உங்களிடம் கேட்கிறேன். இதுவரை நான் வேலை பார்த்த, பார்த்துக்கொண்டிருக்கும் பத்திரிகைகளில் ஆசிரியரும், முதலாளியும் ஒருவரே! உதாரணத்திற்கு News Today, சாவி, கல்கி, இதயம் பேசுகிறது, துக்ளக், கதிரவன்... என அனைத்துப் பத்திரிகைகளையும் சொல்லலாம். ஆனால், தினமணியின் கதை வேறு - முதலாளி வேறு! ஆசிரியர் வேறு! அரசியல் சார்ந்த விஷயங்களிலோ அல்லது வேறு விஷயங்களிலோ இருவருக்குமிடையே ஏதாவது கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதற்குள் நான் மாட்டிக்கொள்ள வேண்டியது இருக்கும். 2-வது: இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் நிறுவனம் இப்போது பாகப் பிரிவினையில் இருக்கிறது. வடக்கு மாநிலப் பதிப்புகள் விவேக் கோயங்கா அவர்களுக்கும், தெற்குப் பதிப்புகள் மனோஜ்குமார் சொந்தாலியா அவர்களுக்கும் என பிரித்துக்கொள்வதாகவும், துரதிருஷ்டவசமாக இந்த விரிசல் அலுவலக ஊழியர்கள் வரை வேர்விட்டு வளர்ந்திருப்பதாகவும் கேள்விப்படுகிறேன். 3-வது: தற்போது தினமணி ஆசிரியராக இருக்கும் இராம.திரு.சம்பந்தம் அவர்கள் ரொம்ப tough-ஆன character, அவரிடம் ஒத்துப் போவது கடினம் என ஒரு சிலர் கூறுகிறார்கள். 4-வது: தற்போது ஒரு freelancer- ஆக இருந்தாலும், எனக்கு எந்தக் குறையும் இல்லை. நன்றாகத்தான் சம்பாதிக்கிறேன். எல்லா ஆசிரியர்களும் என்னிடம் மிக அன்பாகதான் பழகிக்கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது ஒரு புதிய இடத்திற்கு சென்று ஏதாவது தேவையற்றச் சிக்கலில் மாட்டிக்கொண்டால், நான் எடுத்த முடிவு தவறோ என வருந்த நேரிடும். 5-வது: எனக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய மாற்றம் எதற்கு?’’ என்றேன்.

“உங்களது சந்தேகங்கள் அத்தனையும் அர்த்தமற்றவை! Indian Express group split - சம்பந்தமாக ஏதும் சந்தேகங்கள் இருந்தால் மட்டும் அதை மனோஜ் அவர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளுங்கள். இராம.திரு. சம்பந்தத்தால் எல்லாம் எந்த பிரச்சனையும் வராது, அதெல்லாம் வீண் கற்பனை” என்றார். ‘‘போங்க சார், முதலில் போய் அவரை பாருங்க சார்” என்று என்னை முதுகைப் பிடித்துத் தள்ளிவிடாத குறையாகத் தள்ளிவிட்டார்!

மறுநாளே மனோஜ்குமார் சொந்தாலியா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வரச் சொன்ன நேரம் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். மிக அன்புடன் வரவேற்றார். அமரர் ராம்நாத் கோயங்கா அவர்களின் பத்திரிகைப் பணியும், துணிச்சலும், சாதனைகளும் நாடறியும். அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தியையும், மாபெரும் தொழிலதிபர் திருபாய் அம்பானியையும்கூட விட்டுவைக்காத அளவிற்கு யாரையும் எதிர்த்துப் பத்திரிகை நடத்திய துணிச்சல்காரர்! அஞ்சா நெஞ்சர்! அவரது பேரன் என்றப் பகட்டோ கர்வமோ எதுவும் மனோஜ்குமார் சொந்தாலியா அவர்களின் பேச்சிலோ நடவடிக்கையிலோ இல்லை! பார்த்தவுடனேயே தெரிந்துகொண்டேன், இவர் ஒரு பக்கா ‘ஜென்டில்மேன்' என்று. ஆனால், நான் ஏற்கெனவே கேட்டறிந்துக் கொண்டுவிட வேண்டுமென்று நினைத்திருந்த Express நிறுவனத்தின் பாகப் பிரிவினை பற்றி மட்டும் கேட்டேன். பொறுமையாக பதில் கூறினார். ‘‘உங்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை, அந்த வழக்கு 95% முடிந்துவிட்டது. தற்போது ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் வந்து சேரும் நேரம் உங்களுக்கு மிக நல்ல நேரமாக இருக்கும்’’ என்றார்.

நான் எனது பணியில் எனக்குப் பூரண சுதந்திரம் வேண்டும். அலுவலகத்திற்கு நான் வந்து, போகும் நேரத்திலும் எனக்குச் சுதந்திரம் வேண்டும். ஆனால், கார்ட்டூனுக்கான காலக்கெடுவை ‘deadline‘ –ஐ மீற மாட்டேன். பிறகு எனக்குத் தேவைப்படும்போது விடுமுறை வேண்டும். அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்வது எனக்குப் பிடிக்கும். குறிப்பாக ‘tours and travel’ என்றேன். “இதெல்லாம் நீங்க கேட்கவே வேண்டாம். Express நிறுவனம் இதற்கெல்லாம் என்றுமே தடை விதித்தது கிடையாது. மேலும், ஒரு கார்ட்டூனிஸ்ட் அடிக்கடி டூர் செல்வது அவசியம். அதன் மூலம் மக்களின் பல்வேறு வாழ்க்கைத்தரம், கலாசார மொழி வேறுபாடுகள்... இதெல்லாம் புரிய வரும். அது part of your job என்றே சொல்லலாம்’’! என்றார்.

(அந்தச் சந்திப்பின்போது அவர் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் (Promise) நான் தினமணியில் இருந்து வெளியேற வேண்டியச் சூழல் ஏற்படும் வரை நிறைவேற்றி வந்தார் என்பதை இங்கு நினைவுகூர்கிறேன்) பிறகு “மேலும் ஒரு வேண்டுகோள் சார்! தினமணியில் நான் Staff Cartoonist–ஆகச் சேர்ந்தாலும் ‘துக்ளக்'கில் மட்டும் நான் கார்ட்டூன்கள் போட அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் சோ சார் என் மீது காட்டிவரும் அன்பும் அக்கறையும்தான் உங்களை நான் நேரில் வந்து சந்திப்பதற்கே காரணம்” என்றேன். “தாராளமாக அங்கு மட்டும் நீங்கள் கார்ட்டூன் போடுவதைத் தொடரலாம்” என்றார். அவரது பேச்சு எனக்குள் முழு நம்பிக்கையைத் தோற்றுவித்தது. சோ அவர்களைச் சந்தித்து நடந்தது அனைத்தையும் விவரித்தேன். ‘‘நல்லது’’ என்றார்!

ஆனால், மனோஜ்குமார் சொந்தாலியாவுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு, நான்கைந்து நாட்கள் கழித்து, தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தமிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. ‘‘தினமணியில் நீங்கள் சேர்வது குறித்து மிக்க சந்தோஷம். உங்கள் வளர்ச்சிக்கும் தினமணியின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது என நினைக்கிறேன்’’ என்றவர் ‘‘தினமணியில் நீங்கள் சேர்வதற்கு முன்பு உங்களை நான் ஒருமுறை சந்திக்க வேண்டும்’’ என்றார். நாள் தவறாமல் காலையில் தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் சென்றுவிடுவது அவரிடம் இருந்த மிக நல்லப் பழக்கங்களில் ஒன்று. அடையாறு Theosophical Society-யில் வாக்கிங் செல்வார். அந்த நேரத்தில் சந்திப்பது என முடிவு செய்தோம்.

ஒரு மணி நேரம் நடந்துக்கொண்டே பல விஷயங்களைப் பேசினோம். இதற்கு முன்னால் பணிபுரிந்த கார்ட்டூனிஸ்ட் ஏன் வேலையை விட்டுச் சென்றார், அவர் தினமணிக்கு ஆசிரியராக ஆன கதை, அப்போதைய அரசியல் சூழல் எனப் பல விஷயங்களைப் பற்றி விவரித்து வந்தார். அப்போது துக்ளக்கில் மட்டும் நான் கார்ட்டூன்கள் போடுவதைத் தொடர இருப்பதைப் பற்றிப் பேச்சு வந்தது. பேச்சை அவரேதான் ஆரம்பித்தார். ‘‘இது பற்றி எனக்கு உங்களுடன் கருத்து வேறுபாடு இருக்கிறது. உங்கள் கார்ட்டூன்கள் தினமணிக்கு மட்டும் ‘exculsive’–வாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். சேர்மன் அதற்கு ஒத்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அதில் சிறிதுகூட உடன்பாடு இல்லை. ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் கார்ட்டூனிஸ்ட்டிற்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும். அதுதான் இருவருக்கும் நல்லது. நீங்கள் துக்ளக்–கில் தொடர்வது நம்மிடையே பிரச்னைகளை வளர்க்கலாம். நீங்களே ஒரு நல்ல முடிவு எடுங்கள்” என்று தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

இதென்னடா புதுப் பிரச்னை? Freelancer-ஆக தொடர்வதே நல்லது என நினைத்து இராம.திரு.சம்பந்தம் அவர்களுடன் நடந்த உரையாடலை சோ சாரிடம் விவரமாகக் கூறினேன். பொறுமையாகக் கேட்ட அவர் ‘‘சரி, அதனால் ஒன்றுமில்லை. தினமணியில் சேருங்கள். துக்ளக்கில் தொடர முடியாவிட்டால் பரவாயில்லை! அதுதான் உங்களது எதிர்காலத்திற்கு நல்லது” என்றார். “நான் உங்களுக்கு என்ன பதில் சொல்வது என தர்மசங்கடமாக இருக்கிறது” என்றேன்! "இதில் தர்ம சங்கடத்திற்கு எதுவும் இல்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியதையெல்லாம் சம்பாதித்துவிட்டேன்! இனி சம்பாதிப்பதற்கு ஒன்றுமில்லை! வாசகர்களுக்காகவும் எனது பொழுது போக்கிற்காகவும்தான் துக்ளக்கை நடத்திவருகிறேன். ஆனால், உங்கள் விஷயம் அப்படிப்பட்டதல்ல. இப்போதுதான் வாழ்க்கையையே ஆரம்பிக்கப் போகிறீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பணம் சம்பாதிப்பதும் அவசியம். அது இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் சேர்ந்தால்தான் சாத்தியப்படும். பணம் வாழ்க்கைக்கு அடிப்படை. அதில் ஏதும் கஷ்டம் நேராமல் இருந்தால்தான் உங்கள் வேலையில் நீங்கள் முழு கவனத்தைச் செலுத்த முடியும். அதனால் கார்ட்டூன்களும் மிகச் சிறப்பாக வரும். மேலும் ஒரு விஷயம், நீங்கள் என்னதான் மாய்ஞ்சு மாய்ஞ்சு துக்ளக்கில் கார்ட்டூன் போட்டாலும் பெயர் உங்களுக்கு வராது! நான்தான் ஐடியா கொடுக்கிறேன், எனது கார்ட்டூன்தான் அது, மதி படம் மட்டுமே போடுகிறார் என்றுதான் வாசகர்கள் நினைப்பார்கள்! (சோ சார் இப்படி என்னிடம் பேசியதை அனுபவரீதியாக பல முறை நான் உணர்ந்திருக்கிறேன்!) நீங்கள் துக்ளக்கைவிட்டுச் செல்வது என்பது எனக்கு நஷ்டமே. ஆனால், அந்த நஷ்டம் எனக்கு சிறியதுதான். நீங்கள் தினமணியில் சேராமல் போனால் உங்களுக்கு நிச்சயம் அது பெரிய நஷ்டம். இன்னொன்று, தினமணி ஆசிரியர் சம்பந்தம் நினைப்பதில் பெரிய தவறு ஏதும் இருப்பதாக நினைக்கவில்லை. அது பெரிய நிறுவனம். அத்தகைய நிறுவனத்தில் தங்களுக்கு exculsive-ஆக ஒரு Staff Cartoonist தேவை என்றுதான் நினைப்பார்கள். எனவே, எந்த வகையில் பார்த்தாலும் நீங்கள் உடனடியாக தினமணி–யில் சேருவதே சரியானது! Go ahead, நோ மோர் டிஸ்கஷன். தினமணி–க்குச் செல்லுங்கள். விரைவில் உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கப் போகிறது. ஆல் தி பெஸ்ட்!” என்றார். அவருடைய பெருந்தன்மை என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம்! பிறகென்ன, மீண்டும் மனோஜ்குமார் சொந்தாலியாவை நேரில் சந்தித்து ‘சரி’, என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டேன்!

1997, மார்ச் 24-ம் தேதி தினமணியில் கார்ட்டூனிஸ்ட் பணியில் சேர்ந்தேன். சேர்ந்த அன்றே ‘அடடே’ Pocket Cartoon–ஐ ஆரம்பிக்கவில்லை! இது விஷயமாக தினமணியில் சேருவதற்கு ஒரு மாதம் முன்பே இராம.திரு. சம்பந்தம் அவர்களிடம் விவரமாக விளக்கியிருந்தேன். “இதுவரை ‘Pocket Cartoon’கள் நான் எந்தப் பத்திரிகையிலும் போட்டதில்லை. எனவே, அதை எப்படிக் கொண்டு வர வேண்டும்? எந்த மாதிரி Subject-களையெல்லாம் அதில் கொண்டு வரலாம்? அதற்கு ஒரு நல்ல தலைப்பு (title) சிந்திக்க வேண்டும்... இதற்கெல்லாம் எனக்கு ஒரு மாத கால அவகாசம் தேவை. தினமணியில் சேர்ந்த தேதியிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகுதான் முதல் பக்க Pocket Cartoon–களை ஆரம்பிப்பேன்” என்று கூறியிருந்தேன்! அவரும், ‘‘மிக நல்லது. உங்கள் இஷ்டப்படியே செய்யுங்கள்’’ என்று ஒப்புக்கொண்டிருந்தார்!

எனவே, முதல் ஒரு மாதம் தலையங்கப் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில் இடம் பெறும் பெரிய கார்ட்டூன்கள் மட்டுமே வரைந்து வந்தேன். அந்த ஒரு மாத காலத்தில் Pocket Cartoon–கள் எப்படி வர வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக சிந்தித்து வந்தேன். எல்லாம் ஓரளவுக்கு மனதில் பிடிபட்டுவிட்டது. சரியான தலைப்பு மட்டும் எனக்கு ஒரு மாத காலமாக சிந்தித்தும் பிடிபடவில்லை. ஏனென்றால், முதல் பக்க Pocket கார்ட்டூன்களுக்குத் தலைப்பு நன்றாக அமைவது மிக முக்கியம். கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் எவ்வளவு பிரபலமோ அந்த அளவுக்கு அவருடைய முதல் பக்க பாக்கெட் கார்ட்டூன்களின் ‘You Said it’என்ற தலைப்பும் பிரபலம்.

பாக்கெட் கார்ட்டூன் ஆரம்பிக்கவேண்டிய தினமும் வந்தது. ரெண்டு மூன்று ஐடியாக்கள்கூட ரெடி! தலைப்பு மண்டைக்குள் வர மாட்டேன் என்கிறது! கார்ட்டூனுக்கான deadline-ம் நெருங்கிவிட்டது. சரி, முதலில் கார்ட்டூனை வரைய ஆரம்பிப்போம், வரைந்துகொண்டிருக்கும்போதே தலைப்பை யோசித்துக் கொண்டிருக்கலாம் என்று எனது வேலையைத் தொடங்கினேன். அதாவது படமும் வரைய ஆரம்பித்தேன். பாதி வரைந்துகொண்டிருக்கும்போது ஒரு ‘Flash’-ஆக மூளையின் ஒரு மூலையில் இருந்து உதித்ததுதான் ‘அடடே...!'

அடடே! இவ்வளவு நாள் இந்த ‘டைட்டில்’ நமக்குத் தோன்றாமல் போய்விட்டதே என்றே எனக்குத் தோன்றியது! கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் பிரசவித்த களைப்பும் மகிழ்ச்சியும் உண்டானது! ஆசிரியர் சம்பந்தத்திடம் டைட்டிலோடு கார்ட்டூனைக் கொடுத்தேன். ‘‘டைட்டில் நன்றாக இருக்கிறது. நீங்கள் கேட்ட ஒருமாத கால அவகாசமும் வீணாகப் போகவில்லை. ‘அடடே!’ என்ற ஆச்சர்யத்தைக் குறிக்கும் வார்த்தை ‘Positive’–ஆன விஷயங்கள், ‘Negative’–ஆன விஷயங்கள் இரண்டையுமே பேசும்போது, விவாதிக்கும்போது, விளக்கும்போது... உபயோகப் படுத்தலாம்’’ என்றார்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடம் யாராவது ‘கார்ட்டூனிஸ்ட் மதி’ என்று பேச்சை ஆரம்பித்தால், ‘‘நோ, நோ, அப்படிச் சொல்லாதீங்க! ‘அடடே மதி’ன்னு சொல்லுங்கள்’’ என்று சொல்லுவார். வாசகர்களிடமும் சரி, அரசியல்வாதிகளிடமும் சரி ‘அடடே!' என்ற வார்த்தை எனது பெயரைவிடப் பிரபலம்! பலர் என்னை ‘அடடே-மதி' என்றே அழைக்கின்றனர்! புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, டாக்டர் கலைஞர், அன்னை சோனியா, கேப்டன் விஜயகாந்த்... வரிசையில் நான் ‘அடடே மதி’.

ஆசிரியர் சம்பந்தம் நான் கேள்விப்பட்டது மாதிரியோ அல்லது எதிர்பார்த்தது மாதிரியோ பழகுவதற்குக் கடினமானவராக இல்லை. ஆரம்பம் முதலே என்னோடு நல்ல நட்புணர்வோடுதான் பழகினார். ஒரு வகையில் ‘சாவி’ அவர்களின் குணம் அவரிடம் இருந்தது! ஒருவரிடம் நல்ல திறமைகள் இருந்தால், அதை எவ்வளவு பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக்கொள்ள நினைப்பார் சாவி சார். அதை சாவியில் பயன்படுத்திக்கொள்வார்! சம்பந்தம் அவர்களும் என்னிடமிருந்து எத்தனை கார்ட்டூன்களை பெறமுடியுமோ அந்த அளவு பெற்று அவற்றை தினமணியில் பயன்படுத்திக்கொள்வார்!

முடிந்த வரை அவர்களிடமிருந்து பசுவின் மடியிலிருந்து பாலைக் கறப்பதுபோல் கற்றது. இதனால்தானோ என்னவோ, அவருக்கும் எனக்கும் அரசியல் பிரச்னைகளில் வெவ்வேறு பார்வை இருந்தாலும், பல சமயங்களில் அவரது நோக்கிற்கு நேர் மாறானதாக எனது கார்ட்டூன்கள் அமைந்திருந்தாலும், அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ஓ.கே செய்துவிடுவார்! கிட்டத்தட்ட அவருடன் பணிபுரிந்த 7 வருட காலகட்டத்தில் எனது ஒரு கார்ட்டூனைக்கூட அவர் Reject பண்ணியது இல்லை! பெரிய கார்ட்டூன்கள் சில அவருக்கு மிகவும் ‘Out standing’ஆகத் தெரிந்தால் ‘‘மதி, இதை முதல் பக்கத்தில் உபயோகித்துக் கொள்ளட்டுமா?’’ என்பார்! நானும் அந்தக் கார்ட்டூன் முதல் பக்கத்தில் வரும் அளவுக்கு ‘weight’ இருக்கிறது என்று கருதினால், ‘சரி’ என்பேன். சில கார்ட்டூன்களை இதை முதல் பக்கத்தில் போட்டால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினால், அதை அவரிடம் தெரிவிப்பேன். ஒரு தடவைகூட மறுக்காமல் அதை அனுமதித்திருக்கிறார்! சில சமயம் அவர் முதல் பக்கத்திற்கு பரிந்துரைக்கும் கார்ட்டூன்கள் முதல் பக்கத்தில் வரும் அளவிற்கு வலுவானதாக இல்லை என்றால், நானே அதை மறுத்துவிடுவேன். ஒரு ஆசிரியர் முடிவு செய்து ஒரு கார்ட்டூனை முதல் பக்கத்தில் போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு, ‘வேண்டாம்! முதல் பக்கத்தில் வருகிற அளவுக்கு அது வலுவானதாக இல்லை’ என்று மறுக்கிற ஒரே கார்ட்டூனிஸ்ட் நீங்களாகத்தான் இருக்க வேண்டும்! நீங்கள் ஒரு வித்தியாசமான ஆள்தான்” என்பார்!

1999, இரண்டு மாத காலம் அரபு நாடுகளில் ஒன்றான கத்தாருக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். அங்கு எனது சகோதிரி இருந்தார் என்பதால் வீட்டிலேயே ‘இன்டர்நெட்' மூலம் அன்றையச் செய்திகளை வாசித்து, வீட்டிலிருந்தே கார்ட்டூன்கள் போட்டு அனுப்பும் வசதியும் இருந்தது. ஆனால், வெளிநாடு போயிருப்பதால் சுற்றிப் பார்க்கவும் நேரம் தேவைப்பட்டது! எனவே ஒரு மாதத்திற்கு என்னால் ‘அடடே’, மட்டுமே தர முடியும் என்று சம்பந்தம் அவர்களிடம் சொல்லியிருந்தேன். அவரும், ‘‘அதுவே போதும். சந்தோஷமாகப் போய் வாருங்கள்’’ என்று வழியனுப்பி வைத்தார்.

ஆனால், எனக்கு நல்ல Subject–கள் கிடைத்து, நேரமும் கிடைத்தபோது பெரிய கார்ட்டூன்களும் வரைந்து அனுப்பிக்கொண்டிருந்தேன். மறுநாள் தினமணி-ஐ பார்க்கும்போது எனது பெரிய கார்ட்டூனும் அடடே–வுடன் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும்! ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒன்று விடாமல் நான் அனுப்பும் பெரிய கார்ட்டூன்களை முதல் பக்கத்திலேயே போட்டு வந்தார். நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டபோது ‘‘உங்களிடமிருந்து அடடே– மட்டும்தான் எதிர்பார்த்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக ‘Bonus’ போல் பெரிய கார்ட்டூன்களும் கிடைத்துக்கொண்டிருக்கிறது! உங்கள் Sincerity–க்கும் உழைப்புக்கும் ஆன மரியாதைதான் இது. என்னைத் தடுக்காதீர்கள்.’’ என்று அன்புக் கட்டளையிட்டார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்! எனது கார்ட்டூன்களின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் எனக்குப் பெரிய உந்து சக்தியாக இருந்தது என்றே சொல்லலாம்.

இதனால்தானோ என்னவோ ஒரு காலகட்டத்தில் தினமணி–யில் கால்பக்க, அரைப்பக்க, முக்கால்பக்க, முழுப்பக்க கார்ட்டூன்கள்கூட போட ஆரம்பித்தேன்! அம் மாதிரி நேரங்களில் அவரிடம் ‘‘சார், மற்றப் பத்திரிகைகள் இந்த அளவுக்கு கார்ட்டூன்கள் போடுவதில்லை! நாம் இப்படிப் போடுவது சரிதானா? பத்திரிகைகளுக்கான இலக்கணம் எதையாவது மீறுகிறோமா?’’ என்று கேட்பேன்’. “அதெல்லாம் ஒன்றுமில்லை, There is no hard and fast rules! நமது நோக்கம் சரியானதாக இருந்தால், வாசகர்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தால், நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று அர்த்தம். So go ahead! கார்ட்டூனுக்கான ஐடியாவைத் தவிர எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள்’’ என்பார்! இப்படி இடம்பெற்ற கார்ட்டூன்கள்தான் பிற்காலத்தில் அடடே-6 தொகுப்புகளில் சிறப்புத் தலைப்புகளில் மொத்தமாக ஏழெட்டு கார்ட்டூன்களாக இடம் பெற்றன!

தனது தலையங்கப் பக்கக் கட்டுரைகளைப் படிப்பதற்காகவே ஒரு மாபெரும் வாசகர் வட்டத்தை உருவாக்கியிருந்த முன்னாள் தினமணி ஆசிரியர், பத்திரிகை ஜாம்பவான் ஏ.என்.சிவராமன் அவர்கள் ஒருமுறை தினமணி அலுவலகத்திற்கு வந்தபோது ‘‘யார் தினமணியில் தற்போது கார்ட்டூன்கள் போட்டு வருகிறார்? யார் அந்த மதி?’’ என்று சம்பந்தத்திடம் கேட்க, சம்பந்தம் உடனே எனது அறைக்கு வந்து என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்.

அந்த வயதில் அவர் தினமணி அலுவலகத்திற்கு வருவார் என்றோ, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமென்றோ கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததில்லை! ஆனாலும், அவர் எதற்கு என்னை அழைக்கிறார்? எனது கார்ட்டூன்களில் ஏதேனும் அதிருப்தி தெரிவிக்கப் போகிறாரோ என்ற சிறிய கலக்கத்துடன்தான் நான் அவர் இருந்த அறைக்குச் சென்றேன். அவர் ‘சிம்பிள்’ ஆன மனிதராக இருந்தார். சற்றுக் குள்ளமாக இருந்தார். தடித்த ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. வெள்ளை நிற ஜிப்பா, (ஆனால் அடிக்கடி போட்டுக்கொண்டிருக்கும் மூக்குப் பொடி காரணமாக அது பழுப்பு நிறமாகவே மாறிவிட்டிருந்தது) ஒரு கைத்தடி. என்னைக் கண்டதும் சற்றே ஏற இறங்கப் பார்த்தார்! ‘‘நீங்கதான் மதியா?’’ என்றார். ‘‘வணக்கம் சார், நான்தான்!’’ என்றேன். ‘‘சபாஷ்! சபாஷ்! சபாஷ்! சபாஷ்! சபாஷ்! என்றவர் உங்க கார்ட்டூன்கள் பிரமாதம்! தினமணிக்கு மிகப் பெரிய பலம்’’ என்றார்!

அவருக்கு அப்போது காது கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருந்தது என்பதால், நான் அவரிடம் பேசியதையெல்லாம் சம்பந்தம் அவர்கள்தான் சத்தமாகப் பேசி அவரிடம் விளக்கினார்! முதல் சந்திப்பு ஆதலால் எனக்கு அவரிடம் அவ்வளவு சத்தமாகப் பேச கூச்சமாக இருந்தது. ‘‘இவரும் உங்க ஊர்க்காரர்தான் (திருநெல்வேலி)’’ என்று சம்பந்தம் அவரிடம் கூறினார்! வட்டாரப் பாசத்துடன் சிரித்துக்கொண்டே கை கொடுத்தார்! சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவர் அறையைவிட்டு நாங்கள் வெளியே வந்ததும் சம்பந்தம் எனது காதருகே வந்து ‘‘மொத்தம் 5 சபாஷ்! அவர் யாருக்கும் இத்தனை சபாஷ் போட்டுப் பாராட்டி நான் பார்த்தது இல்லை! இது உங்களுக்கு ஒரு பெரிய விருது!’’ என்று மகிழ்ச்சியாகக் கூறினார்!

சம்பந்தம் தனது குடும்பத்தில் எந்த நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் என்னை அதில் கலந்துகொள்ள அழைப்பார். ஊழியர்களின் உடல்நலனில் அதீத கவனம் செலுத்துவார். யாருக்காவது உடல்நலக் குறைபாடு என்றால், மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து பின்னர் தினமணி நிருபர்கள் மூலம் அவர்கள் சரியாக கவனிக்கப்படுகிறார்களா என்பதை விசாரித்தும் அறிந்துகொள்வார். அலுவலக ஊழியர்களிடம் ‘தினசரி வாக்கிங் அவசியம்’ என்பார். ‘காய்கறி, கீரை நிறைய சாப்பிட வேண்டும். தினம் ஒரு சுண்டல் சாப்பிட வேண்டும்’ என்று அடிக்கடி கூறுவார்.

ஆனாலும், ஒரு சில விஷயங்களில் அவரிடம் எனக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தன! காரணம் ஒரு சில ஊழியர்களிடம் அவர் மிகக் கடுமையாக நடந்துகொண்டார் என்றே நான் கருதுகிறேன். எனக்கும் அவருக்குமிடையே இருந்த நல்ல உறவில் ஓரிரண்டு கசப்பானச் சம்பவங்களும் உண்டு! ஆனால், நினைப்பதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும்போது, மறக்கவேண்டிய விஷயங்களை மறப்பதுதானே நியாயம்! அவர் ஒரு கடும் உழைப்பாளி, பத்திரிகைத் தொழிலை மிகவும் நேசித்தார், என்னிடம் அன்போடு பழகினார், தினமணி–யில் எனது கார்ட்டூன்களை எவ்வளவு சிறப்பாக இடம்பெறச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக இடம்பெறச் செய்தார். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நபர், எனது வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகித்தவர் இராம. திரு.சம்பந்தம் அவர்கள்.