விழா நாயகர் டாக்டர் APJ அப்துல் கலாம், புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு இந்த விழாவை சிறப்பிக்க வந்திருக்கும் பெரியவர்கள் சுவாமி ஆத்மகனானந்தாஜி மகராஜ், திரு.மனோஜ்குமார் சொந்தாலியா, திரு. ஜெயகாந்தன், திரு.கல்கி ராஜேந்திரன், திரு.சாலமன் பாப்பையா, திருமதி.ஆச்சி மனோரமா, திரு.கிரேஸி மோகன் மற்றும் எங்கள் அழைப்பை ஏற்று வந்து இந்த மேடையின் முன் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள்.
நான் பேச்சாளர் அல்ல! எனக்கு மேடைகளில் பேசிப் பழக்கமும் கிடையாது. ஆதலால் வளவளவென்று பேசி எனக்கு கொடுக்கப்பட்டுள்ள 15 நிமிடங்களை தாண்டிச் சென்றால், ‘பேசியது போதுமய்யா' என்று மணி அடித்து என்னை எனது நாற்காலியில் அமரச் செய்வது திரு.சாலமன் பாப்பையா அவர்களின் பொறுப்பு.
மிக மிகச் சிலருக்கே வயது அதிகம் ஆக ஆக முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். வயது ஏற ஏற அவர்களது அழகு கூடிக்கொண்டே போகும். இதைத்தான் ‘தேஜஸ்’ என்பார்கள். தங்களது எண்ணங்களாலும் செயல்களாலும் அவர்களது ஆத்மா சேர்த்துவைத்திருக்கும் சக்தி அது! அவர்களது ஆத்ம சக்தியின் பிரதிபலிப்பே இந்த தேஜஸ்! அந்த வகையில் நானறிந்தவரையில் முதலில் தேசப்பிதா மகாத்மா காந்தி. இரண்டாவதாக டாக்டர் APJ அப்துல் கலாம்.
நன்றாக அவரை உற்றுப் பாருங்கள். அவர் முகத்தைப் பார்த்ததும் இப்போது பிறந்த குழந்தையைப் பார்ப்பது போன்ற ஒரு பூரிப்பு நமக்கு ஏற்படுகிறதா, இல்லையா? நம்மை அறியாமலேயே அவர் மீது அன்பு பெருக்கெடுக்கிறதே! அவர் எங்கு சென்றாலும் பெரும் கூட்டம் வந்து குவிகிறதே! எப்படி இதெல்லாம் சாத்தியம்!
‘History of parliament of religions’ என்ற புத்தகம் குறிப்பிடுகிறது - சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ மதச் சபையில் ‘சகோதரிகளே, சகோதரர்களே...’ என்றதும் கூடியிருந்த 6,000 பேரும் இரண்டு நிமிடம் கைதட்டி மகிழ்ந்தார்கள்! ‘அச்சபையில் சகோதரிகளே, சகோதரர்களே’ என்ற வார்த்தைகளை ஐந்தாவதாகப் பேசிய மிஸ் அகஸ்டா, 20-வது பேச்சாளரான பேராசிரியர் மினாஸ் செராஸ் ஆகியோரும் பயன்படுத்தினர்.
23-வதாக சுவாமிஜி பேசியபோது மட்டும் மக்களிடையே அப்படி ஓர் உத்வேகம், எழுச்சி ஏற்பட்டதற்குக் காரணம் என்ன?
‘சகோதரிகளே, சகோதரர்களே’ என்பதைப் பிறர் சம்பிரதாயமாக உச்சரித்தபோது சுவாமிஜி இதயத்தின் ஆழத்திலிருந்து அதை உரைத்தார்.
எதுகை மோனைகளுடன் கவர்ச்சியாகப் பேசுவது பெரிதல்ல. தங்கள் பேச்சுக்குத் தாங்களே பிரதிநிதி ஆகிக் காண்பிக்க வேண்டும்.
பிரதிநிதி புதுக் கருத்துகளுக்காக ஏங்குவார். ‘என் மூலம் இம்மக்களுக்கு ஏதாவது கூறு' என அவரது இதயம் இறைவனிடம் ஏங்குகிறது; ஏக்கம் பிரார்த்தனையாகிறது; புதுக்கருத்துக்கள் ஊற்றெடுக்கின்றன. அவை ஆக்கபூர்வமாகவும் சக்திமிக்கதாகவும் இருக்கும்.
அந்த வகையில் நம்முன் நமது பிரதிநிதியாக, நமது தேசத்தின் பிரதிநிதியாக ஆகியிருக்கிறார் டாக்டர் கலாம்! ஆகவேதான் அவர் எங்கு சென்றாலும் இந்தக் கூட்டம்.
எனது கார்ட்டூன்களைப் பற்றியும் இந்தப் புத்தகங்களைப் பற்றியும் நான் எதுவும் பேசப் போவதில்லை! அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் எண்ணற்ற விருதுகள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது, 1981-ல் பத்மபூஷண், 1990-ல் பத்மவிபூஷண், 1997-ல் பாரத்ரத்னா மற்றும் 36 டாக்டர் பட்டங்கள் பெற்ற திருக்கரங்களால் இந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன!
இப்புத்தகங்களுக்கு இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? வேறென்ன விருது வேண்டும்? இப்புத்தகங்களின் அருமை பெருமைகளை இந்த நிகழ்ச்சி ஒன்றே விளக்கிவிட்டது. இப்புத்தகங்களைப் பெற்றவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல! அவரவர் துறையில் பெரும் சாதனைகளைப் படைத்தவர்கள். யாரிடமும் வெறுப்பைச் சம்பாதிக்காமல், மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்கள்.
திருமண விழாக்களையே அரசியல் மேடையாக்கிவிடும் இந்தக் காலகட்டத்தில் காலநேரம் கருதி, ‘மதி நாங்கள் பேசவில்லை, புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு இறைவனையும் வேண்டிக்கொண்டு உங்களுக்கு அட்சதை மட்டும் போடுகிறோமே’ என்று கூறி இப்படிப்பட்ட ஒரு பொது நிகழ்ச்சியை ஒரு திருமணவிழாபோல் ஆக்கி என்னை கௌரவித்திருக்கின்றனர்.
அதுவும் தனது 75-வது பிறந்தநாள் அன்று இங்கு வந்து இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்திருக்கிறார் திரு. ஜெயகாந்தன் அவர்கள். அவருக்கு நம் அனைவரின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
இது எனக்கும் தினமணிக்கும் மட்டும் கிடைத்த வெற்றியல்ல! தமிழ்ப் பத்திரிகை உலகிற்கே கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். ஆதலால், இந்த வெற்றியை ஒட்டுமொத்த தமிழ்ப் பத்திரிகை உலகிற்கே சமர்ப்பணம் செய்கிறேன்.
ஆனாலும் இந்த வெற்றிக்குப் பின்னணியாக அடிப்படைக் காரணமாக இருப்பவரைப் பற்றி நான் இந்த நிகழ்ச்சியில் உங்களிடம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் தினமணி மற்றும் The New Indian Express நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.மனோஜ்குமார் சொந்தாலியா அவர்கள். ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கு அவரது பணியில் பூரண சுதந்திரம் என்பது மிக முக்கியமான ஒன்று. அவரது சிந்தனை ஓட்டத்துக்கு வேகத்தடை எதுவும் இருக்கக் கூடாது. அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே எனக்குப் பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்து வருகிறார். இந்த வகையில் தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்களும் எனக்கு உற்ற துணையாக இருக்கிறார். அவருக்கும் எனது நன்றிகள்.
அடுத்ததாக நான் இத்துறைக்கு எப்படி வந்தேன் என்ற சுவாரஸ்யமான உண்மைக் கதையை இத்தருணத்தில் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். Man proposes,God disposes’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. தமிழில் சொல்வது என்றால் ‘மனிதன் தீர்மானிக்கிறான், கடவுள் நிராகரிக்கிறார்’ என்பது அதன் அர்த்தம். இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்தப் பழமொழியின் உள் அர்த்தமே ஒரே வரிதான். அது, ‘கடவுளே அனைத்தையும் தீர்மானிக்கிறார்!’ அதுதான் என் வாழ்க்கையிலும் நடந்தது!
சிறு வயதிலிருந்தே எனக்குப் பிடித்த விஷயங்களாக இருந்தது விளையாடுவது. குறிப்பாக கிரிக்கெட், பூப்பந்து, Ball Badmiton, இரண்டாவது புத்தகங்கள் படிப்பது. மூன்றாவதாக இருந்த பொழுதுபோக்குதான் ஓவியம் வரைவது.
ஒவ்வொருவருக்கும் தான் பின்னால் என்ன ஆக வேண்டும் என்று ஒரு ambition உண்டு. அந்த வகையில் எனக்கிருந்த ambition இந்திய கடற்படையில் (Indian Navy) Ship captain ஆக வேண்டும் என்பதே. ஆனால் அந்தக் கனவும் முயற்சியும் எனக்கு சிறிதளவும் கைகூடவில்லை. ஏமாற்றமாக இருந்தது.
பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் முடித்தேன். அதன் பிறகு தூத்துக்குடி V.O.C. கல்லூரியில் நிலத்தியல் (Geology) துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வந்தேன். எனது M.Sc. முதல் வருடத்தின்போது நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையே ஆன culturals போட்டியில் ஓவியப் பிரிவில் ஐந்து போட்டிகளில் எனது பெயரைக் கொடுத்திருந்தேன். 1. Pencil sketching 2. Poster colour drawing 3. Oil painting 4. On the spot painting 5. Advertising.
பொதுவாக இத்தகைய culturals-ல் கல்லூரியைச் சார்ந்த ஒரு பேராசிரியர் Co ordinator ஆக எங்களுடன் வருவதுண்டு. அவர் என்னிடம் கேட்காமலேயே Political cartooning என்ற போட்டிக்கும் எனது பெயரைக் கொடுத்திருந்தார். ‘எனக்கும் கார்ட்டூனுக்கும் என்ன சம்மந்தம்’ என்று அவரிடம் சண்டை போட்டேன். ‘ஓவியம் வரையும் அடிப்படைத் திறமை உனக்கு இருப்பதால், உன்னால் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும். என்மீது மரியாதை இருந்தால் இதைச் செய்’ என்றார் அவர். மறுபேச்சு பேசவில்லை நான்.
ஆனால் போட்டி நாள் அன்று இப்போட்டிக்கு எப்படியாவது டிமிக்கி கொடுத்துவிட வேண்டும் என்று மனதில் திட்டம் வைத்திருந்தேன். ஆனால் அந்தத் திட்டமும் தோல்வி அடைந்தது. மற்ற போட்டிகளில் கலந்துகொள்ள வந்த சக மாணவர்கள் கார்ட்டூன் போட்டி நடக்கும் அறைக்குள் எனது கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டனர்.
அதிர்ச்சி தரும் வகையில் Zonals அளவில் நடந்த அந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தது. அடுத்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் University level போட்டிக்குச் செல்ல வேண்டும். அந்த ஆண்டு அந்தப் போட்டியை நடத்தியது திருச்செந்தூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் கலைக் கல்லூரி. அங்கு நடந்த கார்ட்டூன் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றேன்.
போட்டிக்கு வந்த நடுவர்களில் ஒருவர் போட்டி முடிந்ததும் என்னிடம் வந்து ‘நீங்க என்ன ஆக வேண்டும் என்ற கனவு உங்களிடம் இருக்கிறது?' என்று கேட்டார். எனது navy கனவு ஏற்கெனவே கைவிட்டு போயிருந்ததால், ‘இப்போதைக்கு எனக்கு எந்தக் கனவும் இல்லை’ என்று கூறினேன்.
அவர் தனது pocketல் வைத்திருந்த பேனா ஒன்றை எனக்குப் பரிசாகக் கொடுத்து, உங்களுக்குள் ஒரு சிறந்த cartoonist இருக்கிறார். இறைவன் ஏற்கெனவே உங்கள் தலையில் நீங்கள் ஒரு cartoonist என்று எழுதிவிட்டார். எனவே, உடனடியாக சென்னைக்குச் சென்று ஏதாவது ஒரு பத்திரிகையில் cartoonist ஆக சேர முயற்சி செய்யுங்கள்' என்றார். இந்த நிகழ்ச்சி நடந்த மூன்றாவது மாதத்தில் நான் சென்னையில் இருந்து வெளிவரும் News Today பத்திரிக்கையில் staff cartoonist ஆகச் சேர்ந்தேன்.
பிறகு freelancer ஆகி மேலும் சில பத்திரிகைகளில் கார்ட்டூன் போட ஆரம்பித்தேன். படிப்படியாக ஒரே நேரத்தில் கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, துக்ளக், கதிரவன், News today என்று ஒரே சமயத்தில் 7 பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் போட்டு வந்தேன். தேர்தல் காலகட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் என்பார்களே அதுபோல், தினசரி சூறாவளி சுற்றுப்பயணம். ஆக ஒவ்வொரு அலுவலகத்திற்கும் மாறி மாறி ஓட வேண்டும்.
இதற்கிடையில் எனக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கான ‘விளையாட்டு’ என்பதே சென்னை வாழ்க்கையில் எனக்கு இல்லாமல் போய்விட்டது. வேறு entertainment தேவைப்பட்டது. விளையாட்டாக தத்துவப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். நாள் ஆக ஆக அதில் ஆழ்ந்த ஈடுபாடு வர ஆரம்பித்தது. குறிப்பாக சுவாமி விவேகானந்தரின் போதனைகள், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் இவை இரண்டும் என்னை பலமுறை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டின.
ஒரு கட்டத்தில் ராமகிருஷ்ண மடத்தில் துறவியாகச் சேர முடிவு செய்தேன். ராமகிருஷ்ண மடத்தில் துறவியாகச் சேர்வதற்கு முன் நம்மை உண்மையான ஆர்வத்தில்தான் இவன் சேர்கிறானா என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஒரு Medical Test-ம் உண்டு. அதையும் பாஸ் செய்துவிட்டேன். இந்த முடிவில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்கிவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வால் எல்லா பத்திரிகைகளிலும் செய்து வந்த கார்ட்டூனிஸ்ட் பணியை ராஜிநாமா செய்தேன்.
ஏன், எதற்கு என்று கேட்பார்கள். அதற்கு நான் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அப்பத்திரிக்கை நிறுவனர்களிடம் ‘Calcutta Statesman-ல் வேலை கிடைத்திருக்கிறது. அங்கு செல்கிறேன்’ என்ற கதையும் விட்டேன். பிரம்மச்சாரிக்கான (White &White) உடையும் தைத்துவிட்டேன். என் தந்தையிடம் விடை பெற ஊருக்குச் சென்றேன். ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்தார். அப்படி அழுது நான் அவரை பார்த்தது இல்லை. எனது உறவினர்களும் எனது முடிவுக்கு எதிராக இருந்தனர். இறுதியில் எனது முடிவைக் கைவிட்டுவிட்டேன். ஒரு இரண்டு மாதம் இடைவெளிக்குப் பின் எனது பத்திரிக்கைப் பணியைத் தொடர ஆரம்பித்தேன். இந்தக் கதையை சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் சொல்கிறேன். எனது பையனுக்குக்கூட இப்போது, இன்றுதான் தெரியும்.
இறைவன் என்ன நினைத்தாரோ? தெரியவில்லை. ‘பிரம்மச்சரியம் என்பது கத்தி மேல் நடப்பது போன்ற மிகச் சிரமமான காரியம்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார். ஒருவேளை இறைவன் அந்த அளவிற்கு இவன் முன்னேறவில்லை என்று நினைத்திருக்கலாம்.
இந்த இடத்தில் ஒன்றை உங்களுக்குச் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். இன்றுவரை பிரம்மச்சரியம் என்ற கத்தியின்மேல் நடந்துகொண்டே இத்தனை சாதனைகள் புரிந்திருக்கிறார் டாக்டர் அப்துல் கலாம். அவர் ஒரு விஞ்ஞானி மட்டும் அல்ல, ஞானி, ஒரு கர்மயோகி.
இப்படியாக நானே இத்துறையைத் தேர்ந்தெடுக்கவும் இல்லை, அதைவிட்டு விலகிச் செல்ல நினைத்தபோதும் இறைவன் அதற்கும் அனுமதிக்கவில்லை. ஆதலால் நான் இங்கு எதையும் சாதித்ததாக நினைக்கவில்லை. எல்லாமே அவர் கையில்தான் இருக்கின்றன. உழைப்பு மட்டும்தான் என்னுடையது. அதையும் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், ‘நின் அருளால் நின் தாள் பணிந்தேன்' என்ற வாக்கின்படி அந்த உழைக்கும் சக்தியையும் அவனே தந்ததாகக் கருதுகிறேன்.
கடைசியாக டாக்டர் கலாம் அவர்களின் ‘இந்தியா - 2020 கனவு’ பற்றி எனது எண்ணங்களை உங்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்!
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:
‘‘இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்துவிடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த லட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தெய்வமாகவும் பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்துகொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய பூஜைக்கிரியை முறைகளாக வைத்துக்கொள்ளும். மனித ஆன்மாவையே அது பலிபீடத்தில் பலியாக்கும். ஆனால், அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றுமே நடக்கப் போவதில்லை...’’
மேலும் கூறுகிறார்... ‘‘மற்ற ஆரிய நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு, இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக் காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா? அவள் அறிவாற்றலில் குறைந்தவளா அல்லது திறமையில்தான் குறைந்தவளா? அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றைப் பார். பிறகு அறிவாற்றலில் இந்திய அன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்.’’
இங்கு ‘அவள்’ என்று விவேகானந்தர் குறிப்பிடுவது நம் ஒவ்வொருவரையும்தான். விவேகானந்தரின் இந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்துவதற்காகத்தான் இன்று கலாம் நம்மிடையே வந்திருக்கிறார். வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். நம் முகத்தில் தண்ணீர் தெளித்து ‘தூங்கியது போதும் எழுந்திரு, 2020க்குள் உனது இலக்கை நீ தொட வேண்டும்’ என்று ஞாபகப்படுத்தியிருக்கிறார்!
சுவாமிஜியின் கருத்துகள் பொய்த்துப் போகாது! கலாமின் கனவு அவரது கண்முன்னேயே மெய்ப்படும்! வெற்றி விரைவில் நம் கைவசமாகும்! எங்களது அழைப்பை ஏற்று, இங்கு வந்து, இந்த விழாவை சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்!
ஜெய்ஹிந்த்!
என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை ஒவ்வோர் இளைஞனும்
தங்கள்
உடம்பில் பச்சைக் குத்திக் கொள்ளுங்கள்.
( மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வளாகத்தில் ஜனவரி 12, 2013 அன்று நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் ஜெயந்தி விழாவில் கல்லூரி மாணவர்களிடையே கார்ட்டூனிஸ்ட் மதி ஆற்றிய உரை )
நரேன் பிறந்தது 1863-ம் ஆண்டு, ஜனவரி மாதம், 12-ம் நாள். வங்க நாட்டின் நாள்காட்டிப்படி அந்த நாள் மகர சங்கராந்தி எனப்படும் போகி (பொங்கல்) நாளாகும். அதனால்தானோ என்னவோ அவர் பழையன கழிந்து புதியன புகுத்தும் ஓர் புரட்சியாளராகத் திகழ்ந்தார். ஆம். பழைய மூடத்தனமான மனிதனை அடிமையாக்கும் கருத்துகளை எல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கி, புதிய அறிவுபூர்வமான வலிமையான கருத்துகளை உலகெங்கும் பயணம்செய்து விதைத்தார்.
அவர் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ இனத்திற்கோ மட்டும் சொந்தமானவர் அல்ல என்பதை அவரை முழுமையாகப் படித்தவர்கள் மட்டுமே உணர்ந்துக்கொள்ள முடியும். அவர் ஒரு வேதாந்தக் கடல். வேதாந்தம் எதையும் விட்டுவைக்காது, நாத்திகவாதம் உள்பட! அதனால்தான் சமயச் சமத்துவம், மனிதநேயம், மனித உரிமை, சமூக நீதி, சோஷலிசம், அரசியல், எதிர்காலப் பொருளாதாரம், சாதி ஒழிப்பு, கல்வி, மனிதனின் பரிணாம வளர்ச்சி, இந்தியா, உலகம்... என ஒன்றுவிடாமல் தனது அற்புதமான விளக்கங்கள் மூலமாக இளைஞர்களுக்கு அள்ள அள்ளக் குறையாதவாறு பல்வேறு அறிவுரைகளை வழங்கிச் சென்றிருக்கிறார். இனி நாம்தான் அதைப் பயன்படுத்தி நம்மையும் நம் நாட்டையும் எல்லா நிலையிலும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இளைஞர்களே! இன்று தேசிய இளைஞர் தினம். ஓர் இளைஞனாக சுவாமிஜியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பெற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். அத்தோடு இடையிடையே அவரது வார்த்தைகள் என்னிடம் ஏற்படுத்திய தாக்கங்களில் ஓரிரண்டையும் இங்கு உங்களுக்கு உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன். சுவாமிஜியை வேண்டிக்கொண்டு ஐந்து விஷயங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முதலில் வாழ்க்கைக் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள்
சுவாமிஜி ‘‘எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மனிதனை மெள்ள மெள்ள இயந்திரமாக்கிக் கொண்டு வருவதும் ஒரு கல்வியா? அந்த இயந்திரமே எவ்வளவோ பாக்கியம் செய்தது. ஓர் இயந்திரத்தைப்போல நல்லவனாக இருப்பதைவிடவும், ஒருவன் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையாலும் அறிவாலும் உந்தப்பட்டுத் தவறு செய்வதே மேல் என்பது என்னுடைய கருத்து’’ என்று கூறுகிறார்.
‘‘தலைமுறை தலைமுறையாக நிலவிய, வெளியே ஓடும் மனதைத் தடுத்து நிறுத்திய கல்விமுறை இப்போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. இதுவா கல்விமுறை?’’ என்று ஆதங்கப்படுகிறார்.
ஆனால், நமது பெற்றோர்களும் இன்றையக் கல்வி நிறுவனங்களும் நமக்கு எதைச் சொல்லித் தருகின்றன? எல்.கே.ஜி. - யில் நுழைந்தது முதலே நம்மிடம் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘‘நீ டாக்டராக வேண்டும் அல்லது இன்ஜினீயராக வேண்டும், நன்றாகச் சம்பாதிக்க வேண்டும்!’’
நன்றாக யோசித்துப் பாருங்கள், தற்போதைய உலகின் மக்கள்தொகை சுமார் 700 கோடி. அதில் 350 கோடி பேர் டாக்டர்களாகவும், மீதி 350 கோடி பேர் இன்ஜினீயர்களாகவும் ஆகிவிட்டால் இந்த உலகம் என்னவாகும்? ஒரு நாள்கூட நிலைக்காது. உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, ஒரே நாளில் இந்த மனித இனமே அழிந்து போகும். இது சாத்தியமா? ஆனால், நமது பெற்றோர்கள் இதைத்தான் நமக்குப் போதிக்கிறார்கள்!
இந்த உலகைப் படைத்தது இறைவன், இறைவன் இருக்கின்றான், அவனே நம்மை வழிநடத்துகிறான் என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் இங்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நம்மைப் படைத்த இறைவன் முட்டாள் அல்ல. இந்த உலகம் இயங்க எத்தனைத் தொழில்கள் தேவையோ, எத்தனைத் திறமைகள் தேவையோ அதற்கேற்ற அறிவோடு ஒவ்வொரு குழந்தையையும் படைத்திருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இயற்கையிலேயே டாக்டர், இன்ஜினீயர் படிக்க விருப்பமுடையவர்கள் மட்டும் அந்தத் தொழிலுக்குப் போகட்டும். மற்ற மாணவர்களிடம் அவரவர்களிடமுள்ள திறமையையும் வேட்கையையும் கண்டுப்பிடித்து அவர்களை அந்த வழியில் செல்ல ஊக்கப்படுத்துவோம். அவர்கள் வெற்றி பெறுவது உறுதி.
சரி, இப்படி ஒரு நல்ல சிந்தனையும் மாற்றமும் நம்மிடம் உருவாகி, நம் குழந்தைகள் அனைவருக்கும் வெவ்வேறு துறைகளில் சென்று தேவையான ஊதியத்தைச் சம்பாதிக்கக் கற்றுக் கொடுத்தாகிவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். பணம் மட்டுமே ஒருவனின் வாழ்க்கை வெற்றியை உறுதி செய்துவிடுகிறதா என்று யோசித்துப் பாருங்கள். கைநிறைய சம்பாதிக்கும் ஐ.டி துறையினர் திருமணம் ஆன சில காலத்திற்குள் ‘டைவர்ஸ்’ செய்துகொள்ள ஒரு க்யூவில் நிற்பதைக் காண்கிறோம். தங்கள் குழந்தைகளைப் பற்றிக் கூட கவலையில்லை. கணவன்-மனைவிக்கிடையான அகங்கார யுத்தம் பற்றியே அவர்களது கவலை. இப்படிப்பட்டவர்கள் நாட்டைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்? அப்படியென்றால், நாம் படிக்கும் இந்தப் படிப்பு மட்டும் வாழ்க்கையை வெற்றி பெற உதவாது என்பது நமக்கு இப்போது புரியவரும். இப்போதுதான் ‘வாழ்க்கைக் கல்வி’ என்ற ஒன்று நமக்கு அவசியம் என்று தெரியவரும்.
ஆறறிவு படைத்தவன் மனிதன் என்று இறுமாப்புடன் சொல்லிக்கொள்கிறோம். தற்போதைய உலகம் செல்லும் பாதை, நமக்கு அதைக் காட்டுகிறதா? மதவெறியும் பயங்கரவாதமும் உலகெங்கும் பரவிவருகிறது. இன்னொருபுறம், வல்லரசுகளின் அணு ஆயுதங்கள் குவிப்பு, போர் வெறி! காடுகள் அழிக்கப்படுவதால் புவி வெப்பமடைந்து, துருவப் பிரதேசங்கள் உருக ஆரம்பித்துவிட்டன. இதனால் கடல் பொங்கும் அபாயம்! ஒருபுறம் நீர்வளம் குறைந்துவருகிறது, எரிபொருள் தீர்ந்துவருகிறது, மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை காரணமாக மக்களே ஆயுதமேந்தும் ஆபத்து, குறைந்து வரும் உணவு உற்பத்தி... இதில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெருகிவரும் மக்கள்தொகை! உலகெங்கும் கலாசாரம் வேறு சீரழிந்து வருகிறது. நமது நாட்டில் வரலாறு காணாத ஊழல்கள்!
இதெல்லாம் மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறதா? மனிதன் பீற்றிக்கொள்ளும் பகுத்தறிவு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று இளைஞர்களான நீங்களாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இதையெல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற வேண்டுமானால் நாம் இப்போது படிக்கவேண்டியது தத்துவ ஞானிகள் காட்டிய வழிகாட்டல்களையே! அப்படியென்றால், எத்தனை தத்துவஞானிகளைப் படிப்பது? ஞானக்கடல் சுவாமி விவேகானந்தர் ஒருவரைப் படித்தாலே போதாதா! நான் ஏற்கெனவே கூறியதுபோல், அவர் தொடாத விஷயங்களே இல்லை. ஒவ்வோர் இளைஞனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், இந்த நாட்டையும், நாம் வாழும் இந்த உலகையும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் சுவாமி விவேகானந்தரைப் படித்தே ஆக வேண்டும்.
எனது மகன் தற்போது 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். எல்லோருக்கும் தெரியும், 10-ம் வகுப்பு வந்தாலே பெற்றோர்களும் பள்ளிகளும் கொடுக்கும் அழுத்தம் எவ்வளவு என்று. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவனது பிறந்தநாள் வந்தது. அவனது பிறந்தநாள் பரிசாக அவனுக்கு நான் கொடுத்த அன்பளிப்பு ‘சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள்’ என்ற புத்தகம்தான். அந்தப் புத்தகத்தில் நான் எழுதியிருந்தேன் ‘அன்பு மகனே, நீ தற்போது பள்ளியில் படித்துவரும் கல்வியானது உனக்குச் சம்பாதிக்க மட்டுமே கற்றுத் தரும். ஆனால், நீ வாழ்க்கையிலும் வெற்றிபெற வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரை அவசியம் படித்தே ஆக வேண்டும். உனது தேர்வுகளுக்காகப் படிக்கும்போது இடையிடையே சுவாமி விவேகானந்தரையும் படி’ என்று!
டி.வி., கம்ப்யூட்டர், செல்பேசிகளுக்கு அடிமையாகாதீர்கள்!
குருதேவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு கிடைத்ததுபோல் எனக்கு இதுவரை இறைக்காட்சி எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், சாத்தானை நான் நேருக்கு நேர் கண்கூடாகக் கண்டுவருகிறேன். ஆம். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் அதைப் பார்த்தேன். எனது நண்பன் ஒருவன்தான் அப்போது என் வீட்டிற்குள் ஓடி வந்து சொன்னான், ‘‘டேய், உடனே என்னுடன் வா, முருகேஷ் வீட்டிற்குள் சாத்தான் வந்திருக்கிறது’’ என்றான்! முருகேஷும் எனது நண்பன்தான்.
சாத்தானா? எனக்கு ஒரு கணம் பயமாகவும் வியப்பாகவும் இருந்தது. முருகேஷ் வீடு எனது வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளி ஒரு சந்து ஒன்றில் அமைந்திருந்தது. சந்தில் நுழைந்ததும், வலது கைப் பக்கம் முதல் வீடு! பொதுவாகவே திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் தைரியமானவர்கள் என்று ஒரு பேச்சு உண்டு. அதற்கேற்றாற்போல் எனக்கும் கொஞ்சம் துணிச்சல் இருந்தது! ‘சரி வா. நேரில் போய் பார்த்துவிடலாம்’ என்று அவனையும் அழைத்துக்கொண்டு முருகேஷ் வீட்டிற்குச் சென்றேன்!
ஏற்கெனவே அங்கு ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. நாங்கள் சிறுவர்கள் ஆதலால், காலை ஊன்றி எட்டித்தான் பார்க்கவேண்டியிருந்தது. ஒரு வெள்ளை உருவம். ஒரு சதுர வடிவப் பெட்டியிலிருந்து எட்டிப் பார்த்தது. எங்களைப் பார்த்து ‘‘ஹாய் புவான்’’ என்றது! எங்களைப் பார்த்துக் கைகூப்பியது. ஹா! சாத்தான் நம்மிடம் பேசக்கூடச் செய்கிறதே! ஆனால் அது பேசும் மொழிதான் புரியவில்லை. என்ன சொல்கிறது என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டேன். ‘‘ஹாய் புவான்’’ என்றால் சிங்களத்தில் ‘‘வணக்கம்’’ என்று அர்த்தம் என்றார்கள்.
இப்போது நான் ‘சாத்தான்’ என்று எதைக் குறிப்பிடுகிறேன் என்பது ஒரு சிலருக்குப் புரியவரலாம். அந்தச் சாத்தான் வேறெதுவும் அல்ல, டி.வி-தான். முதலில் இலங்கைத் தொலைக்காட்சியில் இருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்தான் தென் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்தன. ‘ஹாய் புவான்’ என்றால், சிங்களத்தில் ‘வணக்கம்’ என்று அர்த்தம்! ஆம். அந்த டி.வி க்குதான் இன்று தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பு அறையிலும் பிரமாதமாக ஓர் இடம் ஒதுக்கி, ராஜ மரியாதை அளித்து வைத்திருக்கிறார்கள்.
வீட்டுப் பெண்களை டி.வி சீரியல்கள் அடிமைப்படுத்திவிட்டன. இளைஞர்களுக்கு கலாசார சீரழிவையும் அசிங்கங்களையும் படம் போட்டுக் காண்பிக்கிறது. குழந்தைகளின் கை, கால்களைக் கட்டிப்போட்டு தன் முன்னேயே உட்காரவைத்திருக்கிறது. இது எதுவும் சகிக்கவில்லை என்று குடும்பத் தலைவன் நியூஸ் சேனல்களைப் பார்க்க ஆரம்பித்தால், வணிக லாபத்திற்காகவும், போட்டி மனப்பான்மையினாலும் அவர்கள் ஊதிப் பெரிதுபடுத்திக் காண்பிக்கும் செய்திகள் இவை எல்லாவற்றையும்விட மோசமாக இருக்கின்றன. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் காலூன்றிய இந்தச் சாத்தான் இன்று குட்டிகள் போட்டு ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் ‘மொபைல்' என்ற பெயரில் இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறது.
இதற்காகவா நாம் சுதந்திரம் பெற்றோம்? இதற்காகவா எத்தனையோ பேர் தங்களது உயிரையும் கொடுத்து போராடி நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்? முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டிருந்ததைவிட இன்று நமக்கு நாமே இந்த ‘கேட்ஜெட்ஸ்’களிடம் அடிமைப்பட்டிருக்கிறோமே இதைவிட அவமானம் நமக்கு என்ன வேண்டும்?
சுவாமிஜி சொல்கிறார்... ‘‘சுதந்திரம் பெற்றவர்களாம்! நமது மனதை ஒருகணம்கூட அடக்கியாள முடியாத நாம், அவ்வளவு ஏன், ஒரு கருத்தின் மீது நமது மனதை உறுதியாக நிலைத்திருக்கச் செய்ய வகையறியாத நாம், மற்றச் சிந்தனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒருமுனையில் (குறிப்பிட்ட ஒன்றின் மீது) ஒருகணம் மனதை ஒருமுகப்படுத்தத் தெரியாதவர்கள் அல்லவா நாம்? அப்படி இருந்தும் நம்மை நாம் சுதந்திரமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம்! இதை நினைத்துப் பாருங்கள்... அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும்; நம்மைப் பிளந்துவிடும்; அழித்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து ரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்’’.
மேலும் கூறுகிறார்- ‘‘சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறான்... உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கெனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து, பரந்திருக்கிறது. உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப்போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப்போலவே உனது நல்ல எண்ணங்களும், செயல்களும், ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
‘‘மகத்தான காரியங்களைச் செய்வதற்காக ஆண்டவனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், அவற்றை நாம் செய்து முடிப்போம் என்றும் உறுதியாக நம்பு’’ என்று உங்களை ஆசீர்வதிக்கிறார் சுவாமிஜி. இதற்குப் பிறகும் நாம் எதற்கும் அடிமைப்பட்டுக் கிடக்கலாமா என்பதை ஒவ்வோர் இளைஞனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நம்மை அறிவுறுத்துகிறார்.
வலிமையுடையவர்களாக இருங்கள்
நமக்கு எதிரான தீய சக்திகளாகட்டும் அல்லது சீரழிந்துவிட்ட நமது அரசியலாகட்டும், இதையெல்லாம் எதிர்த்து நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்றால், நமக்கு மிக அவசியமாகத் தேவைப்படுவது வலிமை... வலிமை... வலிமை!
சுவாமிஜி கூறுகிறார்- ‘புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று சொல்கிறது; ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்தவுடனேயே அழிவு வருகிறது; உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், உங்களிடையே அந்நிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் உங்களுக்கு நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே உமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், உங்களுக்குக் கதிமோட்சமில்லை’; ‘பாவம் என்பது ஒன்று உண்டென்றால், அது, ‘நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள்’ என்று சொல்வதொன்றுதான் பாவம்’; ‘என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில், நீ வரம்பில்லா வலிமைப் பெற்றவன். நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ...’’ என்றெல்லாம் வலிமையின் முக்கியத்துவத்தை நமக்குக் கூறும் சுவாமிஜி இறுதியாக ஒன்றைக் கூறுகிறார் கவனியுங்கள்!
‘‘வலிமைதான் வாழ்வு; பலவீனமே மரணம்’’ -என்ன அற்புதமான கருத்து! இளைஞர்களுக்கு இதுவே வேத வாக்கு என்றே கூறுவேன். ‘வலிமைதான் வாழ்வு; பலவீனமே மரணம்' என்ற இந்த சுவாமிஜியின் அறிவுரையை முடிந்தால் உங்கள் மார்புப் பகுதியில் பச்சை குத்திக்கொள்ளுங்கள்! அல்லது இந்த உன்னதமான உயர்ந்த உண்மையை, கருத்தை, உங்களது மூளை, தசைகள், நரம்புகள், உடலின் ஒவ்வொரு பாகம், ஒவ்வொரு ரத்த அணுவிலும் ஏற்றிக்கொள்ளுங்கள். இதுதான் வெற்றிக்கு வழி. இன்னொன்றும் சொல்கிறார் கேளுங்கள்- ‘கீதை படிப்பதைவிட கால்பந்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள். இவை தைரியமான வார்த்தைகள். ஆனால், உங்களை நேசிக்கின்ற காரணத்தால், இவற்றை நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். செருப்பு எங்கே கடிக்கிறது என்பதை நான் அறிவேன். ஒரு சிறிது அனுபவமும் பெற்றிருக்கிறேன். உங்கள் தோள்கள், தசைகளின் சற்றுக் கூடுதலான வலிமையால், கீதையை இன்னமும் சற்றுத் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்.’’ பாருங்கள் நமது உடல் வலிமையின் முக்கியத்துவத்தைக்கூட என்ன அற்புதமாக எடுத்துக் கூறுகிறார்!
ஒவ்வோர் இளைஞனும் சுவாமி விவேகானந்தரை படிக்க வேண்டும்
எனது அருமை மாணவர்களே, நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். போலி அரசியல்வாதிகளின் பின்னால் தரமற்ற எழுத்தாளர்களின் பின்னால், உதவாக்கரைச் சினிமாக்காரர்களின் பின்னால், எல்லாவற்றிற்கும் மேலாக வணிக லாபம் ஒன்றே முக்கியக் குறிக்கோள் என்று மாறிவிட்ட ஊடகங்கள் பின்னால் இந்த நாடு செல்ல ஆரம்பித்து இதுவரை குட்டிச்சுவரானது போதும், போதும்!
தேசபக்தியையும் தெய்வபக்தியையும் இரு கண்களாக மதித்துப் பூவுலகிலே பொன்னுலகைச் சமைக்க வேண்டுமேயானால், விவேகானந்தர் விடுத்தச் செய்திகளை நடைமுறையில் கொணர வேண்டுவதொன்றே வழி. ஆம், இந்தியாவிற்கு இதைத் தவிர வேறு வழியே கிடையாது. எனவேதான் சொல்கிறேன், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையையும் போதனைகளையும் ஒவ்வோர் இளைஞனும் படிக்க ஆரம்பியுங்கள். சத்தியமாகச் சொல்கிறேன், நம்மிடம் அணு அளவு நல்ல எண்ணங்களும் சக்தியும் இருந்தாலும், அதை மலை அளவு மாற்றிவிடும் அவரது வார்த்தைகள்! இது நான் அனுபவரீதியாகக் கண்ட உண்மை.
ஓர் உதாரணம் சொல்கிறேன். நான் முதன்முதலாக சென்னை வந்திருந்த சமயம் அது. வயது அப்போது 18 இருக்கும். சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் இறங்கி ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும். கிண்டி ஸ்டேஷனில் இறங்கி வெளியே வந்தபோது, வட்ட வடிவில் அங்கு ஒரு பெரிய கூட்டம் நின்றுகொண்டிருந்தது. உள்ளே நுழைந்து எட்டிப் பார்த்தேன்! ஆஹா! கூட்டத்தின் நடுவே ஒரு மோடி மஸ்தான்! அது வரை நான் மோடி மஸ்தானை நேரில் பார்த்தது இல்லை. த்ரில் அதிகமாகவே அங்கேயே நின்று வேடிக்கை பார்ப்பதாக முடிவு செய்தேன்.
பாம்பு, கீரி இரண்டையும் வைத்து தனது வேலைகளை ஆரம்பித்தான்! ‘பாம்புக்கும் கீரிக்கும் சண்டை மூட்டிவிடுகிறேன் பாருங்கள்’ என்று வித்தை காட்ட ஆரம்பித்தான். நேரமாகிக்கொண்டிருந்ததே ஒழிய சண்டை மூள்வதாகவே தெரியவில்லை. ‘கொஞ்சம் பொறுங்கள். அது ரெண்டுக்கும் இப்போது சண்டையிடும் ‘மூடு’ வரவில்லை. அதுவரை உங்களுக்கு வேறு விஷயங்கள் காட்டுகிறேன்’ என்றான் மோடி மஸ்தான். தரையிலிருந்து சிறிது மண்ணைக் கையால் எடுத்தான். ஒவ்வொருவர் கையையும் நீட்டச் சொன்னான். ஆர்வக் கோளாறு காரணமாக எல்லோரும் நீட்டினோம்! மண்ணெல்லாம் விபூதியாக மாறி எங்கள் கைகளில் விழுந்தது! ‘அதை முகர்ந்து பாருங்கள், விபூதி வாசம் அடிக்கிறதா’ என்று கேட்டவன், ‘அதை நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள்’ என்றான் எங்களிடம். அடுத்தது அதே மாதிரி குங்குமம் வரவழைத்துக் கொடுத்தான்! அதையும் பக்தியோடு கூட்டம் நெற்றியில் இட்டுக்கொண்டது! கூட்டம் மொத்தமும் மோடி மஸ்தானின் பக்தர்கள் ஆனது! எல்லோரது கண்ணுக்கும் கடவுளைப் போன்ற சக்தியுடையவனாகத் தெரிந்தான்.
ஒரு கட்டத்தில் ‘பாம்பும் கீரியும் இன்று சண்டை போட விரும்பவில்லை’ என்று கூறியவன், அவற்றை அதன் கூடைகளுக்குள் அடைத்துவிட்டான்! பிறகு ஏதேதோ பேச ஆரம்பித்தவன், ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான்! ஒவ்வொருவரிடமும், ‘நீ எவ்வளவு வைத்திருக்கிறாய், நீ எவ்வளவு வைத்திருக்கிறாய்...’ என்று கேட்டு தெரிந்துகொண்டவன், ‘கையில் உள்ள பணத்தையெல்லாம் இந்தச் சிவப்பு துண்டின் மேல் போடுங்கள்’ என்று எங்கள் முன் ஒரு துண்டையும் விரித்தான்! ‘இன்று பணம் கொடுக்காமல் இந்த இடத்தைவிட்டு நகர்ந்தால், இன்று இரவுக்குள் ரத்தம் கக்கிச் சாவீர்கள், இது சாமி கோபம்’ என்று எங்களிடம் கூறினான். ஒரு சிலரை பார்த்து ‘உனக்கு ரத்தம் கக்கி சாவில்லை, பணம் தராவிட்டால் இன்னும் இரண்டு நாளைக்குள் பஸ்ஸில் அடிபட்டுச் சாவாய், அதாவது ரத்தம் சிந்தி சாவாய்’ என்றான்! பத்து ரூபாயிலிருந்து நூறு, இருநூறு... என்று ஒவ்வொருவரிடமும் பணம் வசூலாக ஆரம்பித்தது! அதில் முக்கால்வாசி பேர் என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள்!
எனக்கோ வயிற்றைக் கலக்கியது. அடுத்தது எனது முறை! என்னைவிடப் பெரியவர்களே கொடுக்கும்போது நான் என்ன பிஸ்தா? பணத்தைக் கொடுத்து விடுவதுதான் பிழைக்க ஒரே வழி என்று எனது புத்தி எனக்கு அறிவுரை கூறியது. ஆனால், எனது இதயமோ, ‘இல்லை, இதில் ஏதோ சித்து வேலை இருக்கிறது. பயப்படாதே! உண்மையாகவே இவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இவன் (மோடி மஸ்தான்) இருந்தால் ஒன்று கடவுளாக இருக்க வேண்டும், அல்லது இந்நாட்டின் பிரதமராகவே இவன் ஆகியிருக்க முடியும்! இரண்டுமே இல்லை. சாலையில் தெருவோரத்தில்தான் இவன் பிழைப்பு நடந்துகொண்டிருக்கிறது! எனவே பயப்படாதே. பணத்தைக் கொடுக்காதே. எதிர்த்து நில்’ என்றது. ஆனால், எனது அறிவோ எனது புலன்களையே நம்பியது. மண்ணை விபூதி, குங்குமம் ஆக மாற்றியதைக் கண்கள் பார்த்ததையும், விபூதி, குங்குமத்தை என் மூக்கு முகர்ந்து பார்த்ததையும், மோடி மஸ்தான் கூறியதை என் செவிகள் கேட்டதையும் வைத்தே எனது அறிவு நம்பியது. ‘அதெப்படி? அப்படியென்றால் எனது கண், காது, மூக்கு ஆகியவை பார்த்தது, கேட்டது, உணர்ந்தது பொய்யா?' என்று எனது இதயத்தை நோக்கிக் கேள்வி கேட்டது! எனது அறிவுக்கும் இதயத்திற்கும் நடுவே போராட்டம்! எதை நம்புவது? அப்போதுதான் சுவாமிஜி கூறிய அந்த வாசகம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது!
‘‘அறிவு, இதயம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது இதயம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவுக்கு, பகுத்தறிவு என்னும் ஒரே ஒரு நிலை மட்டும்தான் உண்டு. அந்த ஒரு நிலைக்குள் இருந்தபடியே அறிவு வேலை செய்கிறது. தனக்கு உரிய அந்த எல்லையைக் கடந்து அறிவு செல்ல முடியாது’’ என்று சுவாமிஜி சொல்கிறார். ஆஹா! எவ்வளவு பெரிய உண்மை! சுவாமிஜியை அப்போதுதான் நான் படிக்க ஆரம்பித்திருந்த சமயம் அது. அறிவா, இதயமா எது சொல்வதைக் கேட்பது, நம்புவது என்ற போராட்டத்தில் இருந்த எனக்கு சுவாமிஜி கூறியது தைரியத்தை வரவழைத்தது. நிச்சயம் இந்த மோடி மஸ்தானைவிட சுவாமிஜி பெரியவர்! அவரது வார்த்தையில் உண்மை இருக்கும் என்று என் இதயம் கூறியது! இருந்தாலும் அறிவு சொல்வதையும் நம்பி, எனக்குள் ஓர் உதறல். வெளியே பயந்ததுபோல் காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளே பயம் தீயாக பற்றிக்கொண்டிருந்தது!
மோடி மஸ்தான் என்னிடம் பணம் கேட்டான். ‘‘என்னிடம் அறுபது ரூபாய்தான் இருக்கிறது. அதுவும் நான் நாற்பது ரூபாய் ஒருவருக்கு கொடுக்க வேண்டும். மீதி இருபது ரூபாய் எனது இன்றையச் சாப்பாட்டு செலவுக்கு உள்ளது. என்னால் தர முடியாது’’ என்று கூறினேன். ‘‘நீ இரு. உன்னைப் பிறகு பார்த்துக் கொள்ளுகிறேன்’’ என்று கூறியவன், ஒருவர் விடாமல் எல்லோரிடமும் பணத்தைக் கறந்தவன், ‘‘பணம் கொடுத்தவர்கள் எல்லாம் திரும்பிப் பார்க்காமல் இங்கிருந்து சென்றுவிடுங்கள்’’ என்று எச்சரித்தான்! அவன் எச்சரித்தவாறே பணத்தைக் கொடுத்தவர்கள் எல்லாம் திரும்பிப் பார்க்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர். கடைசியாக நான் மட்டுமே அங்கு தனியாக நின்றேன். மோடி மஸ்தான், பாம்பு, கீரி, மற்றும் நான்! என்ன செய்யப் போகிறானோ என்ற பயம் எனக்கு உச்சக்கட்டத்திலிருந்தது!
ஆனாலும், சுவாமிஜி கூறிய வார்த்தைகள் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டிருந்ததோடு ‘‘பயப்படாதே, தைரியமாக நில், ஐந்து பைசாகூட கொடுக்காதே, என்னவாகிறது என்று பார்த்து விடலாம்’’ என்ற தைரியத்தையும் எனக்குக் கொடுத்தது. இறுதியாக மோடி மஸ்தான் கேட்டான் ‘‘இப்போதாவது பணத்தை தருவாயா, மாட்டாயா? ரத்தம் கக்கி இப்போதே செத்தே போவாய்’’ என்றான்! ‘‘முடியவே முடியாது. அது என் பணம். எனக்கு வேணும்’’ என்றேன் நான்! ‘‘சரி! பிழைச்சுப் போ! அப்படியே திரும்பிப் பார்க்காமல் போய்விடு’’ என்று எனக்கு விடை அளித்தான்!
இப்போது கூறுகிறேன், அன்று அவ்வளவு பெரிய கூட்டத்தில் பணத்தோடு வீடு திரும்பியவர்கள் இரண்டே பேர்தான்! முதலாவது மோடி மஸ்தான். இரண்டாவது நான்! பாருங்கள் சுவாமிஜி கூறிய வார்த்தைகள் எவ்வளவு பெரிய சத்தியம்! எனக்கு அந்த வயதில் எவ்வளவு வலிமையைத் தந்தது! அந்த இக்கட்டான சூழலில் உண்மையை உணர்த்தி, வலிமையைத் தந்து என்னைக் காப்பாற்றியது! இந்த ஓர் உதாரணம் உங்களுக்குப் போதாதா ஒவ்வொரு மாணவனும் சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளைப் படிக்க வேண்டும் என்பதற்கு!
அவர் அறிவுரைகளையெல்லாம் ஒரு கதைபோல் படிக்காதீர்கள். நீங்கள் படித்ததில் எதெல்லாம் உங்களது முன்னேற்றத்துக்கு, இதயத்துக்குத் தேவையோ அதை எழுதி வீட்டில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். தினசரி காலையிலும் மாலையிலும் ஒருமுறை அதைப் படியுங்கள். ஒரு மாத காலமோ ஆறு மாத காலமோ அந்த வார்த்தைகள் உங்களது மனதில் ஆழப் பதியும் வரை அதைப் படித்து வாருங்கள். பிறகு அதற்கடுத்த உயர்ந்த கருத்துகளை எழுதி ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். அந்த வாசகங்களுக்குப் பக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் படம் ஒன்றையும் ஒட்டி வைத்துக்கொண்டால் இன்னும் அது நம்மை வசீகரிக்கும். கிட்டத்தட்ட எனது 16 வயதிலிருந்து இன்றளவும் இந்தப் பழக்கத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன். இன்று நான் இந்த மேடையில் வந்து பேசும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு அவரது அறிவுரைகளே காரணம்.
செய்வன திருந்தச் செய்யுங்கள்
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்... ‘‘நீ எதைச் செய்தாலும் அதன்பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அதற்கு அர்ப்பணித்துவிடு. ஒரு முறை சன்னியாசிப் பெரியவர் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் தமது கடவுள் வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் எவ்வளவு ஊன்றிக் கவனமும் கருத்தும் செலுத்தினாரோ, அதே அளவுக்கு ஊன்றிய கருத்தோடும் தமது பித்தளைச் சமையல் பாத்திரங்களையும் தேய்த்துப் பொன்போலப் பிரகாசம் உள்ளதாகச் செய்துகொள்வார்.’’ இறைவன் அருளால் இந்த குணாதிசயம் என்னிடம் சிறு வயதிலிருந்தே இருந்தது. நான் கார்ட்டூன் போடும்போது எந்த அளவு முனைப்புக் காட்டுகிறேனோ அதே அளவு முனைப்பை வீட்டிலுள்ள பொருள்களைத் துடைப்பதிலும் ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றுவதிலும்கூட காண்பித்து வருகிறேன். இந்த Perfection – தான் எனது வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு மிகவும் அடிப்படையான காரணமாக இருந்தது.
சுவாமி விவேகானந்தருக்கு எப்போதுமே தமிழகத்தின் மீது ஒரு தனி அன்பும் மரியாதையும் இருந்தது. அவர் எழுதிய கடிதங்கள் ஒன்றில் இருந்து எடுத்து இதை வாசிக்கிறேன் கேளுங்கள்... ‘‘சென்னையைப் பற்றி எனக்கு எப்போதுமே மிகப் பெரிய நம்பிக்கை. (சுவாமிஜி காலத்தில் தமிழகம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது) இந்தியாவையே மூழ்கடிக்க இருக்கிற மிகப் பெரியதோர் ஆன்மிகப் பேரலை, சென்னையிலிருந்தே கிளம்பி வரப்போகிறது. இந்த நம்பிக்கை எனக்கு உறுதியாக இருந்து வருகிறது; கல்கத்தாவிலே ஆயிரக்கணக்கானவர்கள் நமது இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். என்றாலும், நான் அவர்களிடம் வைப்பதைவிடச் சென்னைவாசிகளான உங்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புவீர்களாக. இறைவன் நமது சார்பில் இருக்கிறான் என்பதை அறியுங்கள். எனவே, தைரியமுள்ள ஆன்மாக்களே! முன்னேறிச் செல்வீர்களாக! அறிவாற்றல் பொருந்திய, தூய்மை மிக்க ஒரு நூறு இளைஞர்கள் முன்வாருங்கள். இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்’’ என்று ஓர் இடத்தில் சுவாமிஜி அறைகூவி அழைக்கிறார். அந்த நூறு இளைஞர்களும் தமிழகத்திலிருந்தே வந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி.