இந்த தேசத்தின் நிஜமான கதாநாயகர் இவர்தான். மற்ற மாண்புமிகுக்களின் பதவிக்காலம் வெறும் ஐந்து வருடமோ அல்லது பத்து வருடமோதான். இவரது பதவி நிரந்தரமானது. அசைக்க முடியாதது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரோ, ஜாதியினரோ, மதத்தினரோ மட்டும் இவருக்குச் சொந்தமல்ல; இந்த தேசம் முழுவதும் இவருக்குச் சொந்தம்.
இவரது தலைப்பாகை இந்த தேசத்தின் சாமான்ய பெரும்பான்மையினரைக் குறிக்கிறது. தலைப்பாகைக்கு உள்ளே உள்ள வழுக்கைத் தலையோ இவரது அனுபவத்தைக் காட்டுகிறது. இவரது பெருத்த மீசை இவர் இன்னும் சோர்வுறவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. இவருடைய ஒட்டுப்போட்ட சட்டை, இவருடைய பொருளாதாரம்; இவருடைய தேய்ந்து போன செருப்பு, இவரது அயராத உழைப்பு; இவரது குடை, இவருக்கு உற்ற துணை.
மெத்தப் படித்த மேதையல்ல. ஆனால், மாபெரும் அனுபவஸ்தர். இவர் வாய் பேசாத மௌனி அல்ல. பேச வேண்டிய நேரத்தில் ‘நறுக்’கென்று பேசுபவர். இவர் துணிவற்ற கோழையல்ல. அடிக்கவேண்டிய நேரத்தில் தனது வாக்குரிமையால் அடித்து நொறுக்குபவர்.
லஞ்சம், ஊழல், வன்முறை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், தீண்டாமை, சாதீயம், மதவாதம், ஏமாற்று, அரசியல், நிர்வாகச் சீர்குலைவு, சுகாதாரச் சீர்கேடுகள், வறட்சி, வெள்ளம் – எனத் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து இன்னல்களுக்கிடையேயும் தளராமல் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார். இவரது இதயத்துடிப்பு இந்த தேசத்தின் நாடித்துடிப்பு. கீதையின் சாரத்தின்படி ‘பலனை எதிர்பாராத கடமை’ யைச் செய்துவருகிறார் இந்தக் கர்மயோகி! இவரே இந்த தேசத்தின் அடையாளச் சின்னம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.