மக்களை ஒழுக்கம் சார்ந்தவர்களாய், அறச்சிந்தனை மிக்கவர்களாய் உருவாக்கும் உயரிய நோக்கத்தில்தான் இந்திய மண்ணில் வேதங்களும், உபநிடதங்களும், புராணங்களும் இதிகாசங்களும் நம் முன்னோரால் படைக்கப்பட்டன. "சத்யம் வத; தர்மம் சர' என்பதுதான் காலங்காலமாய் நம் பாரம்பரியம் வளர்த்தெடுத்த பண்பாடு. "வாய் திறந்தால் உண்மை பேச வேண்டும். வாழ்வதென்றால் அறம் வழுவாமல் வாழப் பழக வேண்டும்' என்று தொடர்ந்து போதிக்கப்பட்ட உயரிய சமூகம் இந்தியச் சமூகம். ஆனால், இந்தச் சமூகத்தில்தான் இன்று உண்மையின் பலிபீடத்தின்மேல் பொய் அரச நாற்காலியிட்டு அமர்ந்திருக்கின்றது. உயர் ஒழுக்கப் பண்பாடுகள் அனைத்தும் தொலை தூரத்துச் சாட்சியங்களாய் மங்கி மறைந்து வருகின்றன.
இன்றைய இழிந்த வாழ்க்கைச் சூழலைக் கண்டு, சிலருக்குச் சினம் பொங்குகிறது; சிலருடைய மனம் ஆற்ற முடியாத சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. சிலருடைய இதயம் வேதனையில் வலிதாங்க முடியாமல் விம்முகிறது. சிலரது சிந்தனையோ தார்மிக ஆவேசத்துடன் சகல சிறுமைகளையும் சுட்டெரித்துப் பொசுக்கிவிடும் தருணத்திற்காக ஏக்கத்துடன் சூல் கொண்டு தவிக்கிறது. ஆரோக்கியமான அறிவுலகப் பிரஜைகளின் தனித்தனி சினமும், சோகமும், வலியும், ஏக்கமும் ஒரு மையப் புள்ளியில் குவிகிறபோது, அது மதியின் கார்ட்டூனாக மாறிவிடுகிறது.
ஆயிரம் அறநூல்களைப் படிப்பதற்கும், சிந்தித்துப் பண்படுவதற்கும் அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்த எந்திரயுலகத்தில் யாருக்கும் நேரமும் இல்லை; பொறுமையும் இல்லை. இன்றைய மாந்தருக்கு எதையும் திருக்குறள் போன்று இரண்டு வரிகளில் சுருக்கென்று தைப்பதுபோல் சுருக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. பேச்சைவிட ஆழ்ந்த மெüனம் மகத்தானது. எழுத்தைவிட அர்த்தமுள்ள கார்ட்டூன் எல்லா வகையிலும் வலிமையானது. கோணலாகிவிட்ட சமூகத்தைச் சில கோடுகளில் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் சாகசம் மதியைப் போன்று ஓரிருவருக்கு மட்டுமே சாத்தியமானது.
படைப்பிலக்கிய உலகில் ஒரு கார்ட்டூனிஸ்ட், அதிசயமான, ஆராதனைக்குரிய ஒரு பிரம்மா. புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம் போன்றவற்றைப் படைப்பவர்க்கு மொழி ஆளுமையும், சமூக பிரக்ஞையும், வாழ்க்கை நிகழ்வுகளை நுணுக்கமாகப் படம் பிடித்து நெஞ்சில் பதிய வைக்கும் கூர்மையான பார்வையும், சொற் சிக்கனமும் அவசியம். ஆனால், ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் இந்த இலக்கியப் படைப்பாளிகளால் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. மதியைப் போன்ற கார்ட்டூனிஸ்டுக்கு ஒரு தூரிகையின் சிறு கோடுகளே வலிமை வாய்ந்த சாதனமாகிவிடும் நிலையில் மொழியின் துணை தேவையற்றுப் போகிறது. இந்த அற்புதமான தொகுப்பில் உள்ள 26 கார்ட்டூன்களும் உருவாக்கக் கூடிய பாதிப்பை ஈராயிரம் பக்கங்களில் இதிகாசம் போல் எழுதினாலும் உருவாக்க இயலாது என்பதுதான் பொய்யின் கலப்பில்லாத உண்மை.
ஒரு சமூகத்தையே ஒட்டுமொத்தமாகச் சீரழித்துவரும் மதுவின் கொடுமை. உடலில் புற்றுநோய்க்கு வாசற்கதவைத் திறந்து வைக்கும் புகைப் பழக்கம், பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பரிசாக வந்து சேரும் எய்ட்ஸ் அரக்கன், நுகர்வு கலாச்சாரம் வளர்த்தெடுக்கும் பாலியல் பிறழ்வுகள், சின்னஞ்சிறுமிகள் மீது பண்பாடற்ற மனித மிருகங்கள் பிரயோகிக்கும் பாலியல் வன்முறைகள், சீர்குலைந்து வரும் குடும்ப உறவுகள், மரங்களின்றி மாசு படிந்து கிடக்கும் சுற்றுச்சூழல், திசை தவறிய கல்வியின் பயணம், பேராசையின் பிடியில் சிக்கி பிள்ளைகளின் அறிவை வணிகமயமாக்கும் பொறுப்பற்ற பெற்றோர், போலி வேடதாரிகளிடமும் கபட சந்யாசிகளிடமும் சிறைப்பட்டுச் சாரமிழந்து கிடக்கும் ஆன்மிகம் என்று நம் வாழ்காலச் சமுதாயத்தின் புரையோடிக் கிடக்கும் சகல தளங்களிலும் மதியின் தூரிகைப் பயணித்திருப்பது, இந்த பாழ்பட்ட மனித சமூகத்திடம் அவர் மனத்தளவில் பூண்டிருக்கும் ஆழ்ந்த அக்கறையையே வெளிப்படுத்துகிறது.
முறை தவறிய வாழ்க்கைப் பண்புகள் குடும்ப நலனையும், சமூக ஒழுக்கத்தையும் சேர்த்துச் சிதைக்கும். அறம் வழுவிய அரசியல், பண்பாட்டுத் தளத்தை அடியோடு தகர்க்கும். ஈரமற்ற இதயம் வன்முறையை வளர்க்கும். "தான்' என்னும் ஆணவம் தனிவுடைமையைப் போற்றும். இதுபோன்ற தவறுகளிலிருந்து நாம் அனைவரும் விடுபட, மானுடத்தை வழிபடும் மதியின் தூரிகை வடித்திருப்பது 26 படங்களன்று; 26 வகை பாடங்கள்!
- தமிழருவி மணியன்
மேலும் >>