கடிக்கும் வல்லரவும் கார்ட்டூனும்
ஆரம்பப் பள்ளி நாள்களில், மூன்றாம் வகுப்பிலேயே, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்துவிட்டது. இதைச் சொல்லவருவதன் காரணம், தமிழ் கூறு நல்லுலகின் தமிழனுக்குப் பிறந்த தமிழ் மாணவர் சிலருக்குப் பத்தாவது வகுப்பிலும் எழுத்துக் கூட்டிப் படிப்பதுவே இயல்பாக இருக்கிறது. எனது பள்ளிப்பருவத்தில் பத்து வயதிலேயே நூலகத்துக்குப் போக ஆரம்பித்து விட்டாலும், நன்றாகவே வாசிக்கத் தெரிந்திருந்தாலும் முதலில் கண்ணுறுவது கார்ட்டூன் தான். கார்ட்டூனுக்குநிகரான தமிழ்ச் சொல் என கேலிச் சித்திரம் அறிமுகமானது மிகவும் பிற்பாடுதான்.
அரசியல் தலைவர் பலரையும் கேலிச் சித்திரங்கள் தீட்டினார்கள். காந்திஜி, நேருஜி, ராஜாஜி, ஈ.வெ.ரா., காமராஜ், அண்ணாதுரை, பக்தவத்சலம், ரசிகமணி, ம.பொ.சி. என. கைத் தடியையும் கண்ணாடியும் வரைந்தால் எமக்கு அது காந்தி எனவிளங்கிற்று.
கோணலாகப் போடப்பட்ட முகங்களைக் கண்டு எந்தத் தலைவரும் அன்று கோபித்துக் கொண்டதில்லை. உண்மையில், கேலிச் சித்திரம் வரைய வாகான முகம் கொண்டவர்கள் பாக்கியசாலிகள். சில கோடுகளும்புள்ளிகளுமே அவர்களது குணச் சித்திரத்தைக் கொண்டு வந்துவிடும்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம், கலிஃபோர்னியா சென்று, அங்கிருந்து லாஸ் ஏஞ்சலஸ் போய், நண்பர்கள் ராஜேஸ், அவர் சிறுவன் ரிஷி, நரேன், அருண், விசு ஆகியோருடன் ஹாலிவுட் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் உள்ளே திரிந்து கொண்டிருந்தேன். இரண்டு ஓவியர்கள் அமர்ந்து உருவப் படமும் கார்ட்டூனும்தீட்டிக் கொண்டிருந்தனர். நன்கொடையை நண்பர்கள் கொடுத்ததனால் எவ்வளவு என்பது தெரியாது. கார்ட்டூனிஸ்ட் ஒருவர் வரைந்து கொடுத்த எனது கேலிச் சித்திரம் வீட்டில் வைத்திருக்கிறேன். அதைப் பார்த்தபோது தெரிந்தது, நமது முகம் கேலிச் சித்திரத்துக்குப் பொருந்தி வராது என.
தாணு, மாலி, கோபுலு போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் உயிரோட்டமுள்ள, உடல்மொழி நெறிக்கும் கேலிச் சித்திரங்கள் எங்கள் காலத்தில் மிகவும் பிரசித்தமானவை. ஆனந்த விகடனின் அட்டைப் படமாக, கோபுலு, வண்ணத்தில் வரைந்த கேலிச் சித்திரங்களைப் பார்த்து பரவசப்பட்டிருக்கிறோம். அது போன்றே மதன் சித்திரங்களும்.
எழுத்தறிவற்றவன் கூட, படம் பார்த்துப் புரிந்து கொண்டான். பல பக்கங்களில் மிகைச் சொற்களில் சொல்ல வேண்டியதை சில கோடுகளும் புள்ளிகளும் தீற்றல்களும் கொண்ட கேலிச் சித்திரங்கள் உணர்த்திவிடும்.
புகைப்படம் பார்த்து, அல்லது ஆளை முன்னால் உட்கார்த்தி வைத்து வரையும் உருவப் படத்தை விடக் கடினமானது கார்ட்டூன்கள் வரைவது. உண்மையான உருவை ஒத்திருக்க வேண்டும். ஒரு வகையில், பாவம் இருக்கும் வேண்டும், செயல் இருக்க வேண்டும், குணாம்சம் தெளிவாகத் தெரிய வேண்டும்.
1967-ன் பொதுத் தேர்தல் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதியது. நல்ல விதமாகவா, தீவினை போலவா என்பது தனி விவாதப் பொருள். அப்போது ஸ்ரீதர் வரைந்ததொரு கார்ட்டூன். தி.மு.க. கூட்டணித் தலைவர்களான ராஜாஜி, பெரியார், அண்ணாதுரை, காயிதே மில்லத் இஸ்மாயில் ஆகியோரைக் கழுதை மேல் உட்கார வைத்து, கழுதை மீது தி.மு.க. கூட்டணி என்று எழுதிய கேலிச் சித்திரம். அன்று பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அன்றைய மனநிலையில் என் போன்றோருக்கு பெரிய ஆத்திரம் தந்த கேலிச் சித்திரம் அது. சிறப்புஎன்னவென்றால், அதைத் தேர்தல் பிரசார சுவரொட்டியாக அடித்து வீதியெங்கும் ஒட்டியது பேராயக் கட்சி. அந்தக் கட்சியிலும், அன்று, அந்த கார்ட்டூனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசித்த அறிவாளிகள் இருந்தனர்.
கார்ட்டூன் அல்லது கேலிச்சித்திரம் என்பது இரு பரிமாணக் காட்சி ஊடகக் கலை. அதன் இலக்கணங்கள் காலந்தோறும் மாறி வந்துள்ளன. இன்றோ யதார்த்தம் அல்லாதஅல்லது பகுதி யதார்த்தம் உள்ள ஓவியங்களைக் கார்ட்டூனிஸ்ட்கள் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஸ்கெட்ச் பயன்படுத்துகிறார்கள். பலர் பென்சில் பயன்படுத்துகிறார்கள். சிலர் இந்தியன் மை பயன்படுத்துகிறார்கள். தூரிகை, பேனா, மார்க்கர் பயன்படுத்தப்படுவதும் உண்டு.
பெரும்பாலும் கருப்பு- வெள்ளையிலேயே கார்ட்டூன்கள் வரையப்பட்டன. சிலர் வண்ணங்களிலும்வரைந்தனர்.
பிரித்தானிய கார்ட்டூனிஸ்ட் டேரன் புர்டி, சார்லஸ் ஆடம்ஸ், அட்டிலா அடோர்ஜனி முதலானோர் உலகப் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்கள். நான் வளர்ந்து பெரியவனாகி, பம்பாய்க்குப் பணிக்குப் போன பிறகே, பாபா சாகேப் தாக்கரே என்று பின்னர் அறியப்பட்ட, ஒரு மகாத்மாவின் பிம்பம் தரித்த, சிவசேனைத் தலைவர், பால் தாக்ரே சிறந்த கார்ட்டூனிஸ்ட் என தெரிந்து கொண்டேன்.
இந்திய கார்ட்டூனிஸ்ட்களான மலையாளத்தைச் சார்ந்த அபு ஆப்ரகாம், சங்கர், தாணு, ஆர்.கே. லக்ஷ்மண் ஆகியோர் புகழ் பெற்றவர்கள். அப்போது "சங்கர்ஸ் வீக்லி' என்றொரு வார இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் சங்கர்வரைந்த பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவின் கேலிச் சித்திரங்கள், ஆழமான அரசியல் அறிவையும் உணர்வையும் தந்தவை.
கோவாக்காரரான மரியோ மிராண்டோ அன்று ஃபிலிம்ஃபேர், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா ஆகிய பருவ இதழ்களில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். பார்த்ததும் சொல்லிவிடலாம், இது மரியோ மிராண்டோ என்று.
ஆர்.கே. லட்சுமணன் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் சகோதரர். ஆர்.கே. நாராயணனின் மால்குடி டேய்ஸ் எனும் நவீனத்தின்பக்கங்களில் கோட்டோவியங்கள், கேலிச் சித்திரப் பாணியில் தாராளமாக இடம் பெற்றிருந்தன. இன்றும் அந்தப் பதிப்பு கிடைக்கலாம். பின்பு தொலைக்காட்சித் தொடராக வந்த நாவல் அது.
எனது புத்தகங்கள் "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை', "மண்ணுள்ளிப் பாம்பு' ஆகியவற்றுள் ஓவியர் ஜீவா வரைந்த கேலிச் சித்திரங்கள் போன்ற கோட்டோவியங்களைப் பயன்படுத்தி இருந்தோம்.
ஆர்.கே. லக்ஷ்மண் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கேலிச்சித்திரக்காரர். நாட்டியக் கலைஞரும்நடிகையுமான குமாரி கமலாவின் கணவராக இருந்தவர். 1972 நவம்பரில் பம்பாய்க்குப் புலம் பெயர்ந்து இறங்கிய தினத்தின் மறு தினத்தில் இருந்தே நான் அவர் விசிறி. டைம்ஸ் ஆஃப் இந்தியா எனும் ஆங்கில நாளிதழின் இடக்கையோரம், அவர் கார்ட்டூன் இடம் பெறாத விடியல் இல்லை. You said it' என்று தலைப்பிடப்பட்டிருக்கும். அவர் வரையும் பொது ஜனம், இன்றைய Common Man அல்லது "ஆம் ஆத்மி'. அவரது கைப்பிடி வளைந்த குடை, வேடிக்கை பார்க்கும் காகம், விளக்குத் தூண், அணிந்திருக்கும் பொத்தல் கோட்டு இன்றும் நினைவில் இருப்பவை. உட்பக்கங்களில்அவர் வரைந்த அரசியல் கேலிச் சித்திரங்கள் உயிர்ப்புள்ளவை. ஒரு நெடும் பொழிவு ஏற்படுத்தும் கிளர்ச்சியை ஒருகார்ட்டூன் நிகழ்த்தியது அன்று.
டைம்ஸ் நிறுவனத்தில் இருந்து பிற்பகலில் வெளியான "ஈவ்னிங் நியூஸ் ஆஃப் இந்தியா' மாலை இதழிலும் அவருடைய கார்ட்டூன்கள் இருந்தன. என்ன பொருளாதார வறுமை இருந்தாலும், மாதக் கடைசியில் சாப்பிட இரண்டு பணம் கைமாற்று வாங்கினாலும், அறிவு வறுமைக்கு ஆட்பட்டதில்லை. விடுமுறை தினங்களில்கூட, நான் குடியிருந்த செம்பூர் ரயில் தண்டவாளங்களின் ஓரம் இருந்த, சோப்டா பட்டி என்றழைக்கப்பட்ட குடிசையில் இருந்து எழுந்து நடந்து போய் ரயில் நிலையத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வாங்க மறந்ததில்லை. வாங்கியதும் பார்ப்பது You said it’.
எனது புத்தகங்கள் "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை', "மண்ணுள்ளிப் பாம்பு' ஆகியவற்றுள் ஓவியர் ஜீவா வரைந்த கேலிச் சித்திரங்கள் போன்ற கோட்டோவியங்களைப் பயன்படுத்தி இருந்தோம்.
ஆர்.கே. லக்ஷ்மண் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கேலிச்சித்திரக்காரர். நாட்டியக் கலைஞரும்நடிகையுமான குமாரி கமலாவின் கணவராக இருந்தவர். 1972 நவம்பரில் பம்பாய்க்குப் புலம் பெயர்ந்து இறங்கிய தினத்தின் மறு தினத்தில் இருந்தே நான் அவர் விசிறி. டைம்ஸ் ஆஃப் இந்தியா எனும் ஆங்கில நாளிதழின் இடக்கையோரம், அவர் கார்ட்டூன் இடம் பெறாத விடியல் இல்லை. You said it' என்று தலைப்பிடப்பட்டிருக்கும். அவர் வரையும் பொது ஜனம், இன்றைய Common Man அல்லது "ஆம் ஆத்மி'. அவரது கைப்பிடி வளைந்த குடை, வேடிக்கை பார்க்கும் காகம், விளக்குத் தூண், அணிந்திருக்கும் பொத்தல் கோட்டு இன்றும் நினைவில் இருப்பவை. உட்பக்கங்களில்அவர் வரைந்த அரசியல் கேலிச் சித்திரங்கள் உயிர்ப்புள்ளவை. ஒரு நெடும் பொழிவு ஏற்படுத்தும் கிளர்ச்சியை ஒருகார்ட்டூன் நிகழ்த்தியது அன்று.
அரசியல் விமர்சனக் கேலி என்பது இஞ்ஞான்று மிகவும் தரம் இறங்கிப் போயிற்று என்பது உண்மை. விமர்சனத்தை, கிண்டலைத் தாங்கிக் கொள்கிற பக்குவம் இழந்து போனார்கள் மக்கள் தலைவர்கள் என்று தம்மைக் கொண்டாடிக் குதூகலித்துக் கொள்பவர்கள் என்பது இன்னொரு உண்மை. அண்டை மாநிலமான கேரளத்து மலையாளத் தொலைக்காட்சிச் சானல்களில் அச்சுதானந்தனையும் உம்மன்சாண்டியையும் செய்யும் கிண்டல்களை, மிமிக்ரிகளைத் தமிழ்நாட்டில் செய்தால் இனமானத் தமிழினம் சீறும் சிறுத்தை என வெகுண்டு எழுந்து தொலைக்காட்சிச் சேனல் அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிடும். சகிப்புத் தன்மை கிடக்கட்டும், குற்ற உணர்வு பொங்கிக் கொதித்து நுரைத்து பெருக்கெடுத்து வீரமாய்ப் பாயும் போலும். உண்மையில் கோழைகள் தான் கிண்டலுக்குச் சினம்கொள்வார்கள். மேலும், நகை எனும் ஒரு பொருள் இலாத இனத்தவர்...
1960-ல் இருந்தே நான் தினமணி வாசகன். இதையும் ஆயிரம்கோயிலில் சொல்லுவேன். அன்று தினமணியின் ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமன் மீது எனக்குப்பெரு மதிப்பு உண்டு. அத்தரத்துச் செய்தித்தாள் ஆசிரியர் தமிழுக்கு வாய்ப்புஅபூர்வம். அவரது தலையங்கங்கள்-- அந்தக் காலத்தில் தலையங்கத்தை லீடர் என்று சொல்வோம்-- "கணக்கன்', "பாமரன்' எனும் பெயர்களில் அவரெழுதிய அரசியல், பொருளியல், சமூகவியல் கட்டுரைகள் என்னைத் தகவமைத்துக் கொள்ள பெரிதும் உதவியவை.
1989-ல் மீண்டும் புலம் பெயர்ந்து கோவைக்குப் போந்த பின்பு, தொடர்ந்து தினமணி வாங்குகிறேன். தேசம் கடந்ததமிழனுக்கு தினமணி நீட்டிய நேசக்கரம் ஒரு சிறப்பு ஈர்ப்பு. கோவையில், என் வாடகை வீட்டு வாசலில் காலை ஐந்தே முக்காலுக்கு வந்து விழும் ஓசை கேட்டு, கதவு திறந்து, முதலில் பார்ப்பது தலைப்புச் செய்தியும் மதியின் கார்ட்டூன் "அடடே'யும்.
தனித்துவம் மிக்க பல கார்ட்டூன்ஸ்ட்களில் சிறப்பானவர் "மதி'. மதி எனப்படும் ந. மதிக்குமார் எனும் ஓவியரை நான் இதுகாறும் சந்தித்ததில்லை. பக்கத்து இருக்கையில் பயணம் செய்தால் என்னால் அடையாளம்தெரிந்து கொள்ள இயலாது. பெரு மதிப்புறு புகழ்பெற்ற ஓவியர்கள் ஆதிமூலம், சந்ரு, மருது ஆகியோரைச் சந்தித்து உரையாட எனக்கு வாய்த்ததுண்டு.
என் மகள் திருமணத்தின்போது, தனது துணைவியாருடன், முன்தினமே வந்திருந்து, மண்டபம் காலி செய்வது வரைக்கும் இருந்தவர் ஓவியர் மருது. அவரது ஓவியப்புத்தகம் "வாளோர் ஆகும் அமலை' என்னிடம் இருக்கும் அரிய சேமிப்பு.ஆனால் இளையவரான மதியுடன் எத்தொடர்பும் இருந்ததில்லை.
1967 பொதுத் தேர்தல் தொடங்கி, திருப்பித் திருப்பி, புரட்டிப் புரட்டித் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்ட பேராயக் கட்சி, அதிலிருந்து கிளைத்த தமிழ் மாநில காங்கிரஸ், பின்னர் தாய்ச் சங்கத்துடன் இணைந்த பின்பும் சட்டமன்றத் தொகுதிகள் பத்துக்கும் இருபதுக்கும் தி.மு.க.விடமும் அ.தி.மு.க.விடமும் குறையிரந்து நிற்கும் அவலம் யாவரும்அறிந்தது.
2001-ன் தொடக்கத்தில் மதி வரைந்த கார்ட்டூன்.மாபெரும் ஏல விற்பனை மேடை. அதன் மேல் சவலைக் குழந்தை போல கருப்பையாமூப்பனார், த.மா.கா. என அட்டை கோர்க்கப்பட்டு அமர்ந்திருக்கிறார். மேடைக்கு இடப் பக்கம் அம்மா. வலப் பக்கம் தமிழினத்தலைவர். அவர்கள் பெயரோ, கட்சிப் பெயரோ குறிக்கப்பட்டிருக்கவில்லை. பார்த்தாலேதெரிந்து கொண்டு பரவசமும் படலாம். ஏல விற்பனையை அம்மா தொடங்குகிறார். 10 சீட். கலைஞர் கூவுகிறார்20 சீட்... அம்மா மறுபடியும் 25 சீட்... கலைஞர் ஏலத்தை உயர்த்தி 40 சீட்...
நாற்பதில் ஏலம் முடிந்துவிட்டது போலும். அந்தக் கேலிச்சித்திரத்தில் மூப்பனாரின் முகபாவம் ஒன்றுண்டு, "பெப்பரப்பே' என்று. அல்லது, "எப்படி, பட்டத்து யானையும் வெண்கொற்றக் குடையும் அணிசேர் புரவியும் ஆட்பெரும்படையும் மணிமகுடமும் செங்கோலும் அரசு கட்டிலும் எறியும் முரசு மாக இருந்த யாம் திருவோடும் கையுமாக ஆகி விட்டோமே' எனும் கழிவிரக்கம்.
இது மதியின் அரசியல் விமர்சனம்.
குதிரைப் பந்தயம் என்பது ஒரு சூதாட்டம். அதில் குதிரைச் சொந்தக்காரர்களுக்கு பங்குண்டு. புக்கிகளுக்கும் பங்குண்டு. ஜாக்கிகளுக்கும் பங்குண்டு. சூதாடுவோருக்கும் பங்குண்டு. அரசாங்கத்துக்கும் பங்குண்டு. ஆனால் குதிரைக்குப் பங்கிருக்க வழியில்லை. ரம் ஊற்றிக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதன் சக்திக்கு அது ஓடும். தோற்பதும் வெல்வதும் அதன் ஓட்டத்தால் தீர்மானிக்கப்படாது. ஆனால், குதிரைகளான விளையாட்டு வீரர்களே நேரடியாகச் சூதில் பங்கேற்கும் அவலம்தான் கிரிக்கெட். ஒரு தேசத்தை, தேசத் தலைவர்களின் கூட்டுறவோடு மோசடி செய்யும் மூன்றந்தர "குலுக்கிக்குத்து' ஆட்டம். சொந்த மக்களையே கூசாமல் கொள்ளையடிக்கும் நம் தேசியக்குணச்சித்திரம் இது. இதை விளையாட்டு என்று மூடர்களும் முழு மூடர்களும்திளைத்துக் கிடக்கிறார்கள். 2000-ம் ஆண்டில் மதி வரைகிறார்--
கிரிக்கெட் விளையாடும் பிட்ச். ஒரு பக்கம்விக்கெட் கீப்பர். வழக்கமாக விக்கட் கீப்பருக்கும் விளையாடும்பேட்ஸ்மேனுக்கும் நடுவில் மூன்று ஸ்டம்பும் அவற்றின் மேல் இரண்டு பெயில்களும்இருக்கும். பிட்சின் மறுமுனையில் மற்றொரு ஆடாத பேட்ஸ்மேன்இருப்பார். மதியின் கார்ட்டூனில், விளையாடும் பேட்ஸ்மேன் ஸ்டம்புக்கு முன்னால் காத்து நிற்பதற்குப் பதிலாக, ஸ்டம்புக்குப் பின்னால், பார்த்து நிற்கிறார். எதிர்ப்புறம் ஓடி வரும் பந்து வீச்சாளர். ஸ்டம்புக்கு பின்னால்நிற்கும் பேட்ஸ்மேனைப் பார்த்து எதிர்முனை பேட்ஸ்மேன் சொல்கிறார்-- "ஏற்கனவே பணம் வாங்கிட்டார்னு நினைக்கிறேன்' என்று.
இந்தக் கார்ட்டூனை ரசிப்பதற்கு அதைக் கண்ணுற வேண்டும். அதற்குக் கீழே இன்னொரு கார்ட்டூன். அதில் தொலைக்காட்சி அறிவிப்பாளர் சொல்கிறார்—This match is brought to you by Dawood Ibrahim!' என்று. அதைப் பார்த்துப் புரிந்து கொள்வதற்கு தாவூத் இப்ராஹிம் யாரெனத் தெரிய வேண்டும். துபாயில் ஜெயமோகனுடன் நகர்வலம் வந்தபோது ஆசிஃப்மீரானும் ஜென்ஸீயும் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்கள் தாவூத் இப்ராஹிம் வீடு என்று.
"அப்பரும் சுந்தரரும் அருள்மணிவாசகரும் அருணகிரிநாதரும் அருமைத் தாயுமானாரும் குருமணி சங்கரரும் பொருள் உணர்ந்தே உன்னை, எப்படிப் பாடினாரோ, அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே' என்பது போல் மாளிகை பார்த்துப் பாடத் தோன்றியது.
மற்றொரு கேலிச் சித்திரம், கிரிக்கெட் ஸ்கோர் போர்டு காட்டுகிறது. பேட்ஸ்மேன் நம்பர்4 - 900 கோடி, பேட்ஸ்மேன் நம்பர் 5 - 700 கோடி, பேட்ஸ்மேன் நம்பர் 6 - 500 கோடி, பேட்ஸ்மேன் நம்பர் 7 - 300 கோடி என்று.
தேசத்தின் வீர விளையாட்டு என்று அதனை மாரோடு அணைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தனர் இந்தியப் பெருங் கோடியினர். இன்று அது தேசியஊழல் விளையாட்டாக, கருநாகப் பாம்பு எனப் பிளந்த நா நீட்டித் துழாவுகிறது.
"மதி கார்ட்டூன்ஸ்' முகப்பு அட்டையில் ஒரு கேலிச் சித்திரம். தென்னகமாநிலங்கள் நான்கு. ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு. மதி ஐந்தாக வரைகிறார். தமிழ்நாடு இருக்க வேண்டிய இடம் இரண்டாய்ப் பிரிக்கப்பட்டு மேற்பாதி ஸ்டாலின் நாடு, கீழ்ப் பாதி அழகிரி நாடு எனக் குறிக்கப்பட்டிருந்தது. எனது ஐயம் மூன்று பங்கு அல்லவா என்பது!
ஒரு கட்டுரை செய்யும் காரியத்தை ஒரு கேலிச்சித்திரம் செய்கிறது. இதை வரையும் தைரியம், அதுவும் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, மதிக்கு இருக்கிறது.
புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு சித்திரம். "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது' என்பது பழமொழி. கழுதை, எவ்விதம் கட்டெறும்பாக உருவ மாற்றம் பெறுகிறது என வரையப்பட்டிருந்தது. ஆனால் கேலிஅதில் இல்லை. கழுதை கட்டெறும்பாகும் ஏழு படங்களில் ஒவ்வொன்றின் மேலும் த.நா. காங்கிரஸ் எனும் ஏழு எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்ததுதான். எனக்கு ஒரேயொரு மறுப்பு உண்டு. அது கழுதையாக இருந்தால், ஈழத் தமிழன் ஒன்றே கால் லட்சம் பேரைக் கொல்வதற்கு, கூட்டு நின்றிராது. இது வேறு ஏதோ அபாயகரமானதொன்று.
சுதந்திரம் பெற்ற இந்த 66 ஆண்டுகளில், பாரத தேசத்தை எத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்டது? அவற்றுள் எத்தனை ஆண்டுகள் பண்டித நேருவும் அவர் வம்சாவளியினரும்-- சோனியா காந்தியின் பின் இருக்கை இயக்கம் உட்பட-- ஆண்டிருப்பார்கள்?
மதியின் மற்றொரு கார்ட்டூன். வரையப்பட்டஆண்டு, 2000. உள்ளாடை, இடுப்பில் மட்டும், அணிந்த குழந்தையின் கட்-அவுட் ஒன்று. பீடத்தில் "வருக' என்று "கை' படம். மதியின் பொது ஜனம் சொல்கிறார்-- "வேற யாரு? பிரியங்காவோட பையனாகத்தான் இருக்கும்....!'
இந்தியத் தன்மானத்துக்கும், வீரத்துக்கும், அறிவுக்கும், கல்விக்கும், பண்பாட்டுக்கும், அரசியல் விவேகத்துக்கும் எண்ணற்ற கசையடிகள் வழங்குவது. ஆனால் நமதுகாட்டெருமைத் தோலுக்கு உறைக்க வேண்டுமே! எத்தனை காய்த்துப் போன, மரத்துப் போன, தடித்துப் போன காண்டாமிருகத் தோல் நமக்கு?
"அடிமைப் PEN' என்றொரு கார்ட்டூன். பேனாவுக்கு கைவிலங்கு பூட்டி அம்மா இழுத்துப்போவது போல. எவருக்கும் எந்தக் காலத்திலும் வளைந்து கொடுக்காத பேனாவை எப்படிக் கையாள்கிறது அரசு என்பதற்கான கண்டனம். ஆனால் எனக்கொரு சந்தேகம். இந்திய மக்களாட்சியில் PRESS என்பது சமய சந்தர்ப்பம் பார்த்தும் ஆளுக்குத் தகுந்தாற் போலவும் அரசின் சலுகைகளுக்கு மயங்காத துணிச்சலும் நடு நிலைமையும் தெளிவான சிந்தனையும் பெரும்பான்மையான தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு உண்டா? அரசுகள் சில சமயம் விலங்கு பூட்டுகிறது. பல சமயம் அலுவலகமே விலங்கு பூட்டித்தானே அனுப்புகிறது! நான் அடிப்பதுபோல அடிக்கிறேன் என்பது தானே இன்றைய பத்திரிகை தர்மம்?
"சாதனையும் சோதனையும் என்று இரண்டு வீரப்பன் கார்ட்டூன்கள். வீரப்பனை வைத்து நாளிதழ்கள், பருவ இதழ்கள் எப்படி பஜ்ஜி, போண்டா செய்து சுடச்சுட விற்பனை செய்தன என்பதை மதி பொருட்படுத்தி, மேற்சென்று இடித்துரைக்கிறார். தாம்சார்ந்திருக்கும் துறையையும் விமர்சனம் செய்யும் கலைநேர்மை இருக்கிறது அவரிடம். Press meet, அம்மா ஸ்டைல் என்று இரண்டு கார்ட்டூன்கள். ஒன்று செய்தியாளர்களுக்கு அரசு வழங்கும் இலவச உதை. இரண்டாவது தர்ம அடிக்கு அஞ்சி, செய்தியாளர்களே "அம்மாக்களாக' உருமாற்றம் பெற்று விடுவது.
அரசியல் விமர்சனம் என்று மட்டுமே இல்லை. திறமையான, கூர்த்த கற்பனை உண்டு மதியிடம். "காதல் தினம் - 2004' என்றொரு கார்ட்டூன். திருவாளர் பொது ஜனம் குடையைத் தவறவிட்டு, புறம் காட்டி ஓடுகிறார். சகல அரசியல் வியாபாரிகளும் மன்மத பாணங்களுடனும், மலர்க்கணைகளுடனும் துரத்துகிறார்கள்.
ஊராட்சிக்கு ஒன்று, வட்டத்துக்கு ஒன்று, மாவட்டத்துக்கு ஒன்று, மாநிலத்துக்கு ஒன்று, தேசத்துக்கு ஒன்று, சர்வ தேசியத்துக்கு ஒன்று என பன்முக மார்க்சீயக் கொள்கைகள் உண்டு என மதியால் உறுதிபடச் சொல்ல முடிகிறது, ஒரு கேலிச் சித்திரம் வாயிலாக. மார்க்சீயர்கள் பற்களும் நகங்களும் நாக்களும்கொண்டு இதனை மறுத்தாலும், பொது ஜனம் என்றொரு அற்ப ஜீவராசியும் இருக்கிறார்தானே?
மாநிலங்களவைத் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு குறுக்கு வழி என்று அறிவர் அனைவரும். தேர்தலில் தோற்றவர், கவர்ச்சி நடிகைகள், ஆயிரக்கணக்கான கோடிகள் வென்ற கிரிக்கெட் வீரர், தரகர்கள், நண்பனின், பகைவனின் காலை நக்கி கொண்டு சேர்க்கும் வாரிசுகள், கனபாடிகள், துதிபாடிகள் என உறுப்பினர் தகுதிகள் உண்டு. ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட வென்றிராதவர் இங்கு பல்லாண்டுகளாக மத்திய அரசின் நிதியமைச்சர், தலைமை அமைச்சர். மாநிலங்கள் அவைக்குப் போக வரிசையில் நிற்கும்கூட்டம் ஒன்றைக் காட்டுகிறது ஒரு கேலிச்சித்திரம். வரிசையில் நிற்பவர்கள் யாரார்? ஊழல் அரசியல்வாதி, மதவாதி, தொழிலதிபர், நடிகர், பள்ளிச் சிறுவர், பசு மாடு என. என்னத்தைச் சொல்லி எவருக்கு உறைக்கப் போகிறது என்றாலும்சொல்லாமல் இருக்க முடியுமா சுதந்திரமான கலைஞனால்?
அதிகம் என்ன, ஒன்றிரண்டு சொற்கள் கூடத் தேவை இல்லாத கேலிச் சித்திரம் ஒன்று. மலைகளின் முகடுகளின் பின்னால் இருந்து உதிக்கும் --- Rising Sun ,Rising Son, Rising Grand son கார்ட்டூன் என்பதே அதிகம் சொற்கள் எழுதப் படாதது. எடுத்துக்காட்டுக்கு காந்தியம் என்றொரு கார்ட்டூன். காந்தியின் வழுக்கைத் தலையும் பின் கழுத்தும் பொக்கை வாய்ச் சிரிப்பும் கண்ணாடியும் காது மடல்களும் எப்படி இறுதியில் கேள்விக்குறியாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன என்று.
கலை, இலக்கிய, சமூக, அரசியல் விமர்சனத்துக்குரிய துணிச்சல், கூர்மை, தெளிவு, விசாலமான அறிவு, விவேகம், நகை, ஓவியத் திறன், சார்பற்ற நிலை யாவும் கூடி வருகிற கலைஞனே சிறந்த கேலிச் சித்திர ஓவியனாக நன்மதிப்புப் பெற இயலும் என்பதற்கு மதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
புதிது புதிதான கற்பனை, நையாண்டி, அரசியல்காரர்களின் உடல் மொழித் தேர்வு என, தனக்கெனத் தனியிடம் கொள்கிறார் கார்ட்டூனிஸ்ட் மதி.
கேலிச் சித்திரம் என்பது சும்மா சிரித்து விட்டுப் போவதல்ல. தொடர்ந்து நாம் செய்யும் அற்பத் தனங்களில் அடுத்த தினம் வரை மூழ்கிப் போவதற்கும் அல்ல. சிரிப்பைத் தாண்டிய வலி, வலி ஏற்படுத்தும் சினம், சினம் தூண்டும் செயல் என சித்தம் செய்வதற்கு. அஃதன்றி, அதனையோர் பொழுது போக்காய்க் கொள்வது சித்திரத்துக்கும் ஓவியத்துக்கும் செய்யும் நியாயமோ மரியாதையோ அல்ல.
இன்றைய அரசியலைச் சுத்தம் செய்வது என்பது கூட்டம் கூட்டமாக திரியும் வெறி நாய்கûளைத் துரத்தி வேட்டையாடிப் பிடித்து அழிப்பது போன்றது. கடித்தாலும்நோயுண்டு, உமிழ் நீரிலும் நோயுண்டு. நோய் தாக்கியதைக் காலத்தே கண்டறியாவிட்டால், நோய் தாக்கப்பட்டவன் மேலும் ஒரு வெறி நாய். யாரும் எளிதில்முனையாத, முன்வராத காரியம் இது. அருவருப்பானது அல்ல, அபாயகரமானது. "கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்! இவர்கள் கேட்க மாட்டார்கள். அப்போது வேறென்ன செய்வது? யாராவது செய்துதானே ஆக வேண்டும்?
- நாஞ்சில் நாடன்
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்